Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நான் சிகப்பு மனிதன் - சினிமா விமர்சனம்

தூக்க வியாதி தரும் துக்கம் காரணமாகப் பழிக்குப் பழி வாங்கக் கிளம்பும் ரத்தச் சிகப்பு மனிதன்!

அதிர்ச்சி, மகிழ்ச்சி, கோபம், மோகம்... என எந்த அதீத உணர்ச்சி தாக்கினாலும் சட்டெனத் தூங்கிவிடும் 'நார்கோலெப்ஸி’ வியாதியால் பாதிக்கப்பட்ட விஷாலை, ஒரு கண்காட்சிப் பொருளாகப் பார்க்கிறது சமூகம். அவர் மேல் அனுதாபம் கொள்கிறார் லட்சுமி மேனன். அதுவே பின்னர் காதலாகி கசிந்துருகி கர்ப்பம் வரை செல்கிறது. ஒரு திகீர் திருப்பத்தில் நான்கு பேர் லட்சுமி மேனனைச் சிதைக்க, தூக்கக் குறிப்பு களைக்கொண்டே விஷால் அவர்களைப் பழி வாங்கினாரா என்பதே படம்!

இடம், பொருள், ஏவல் பார்க்காமல் தடால் தடால் என தூங்கிவிழும் ஹீரோவின் பரிதாப வாழ்க்கையை 'திக் திடுக்’ திரைப்படம் ஆக்கியிருக்கிறார் இயக்குநர் திரு. விஷாலின் பத்து சிம்பிள் ஆசைகளில் பல ஆசைகளை லட்சுமி மேனன் நிறைவேற்ற, கடைசி ஆசையான 'தட்டிக்கேட்கணும்’ என்பது மட்டும் விதிவசம் விஷால் கைவசமாவது... ஸ்க்ரீன்ப்ளேயின் பவர் ப்ளே!

அப்பாவி தூங்குமூஞ்சியாக செம ஸ்கெட்ச் அடித்திருக்கிறார் விஷால். 'என்னைக் காதலிக்கிற பொண்ணு நிச்சயம் அழகிதான்’ என்று சுய பச்சாதாபம் கொள்வது, லட்சுமி மேனனை விட்டு விலக முடியாமல் தவிப்பது, கடைசி நிமிடங்கள் மட்டும் ஆக்ஷனில் அதிரடிப்பது... என ஆல் ரவுண்ட் அசத்தல். பாந்தமாக, சாந்தமாக, இரக்கமாக, தீர்க்கமாக என 'தெளிவான தேவதை’யாக வசீகரிக்கிறார் லட்சுமி மேனன். தன்னைப் பெண் பார்க்க வருபவரிடம் 'செக்ஸ்னா என்ன?’ என்று கேட்பதும், 'குழந்தை அவசியம்’ என்ற அப்பாவின் நிபந்தனையை நிறைவேற்ற விஷாலின் ப்ளஸ் பாயின்ட்டைக் கண்டுபிடிப்பதும், மழை இரவு அலறல்களிலும்... ஆசம் லட்சுமி. (லட்சுமி இதில் 'இச்சு மீ’!)

பழகிய அம்மா கேரக்டரில் 'கேர்ள் ஃப்ரெண்டா?’ எனக் குறுகுறுக்கும் சரண்யா, அலட்டல் மிரட்டல் இனியா, 'நீ என் இடத்துல இருந்தா என்ன பண்ணுவ?’ என கெத்து காட்டும் ஜெயப்பிரகாஷ், 'பாரேன், இவனுக்குக்கூட ஜோடி கிடைச்சிருச்சு’ என ஜஸ்ட் லைக் தட் கலாய்க்கும் ஜெகன், முடி-தாடிக்கு இடையே திகில் பார்வை வீசும் வில்லன் சுந்தர் ராமு என, படத்தின் ஒவ்வொரு கேரக்டரும் அழுத்தமான 'சிவப்பு முத்திரை’ பதிக்கிறார்கள்!

செம பில்டப்போடு முடியும் முன்பாதி காரணமாக 'யானை வெடி’ வில்லனை எதிர்பார்த்தால், 'இவர்தாங்க அவர்’ என்று 'சீனி வெடி’ வெடிக்கிறது பின்பாதி. விநோத வியாதி, சுவாரஸ்யக் காதல் அத்தியாயம், திடுக் திருப்பம் என ஒரு நிமிடத்தையும் வீணாக்காத முன்பாதி திரைக்கதை, பின்பாதியில் ஏன் அத்தனை தடுமாறுகிறது? முகம் தெரியாத சேகரை விஷால் கண்டுபிடிக்கும் புத்திசாலித்தனத்தை, இன்னும் பவர்ஃபுல் ஃப்ளாஷ்பேக் பிடிப்பதிலும் காட்டியிருக்கலாம்.

விஷால் தோள் மீதே பயணிக்கும் உணர்வைக் கடத்தியிருக்கிறது ரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவு. விறுவிறு திருப்பத்தை எதிர்பார்க்கும் சமயம் தடக்கென முளைக்கும் பாடல்கள்... அலுப்பு. ஆனால், பின்னணியில் திகில் ட்விஸ்ட் ஏற்றுகிறது ஜி.வி.பிரகாஷின் இசை!

பழகிய பழிக்குப்பழி கதையில் தூக்க வியாதி ட்விஸ்ட்டுடன் ஆக்ஷன் ட்ரீட் தந்த விதத்தில்... ரசிக்கவைக்கிறான் சிகப்பு மனிதன்!

- விகடன் விமர்சனக் குழு

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்