Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

சைவம் - சினிமா விமர்சனம்

ஒரு சேவல் என்ன செய்யும்? ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் அன்பால் இணைத்து, 'சைவம்’ ஆக்கும்!

ஊர்த் திருவிழாவுக்கு ஒன்று கூடுகிறார்கள் ஊர்ப் பெரியவர் நாசர் குடும்பத்தினர். ஒரு திடீர் அசம்பாவிதம், காவல் தெய்வம் கருப்பனுக்குச் செய்யவேண்டிய நேர்த்திக்கடனை நினைவுபடுத்துகிறது. கருப்பனுக்கு நேர்ந்துவிட்ட சேவலைப் பலிகொடுக்க முடிவு செய்கிறார் நாசர். ஆனால், சேவல் மிஸ்ஸிங். சேவல் கிடைத்ததா... நேர்த்திக்கடன் நிறைவேறியதா... என்பது கிளைமாக்ஸ்!

ஒரு மெகா குடும்பம், ஒரு மெகா மெகா வீடு, ஒரு குட்டி சேவல்... படத்தில் மூன்றே விஷயங்கள். அதற்குள்ளேயே  கூட்டுக் குடும்ப பலம், விவசாயத்தின் நலம், தலைமுறை இடைவெளி, டீனேஜ் நேசம், ஒரு சிறுமியின் பாசம், கிராமங்களின் அழிவு... என எக்கச்சக்க விஷயங்களை பேக் செய்திருக்கிறார் இயக்குநர் விஜய். படத்தில் நாயகன், நாயகி, ரொமான்ஸ், வயலென்ஸ்.. என சினிமா மெனுவுக்கான எந்தச் சங்கதிகளும் இல்லை. ஆனால், சிலாகிக்க இவ்வளவு இருந்தும், படம் ஒற்றைச் சேவலின் பஞ்சாரத்துக்குள்ளேயே சுற்றுகிறது!

அத்தனை துறுதுறுப்பாகப் பார்த்துப் பழகிய சாரா, இதில் ஆச்சர்ய அண்டர்ப்ளே! பார்வையிலேயே உணர்வுகளைக் கடத்துவது, ஷ்ரவனிடம் ஆங்கிலத்தில் பொருமுவது, பிறகு அவனுக்கு சல்யூட் அடித்து பம்முவது, 'சேவலை யார் காப்பாத்துவா?’ என்று ஏக்கமாகக் கேட்பது என... சின்னச் சின்ன இடைவெளிகளிலும் பிரகாச மின்னல். மூக்கு விடைக்க, உதடு பிதுக்கி 'சரவணன் இல்லை.. ஐ யம் ஷ்ரவன்’ என்று கோபத்தில் கொந்தளிக்கும் ரே பால். 'இது என் வைஃபை... இது ஐயாவோட வைஃபை’ என்று மனைவிகளை அறிமுகப்படுத்தும் ஜார்ஜ், 'வெத்தலை வேணுமா?’ என்று சாமியாரிடம் கேட்டுக் கொடுத்துவிட்டு சீரியஸாகக் கலாய்க்கும் மாலதி, 'அத்தை... அத்தை...’ என்று நச்சரித்து, ஆர்வக்கோளாறில் பாய்ந்தோடும் பாஷா... என அனைவருமே பந்தி இலைப் பாயசப் பரவசம்! ஆனால், அதிர்ந்து பேசாத அதட்டல் பார்வை, சேவலைக் காணாத வேதனைப் பார்வை... இவற்றைத் தவிர நாசருக்கு வேறு வேலையே இல்லை.

'பாப்பா’ சேவலுக்கும் பாப்பா சாராவுக்குமான அன்பை, ஆரம்பத்தில் அழகழகாகக் காட்சிப்படுத்தித் தொடங்கியிருந்தால்... இன்னும் படம் நெஞ்சுக்கு நெருக்கமாகி இருக்கும். அது மிஸ்ஸிங் என்பதால், ஒரு சேவலுக்கு இத்தனை அக்கப்போரா எனும் கேள்வியே எழுகிறது.

சேவல் பற்றிய மர்மம் தெரிந்த பின்னரும் நாசருக்காக 'பக்... பக்’ என அனைவரும் சேவலைத் தேடி அலையும் அத்தியாயம்கூட ஓ.கே. ஆனால், சேவலைக் காணாமல் வீதிவீதியாக, வீடுவீடாகத் தேடி, மைல் நீளத்துக்கு நீளும் காட்சிகள்... ஊப்ஸ். எந்தப் பிரச்னைக்கும் வீட்டின் கடைக்குட்டியான சாராவிடம் தீர்வு இருப்பது... தமிழ் சினிமாவின் 'ஜீனியஸ் ஜூனியர்’கள் லாஜிக்போல!

ஜி.வி.பிரகாஷ் இசை 'அழகு அழகு...’ பாடல் மட்டும் முணுமுணுக்கவைக்கிறது. சந்து, பொந்து, வயல், தொழுவம்... என இண்டு இடுக்குகளில் இருள், ஒளி சேர்க்கை காட்டுகிறது நீரவ் ஷா கேமரா.  

'அன்-லிமிடெட்’ பக்பக்ஸைக் குறைத்து, 'லிமிடெட்’ வெஜ் விருந்தாகப் பரிமாறியிருந்தால், 'சைவம்’ ரொம்பவே ருசித்திருக்கும்!

- விகடன் விமர்சனக் குழு

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement