Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முண்டாசுப்பட்டி - சினிமா விமர்சனம்

போட்டோ பிடித்தால் பொட்டென்று போய்விடுவோம் எனப் பயப்படும் 'முண்டாசுப்பட்டி’ கிராமத்துக்குள் ஒரு போட்டோக்காரன் புகுந்தால்..?!  

'ஸ்ரீ ஹாலிவுட் ஸ்டுடியோ’வின் விஷ்ணு, காளி வெங்கட் இருவரும், இறந்துபோன பெரியவரைப் படம்பிடிக்க முண்டாசுப்பட்டிக்குச் செல்கிறார்கள். பெரியவரை எடுத்த போட்டோ குளறுபடி காரணமாக, 'தண்டனைக் கைதி’யாக ஊருக்குள் சிக்கிக்கொள்கிறார்கள். இந்த நிலையில் முண்டாசுப்பட்டி மக்கள் வணங்கும் விண்கல் 'வானமுனி’ காணாமல்போகிறது. அது கிடைத்ததா... விஷ்ணு, காளி வெங்கட் இருவரும் கிராம மக்களிடம் இருந்து தப்பித்தார்களா... என்பது வயிறு வலிக்கச் சிரிக்கவைக்கும் கிளைமாக்ஸ்!

ஹிட் குறும்படத்தை செம கலகல சினிமாவாக மாற்றிய அறிமுக இயக்குநர் ராம் குமாருக்கு ஆயிரம் கிளிக் லைக்ஸ்! முண்டாசுப்பட்டி மக்களின் மூடநம்பிக்கைக்குக் காரணமான கொள்ளை நோயும் வானமுனியும் முதல் 10 நிமிடங்களில் சூடு கிளப்பும் பாஸ்பரஸ் எக்ஸ்பிரஸ்!    

நம்பி நம்பி ஏமாறும் ஊர்த் தலைவர், ஊரையே ஏமாற்றும் போலிச் சாமியார், பரஸ்பரம் தன் ஜோடியைப் படம்பிடிக்கச் சொல்லி 'ஸ்கெட்ச்’ போடும் தம்பதியினர், ஆண்மை விருத்தி பூனை சூப் வில்லன்... என கிராமத்தில் வலம்வரும் பல கேரக்டர்கள் அம்புட்டு சுவாரஸ்யம்!

படத்தின் ஹீரோ, ஹீரோயின், வில்லனுக்கு எல்லாம் சம்பிரதாய நடிப்புதான். சின்னச் சின்னக் கேரக்டர்களில்கூட சிக்கிமுக்கி கிளப்பும் கலாட்டா கதாபாத்திரங்கள்தான் முண்டாசுப்பட்டியில் ஈர்க்கிறார்கள். அதில் முக்கியமானவர், முனிஸ்காந்த்தாக வரும் ராமதாஸ்! 'ஏனுங்க கோபி... பாரதிராசா படம்னா பாடையில போற வேஷத்துலகூட நடிப்பேனுங்க’ என்று பம்மிப் பதுங்கி வாய்ப்பு கேட்பது, 'என் வாழ்க்கையில விளக்கேத்திட்டீங்களேடா’ என அழுது புரள்வது, 'போட்டோ மட்டும் என்னது. ஆனா, ரத்தப் பொரியல் சித்தப்பனுக்கா?’ எனப் பொருமுவது, ரத்தக்காட்டேரி பள்ளிக்கூடத்துக்குப் போகச் சொல்லும்போது, 'டேய் நாளைக்கு நான் ஷூட்டிங் போகலைன்னா, கன்டினியூட்டி மிஸ் ஆகிரும். அப்படின்னா உங்களுக்கு என்னன்னுகூட தெரியாதே...’ எனப் புலம்புவது, செம மாஸ். தமிழ் சினிமாவுக்கு வெல்கம் பாஸ்!

'இவர் பெரிய நேரு பரம்பரை... எரிச்ச சாம்பலை இந்தியா முழுக்கத் தூவுறாங்க’  என ஹஸ்கி குரலில் கவுன்டர் கொடுத்தபடி ஒட்டுமொத்தக் கிராமத்தையும் காளி வெங்கட் சமாளிக்கும்போது, அலறுகிறது தியேட்டர். காலில் விழுந்தாலே 'தீர்க்காயுசா இரு’ என உளறும் பழக்கதோஷ சாமியார் கேரக்டர், அட்டூழிய அட்ராசிட்டி.

பெல்பாட்டம் பேன்ட், பெரிய காலர் சட்டை, டபுள் கண்ணாடி, மக்கர் புல்லட்... என விஷ்ணு கேரக்டரும் அதற்கான கெட்டப்பும் பஹுத் அச்சா. ஆனால், படம் நெடுக வந்தாலும் உடன் நடிப்பவர்களே ஸ்கோர் அடிக்கிறார்கள். அகலமான கண்களால் முழித்து முழித்துப் பார்ப்பது மட்டுமே நந்திதாவின் டியூட்டி!

''பார்ரா, இந்த ஊர்ல ரத்தக்காட்டேரியுங்கூட படிச்சிருக்கு'', ''நம்ம சுப்ரமணியா இது..? பாத்தா அடையாளமே தெரியலை'', ''துருப்பிடிச்சத் துப்பாக்கிக்குத் தோட்டா எதுக்கு?'' என படம் முழுக்க சரவெடி காமெடி வசனங்கள். ஆனந்த்ராஜ் துப்பாக்கியால் மிரட்டும்போது, அதை நகர்த்திவிட்டு சூப் கிண்ணம் வைக்கும் வேலையாள், 'போட்டோ குளறுபடி’ இடைவேளைத் திருப்பம், கிளைமாக்ஸ் சேஸ் ரேஸ், இமயமலை ரிட்டர்ன் சாமியாரைக்கொண்டு 'சுபம்’ போடுவது என சீரான இடைவேளையில் 'பவர் ப்ளே’ வெடிக்கிறது திரைக்கதை!    

முண்டாசுப்பட்டியின் சந்துபொந்துகள், ஆட்டுமந்தை, சுடுகாடு, கோயில் எனக் குட்டிக் கிராமத்திலும் பெருந்தடம் பதிக்கிறது பி.வி.ஷங்கரின் பளிச் ஒளிப்பதிவு. ஷான் ரோல்டனின் பின்னணி இசை படத்தின் பெரும் பலம். 'ராசா மகராசா’ பாடல்... ஹம்மிங் மெலடி. 80-களின் மனிதர்களையும் கிராமத்தையும் உறுத்தாமல் கொண்டுவந்திருக்கிறது கோபி ஆனந்த்தின் கலை இயக்கம்.

யூகிக்க முடிந்த குறும்பட கிளைமாக்ஸை, 'அம்புட்டு நீளமாகவா இழுப்பது?’ ஆரம்பமும் இறுதியும் செட் ஆகிவிட்டதாலோ என்னவோ, மத்திய அத்தியாயங்களில் 'அட்டேன்ஷனில்’ நிற்கிறது கதை. அழுத்தம் இல்லாத விஷ்ணு -நத்திதா காதல் காட்சிகளும், 'டைம்பாஸ்’  கிணறு வெட்டும் காட்சிகளும் ஏன் சார்?

ஆனாலும், 'போட்டோ பிடிச்சா ஆயுள் குறையும்’ என்கிற மூடநம்பிக்கையை மட்டுமே லீடாக வைத்து, இரண்டரை மணி நேரம் சிரிக்கவைத்த இயக்குநருக்கும், அவர் அணியினருக்கும் 'முண்டாசு’ கட்டலாம்!

- விகடன் விமர்சனக் குழு

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்