Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நெடுஞ்சாலை - சினிமா விமர்சனம்

கொள்ளை, குரோதம், காதல்... இவற்றை ஜன்னல்வழிக் காட்சிகளாகக் கடத்துகிறது 'நெடுஞ்சாலை’!

சரக்கு லாரிகளில் திருடும் ஆரி-க்கும், தாபா 'ஓனர்’ ஷிவதாவுக்கும் காதல். இதனால் ஷிவதா மேல் மோகம்கொண்டு அலையும் இன்ஸ்பெக்டர் பிரசாந்த் நாராயணனுக்கும் ஆரி-க்கும் மோதல். சூழ்ச்சி, சூதுகளுக்கு மத்தியில் காதலும் காதலர்களும் என்ன ஆனார்கள் என்பதே 'நெடுஞ்சாலை’ப் பயணம்!

80-களில் தேசிய நெடுஞ்சாலைகளைப் பரபரக்க வைத்த தார்ப்பாய்த் திருட்டைப் பின்னணியாக வைத்து கதை பின்னியிருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணா. தார்ப்பாய்த் திருட்டுக் காட்சிகள் படத்தின் பவர்ப்ளே ஏரியா. ஆனால், அதை 'தொட்டுக்கா’ ஆக்கிவிட்டு, பழக்கமான திருடன்-போலீஸ் விறைப்பு முறைப்பு காட்சிகளால் திரைக்கதையைத் தொகுத்திருக்கிறார்கள்!

கண்களில் கள்ளத்தனம், உடையில் அழுக்கு, உடல் மொழியில் அலட்சியம்... என 'தார்ப்பாய் முருகன்’ கேரக்டருக்கு ஆரி செம ஃபிட். தபதபவென ஓடிவந்து லாரி மேல் லாகவமாக ஏறுவதும், 'எவன்டா இங்கே கஞ்சா குடிக்கிறது?’ என்று எகிறி, அது யார் எனத் தெரிந்ததும் அடங்குவதுமாக எதற்கும் தயாராக நிற்கிறார். நடை, உடை, கடைக்கண் பார்வை... என ஷிவதா நாயரிடம் (அறிமுகம்) கிராமத்து யட்சி வசீகரம். தாபா வாடிக்கையாளர்களை தாஜா பண்ணும்போது குறும்புக் குற்றாலமாகத் துள்ளுவதும், இன்ஸ்பெக்டர் சீண்டும்போது ஒரு நொடி கலங்கி, அடுத்த நொடியே வெளுத்தெடுப்பதும், ஆரியுடன் காதலில் நெக்குருகுவதுமாக... பொண்ணுக்கு நடிப்பும் பிரைட்!

'கஞ்சா போலீஸ்’ பிரசாந்த் நாராயணன், பல காட்சிகளில் கஞ்சாவை இழுத்தபடி பார்வையால் மிரட்டும் இடங்களில்... செம! புரோக்கர் கேரக்டர் நச் ஸ்கெட்ச். போலீஸைத் திட்டிக்கொண்டே அவர்களுக்கு சலாம் போடுவது, 'நான் எங்கே அவனை வெச்சிருக்கேன்? என் சம்சாரம்தான்..!’ என்று புலம்பவது என சகுனி புரோக்கர் கேரக்டரில் புகுந்து விளையாடியிருக்கிறார் சலீம்குமார்.

பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சரக்கு ஆட்டோ, தாபா கடை ஆகியவற்றில் மிளிர்கிறது சந்தானத்தின் கலை இயக்கம். இருளில், விளக்கில், நெருப்பில் பயணிக்கும் கேமரா மூலம், ஒவ்வொரு காட்சிக்கும் ஓவிய நேர்த்தி கொடுத்திருக்கிறது ராஜவேல் ஒளிவீரனின் ஒளிப்பதிவு. 'தாமிரபரணி’ மெலடியில் மனம் வருடும் சத்யாவின் இசை, 'வாராண்டி வாராண்டி...’ பின்னணி இசையில் திடுக் அதிர்ச்சி கொடுக்கிறது.

இன்ஸ்பெக்டர்- ஆரி இடையிலான 'ஆடு-புலி’ ஆட்டத்தில் எந்த விறுவிறுப்பும் இல்லை. சிக்கல் நீங்கி ஆரி-ஷிவதா இணைந்தபோதே படம் முடிந்துவிடுகிறது. ஆனால், அதற்குப் பிறகு வம்படியாக ஓர் அதிர்ச்சி க்ளைமாக்ஸ்... அதன் பிறகும் ஒரு நெகிழ்ச்சி க்ளைமாக்ஸ்..!

புரோக்கர் சலீம் உண்டாக்கும் திகீர் ட்விஸ்ட், கரன்சி லாரியைக் கண்டுபிடிக்கும் உத்தி... என மிகச் சில நிமிடங்களுக்கே தீப்பிடிக்கிறது திரைக்கதை.

அந்த 'டாப் கியர் டெம்போ’விலேயே முழுப் படமும் பயணித்திருந்தால், செம ரேஸ் சேஸாக இருந்திருக்கும் இந்த 'நெடுஞ்சாலை’!

- விகடன் விமர்சனக் குழு

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்