Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பண்ணையாரும் பத்மினியும் - சினிமா விமர்சனம்

ரு 'பண்ணையாரும் பத்மினி’ காரும்... அவ்வளவுதான் கதை!

தொலைபேசி, தொலைக் காட்சிப் பெட்டி என தன் கிராமத்துக்கு எதையும் அறிமுகப் படுத்தி மக்கள் பயன்பாட்டுக்கு விடும் பாசக்காரப் பண்ணையார் ஜெயப்பிரகாஷ். அவரிடம் ஒரு ஃபியட் பத்மினி கார் வந்து சேர்கிறது. ஜெயப்பிரகாஷ், அவரது மனைவி துளசி, கார் டிரைவர் விஜய் சேதுபதி என அனைவரின் பிரியத்¬யும் சம்பாதிக்கிறது பத்மினி. இந்த நிலையில் பண்ணையார் குடும்பம் அந்தக் காரைப் பிரிய வேண்டிய சந்தர்ப்பம். பண்ணையார் - பத்மினி இடையிலான அன்பு என்ன ஆனது என்பது க்ளைமாக்ஸ்!

யூ-டியூப் ஹிட், டி.வி. ஷோ விருது... எனக் கவனம் குவித்த குறும்படத்தை, திரைப்படமாக்கி இருக்கிறார் அறிமுக இயக்குநர் அருண்குமார். சிகரெட், புகையிலை, மது... என போதைச் சமாசாரங்கள் படத்தில் இல்லை. அட, படத்தில் வில்லன்கூட இல்லை. இப்படி நல்லன மட்டுமே காட்டி ஒரு படம் தந்த இயக்குநருக்கு... அன்லிமிட்டெட் அன்பு!

படத்தின் ஹீரோ... ஜெயப்பிரகாஷ். வெள்ளந்திப் பாசக்காரராக, 'எனக்கு டபுள்ஸ் ஓட்டத் தெரியாதே’, 'கியர் கம்பி இல்லைன்னா என்னடா.. வந்து தேடிக்கலாம். முதல்ல வண்டியை எடு’ என்று நிலவரம் புரியாமல் கலவரம் பண்ணும்போதும், காரைப் பார்க்கும்போதெல்லாம் துள்ளல் நடையோடு ஓடிவருவதும், தானே துடைத்து மகிழ்வதுமாக... அசத்தல். பண்ணையாரின் மனைவியாக துளசி... பக்கா. ஜெயப்பிரகாஷ§டன் இணைந்து முறைத்துக்கொள்வது, இடித்துக் கொள்வது, காதலில் நெகிழ்வது என கிளாசிக் ரொமான்ஸ் கொடுத்திருக்கிறார். (அதுவே சமயங்களில் 'ஓவர் டோஸ்’ ஆவதைத் தவிர்த்திருக்கலாம்!)

'செகண்ட் ஹீரோ’ விஜய் சேதுபதிக்கு, பண்ணையாரின் காதல் அத்தியாயத்துக்கு இடம்விட்டு, கிடைத்த இடத்தில் 'டாப் கியர்’ தட்ட வேண்டிய நெருக்கடி. ஐஸ்வர்யா மீதும், பச்சைக் கலர் பத்மினி மீதும் காதல்கொண்டு அலையும் இடங்களில் சடசடவென கியர் மாற்றி ரசிக்கவைப்பவர், ஆங்காங்கே கலகலக்கவும் வைக்கிறார்.

'பீடை’யாக வரும் பாலசரவணன்தான் படத்தின் காமெடி ஏரியாவுக்கான மொத்தக் குத்தகை. 'பட்டப்பேருதான் பீடை.. பெத்தவங்க வெச்ச பேரு பெருச்சாளி’ என்று கெத்துக் காட்டும்போது, 'அண்ணே ரொம்பப் பேசுறாய்ங்க... நான் வேணா 'நல்லா இருங்க’னு சொல்லட்டா’ என்று கொதிக்கும்போதும் அதிருது அரங்கம்!

கதை நிகழும் காலகட்டத்தில் ஏன் இத்தனை குழப்பம்? 'அண்ணாமலை’ படம், சக்திமான் சீரியல், மாட்டுவண்டி, மினி பஸ்... எனத் தாறுமாறாக எகிறுது டைம்லைன். பண்ணையார் பத்மினியை ஓட்டுவதைத் தவிர, எந்தச் சவால் சுவாரஸ்யமும் திரைக்கதையில் இல்லை. இரண்டு மணி நேரத்துக்கும் மேலாகத் திரும்பத் திரும்ப காரை ஓட்டிக்கொண்டே இருப்பது... சரியா சார்?

வருடல் பாடல்களில் வசீகரிக்கும் ஜஸ்டின் பிரபாகரனின் அறிமுக இசை, எண்பதுகளின் காலகட்ட பின்னணி இசையிலும் செம ஸ்கோர். பத்மினியின் உள்ளிருந்து, மேல் இருந்து, வெளியில் இருந்து... அந்தக் காரையும் ஒரு கதாபாத்திரமாகவே மாற்றியிருக்கிறது கோகுல் பினோய்-யின் ஒளிப்பதிவு.

சின்னக் கதை. ரொம்ப நீ...ளமான திரைக்கதை. பத்மினியில் பயணம் அழகுதான். ஆனால், அலுப்பு அதிகம்!

- விகடன் விமர்சனக் குழு

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்