Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தெகிடி - சினிமா விமர்சனம்

சூழ்ச்சி வலை விரிக்கும் வில்லன்களோடு நாயகன் ஆடும் கபடி... தெகிடி!

எம்.ஏ., கிரிமினாலஜி மாணவர் அஷோக் செல்வன். தனியார் துப்பறியும் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்கிறார். நிறுவனம் சொல்லும் நபர்கள் (சப்ஜெக்ட்) பற்றிய ஏ டு இஸட் விவரங்களைச் சேகரித்துக்கொடுக்கிறார். அப்படி ஒரு சப்ஜெக்ட் ஜனனியைச் சந்திக்கும்போது அவருக்கு காதல் துளிர்க்கிறது. ஒரு கட்டத்தில் அஷோக் சேகரித்துக்கொடுத்த சப்ஜெக்ட்கள் மர்மமாக மரணம் அடைகிறார்கள். கொலையாளி யார்? எதற்காகக் கொலை நடக்கிறது என்பது மீதிக் கதை.

இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை வைத்து நடக்கும் தில்லாலங்கடிகளை திக் திக் திகிலாகக் கொடுத்து கவனம் ஈர்க்கிறார் அறிமுக இயக்குநர் பி.ரமேஷ். ஆனால், தொடர் கொலைகள் என்பது எவ்வளவு பெரிய க்ரைம்? அதைச் செய்பவர்கள் எத்தனை உக்கிர வில்லன்களாக இருக்க வேண்டும்? ஆனால், அத்தனை பேரும் 'சுமார் வில்ல குமார்’களாக இருக்கிறார்களே?

அஷோக் செல்வனுக்கு இதில் நடிப்பில் விளையாடியிருக்க வேண்டிய கேரக்டர். டிடெக்ட்டிவ் என்றால் உம்மென்றுதான் இருக்க வேண்டுமா? ரொமான்ஸ் நேரத்தில்கூட செம சீரியஸ் முகம் காட்டுகிறார்.  

ஹீரோயின் ஜனனிக்கு அவரது பெயரைப் போலவே அத்தனை குட்டியூண்டு கேரக்டர். அட ஹீரோ, ஹீரோயின்தான் இப்படி என்றால், படத்தில் வரும் இன்ஸ்பெக்டர், நண்பன் கேரக்டர்கள் என அத்தனை பேர் முகங்களிலும் ஏன் அத்தனை இறுக்கம்?

மெதுமெதுவாக நகரும் கதையில் இழுத்துப் பிடித்து உட்காரவைப்பது வசனங்கள்தான்.       'நீ சொன்னதெல்லாம் நடக்குமானு தெரியலை, ஆனா, நான் சொன்னது நடந்திருச்சு’, 'எதிராளிகிட்ட மாட்டும்போது, அவங்க கண்ணை மட்டும் பார்த்துறக் கூடாது. அப்படிப் பார்த்தா, நம்ம முகம் அவங்க மனசுல நல்லாப் பதிஞ்சுடும்’, 'தைரியமா நாம செய்றதெல்லாம் சரியாச் செய்றதுனு அர்த்தம் கிடையாது’, 'தெரியாம நாம செஞ்ச தப்புகளைவிட, அதை மறைக்க செஞ்ச தப்புகள்தான் அதிகம்’ என படம் முழுக்க பரவும் காமெடி, காதல், க்ரைம் வசனங்கள் ஆங்காங்கே ரசிக்கவைக்கின்றன.

'சப்ஜெக்ட்கள் மரணம் அடைந்துவிட்டார்கள்’ என்று வருகிற ட்விஸ்ட் இதயத்துடிப்பை எகிறவைக்கிறது. ஆனால், முதல் கொலையின்போதே அந்த டிடெக்ட்டிவ் ஏஜென்சி மீது சந்தேகம் வந்துவிடுவதால், பின் பாதியில் வருகிற ட்விஸ்ட்கள் எல்லாம் 'அதான் தெரியுமே’ என்று டைப்பிலேயே கடந்துபோகின்றன. படத்தில் மொத்தமே 10, 15 ஆர்ட்டிஸ்ட்கள் மட்டுமே இருப்பதால், 'இவர்தான் வில்லன்’ என்று 'இங்கி பிங்கி பாங்கி’ போட்டே யூகித்துவிடலாமே பாஸ்...  

ஒவ்வொரு சீனுக்கு பெப் சேர்க்கும் நிவாஸ் கே பிரசன்னாவின் பின்னணி இசை, 'விண்மீன் விதையில்...’ பாடலில் இதம் சேர்க்கிறது. காட்சிகளின் படபடப்பை நமக்குள் கடத்துவதில் திரைக்கதையோடும் பின்னணி இசையோடும் போட்டிபோடுகிறது தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு.

'சூது விளையாட்டு’ என அர்த்தம் வருகிற 'தெகிடி’ என்ற சுத்தத் தமிழ் வார்த்தையைக் கண்டுபிடித்த முனைப்பை திரைக்கதையிலும் காட்டியிருக்கலாம்!

- விகடன் விமர்சனக் குழு

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்