Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அரிமா நம்பி - சினிமா விமர்சனம்

தோழி கடத்தப்படுகிறாள்... அவளைக் கண்டுபிடிக்க உதவும் போலீஸ் கொல்லப்படுகிறார்... தோழியின் அப்பாவும் கொல்லப்பட... பல சூழ்ச்சி வலைகள் சிக்கி இறுக்கும்போது, ஹீரோ 'சிங்கம்’ போல சீறிக் கிளம்பினால்... 'அரிமா நம்பி’!

டேட்டிங் சேட்டை, டுமீல் வேட்டை, இறுதியில் சரியும் வில்லன் கோட்டை... என விறுவிறு கிரைம் சம்பவங்கள்தான். அதை ராக் பப், ரெட் வைன், ஸ்பை கேமரா, ஜி.பி.ஆர்.எஸ்., லைவ் ஸ்ட்ரீமிங், சேட்டிலைட்... என யூ-டியூப், ஃபேஸ்புக் யுகத்துக்கு ஏற்ப திடுக் ட்விஸ்ட்களோடு சினிமா ஆக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஆனந்த் ஷங்கர்.

விக்ரம் பிரபு-ப்ரியா ஆனந்த் இடையிலான அறிமுக ஈர்ப்பு அத்தியாயங்கள் மட்டும் 'ஸ்லோமோஷனில்’ கடக்க, அதன் பிறகு திகுதிகு வேகத்தில் தடதடக்கிறது படம். தலைகால் புரியாத அசம்பாவிதங்களில், சின்னச் சின்ன லீடு பிடித்து, விவகாரத்தின் பின்னணியை விக்ரம் - ப்ரியா கண்டுபிடிப்பது வரை... செம ரேஸ் சேஸ்! 'பொண்ணு கோவாவுல இருக்குறதா சொன்னாரு.. ஆனா, மொபைலுக்குக் கூப்பிட்டா 'ஸ்விட்ச்டு ஆஃப்’னு தமிழ்ல வந்துச்சே’ என்று எம்.எஸ்.பாஸ்கர் நூல் பிடிப்பது முதல் கிரெடிட் கார்டு, செல்போன், ஏ.டி.எம்... என விக்ரம் பிரபு போலீஸ் படையை அலைக்கழிப்பது வரை... த்ரில் விளையாட்டு!

விக்ரம் பிரபு... செம மேன்லி! 'என்ன நடக்குது?’ என்று குழம்பி, 'யாருக்காக நடக்கிறது?’ என்று தெளிந்து, 'இனி இழக்க எதுவும் இல்லை’ என்று திருப்பி அடிக்கும் ஆக்ஷன் அவதாரம் அசத்தல். ஆனால், ப்ரியாவுடனான ரொமான்ஸ் காட்சிகளில்... 'இவன் ஒரே மாதிரி’ என்கிறாரே!

'ரிப்பீட்’ ரெட் வைன் சாத்தும் பார்ட்டி ஏஞ்சலாக ப்ரியா... ஸ்வீட் அண்ட் க்யூட். கிடைக்கும் சந்தர்ப்பங்களில் பதற்ற ரியாக்ஷன் கொடுத்துவிட்டு, ஓடிக்கொண்டே இருக்கிறார். இந்திய அளவில் செல்வாக்கான நபருக்கான ஆளுமை, அதிகாரத்தை விரல் அசைவு, விழித் துடிப்புகளில் அட்டகாசமாக வெளிப்படுத்துகிறார் ஜே.டி.சக்கரவர்த்தி.

சேனல் அதிபர் கொலை, பேங்க் கொள்ளை, நகருக்குள் தொடர் கொலைகள், சேட்டிலைட் முடக்கம், மத்திய அமைச்சரையே மடக்கி அமுக்கி மிக நீண்ட நேரலை... போன்ற தொடர் திருப்பங்களால் தியேட்டருக்குள் இருக்கும் வரை யோசிக்க ஸ்பேஸ் கொடுக்கவே இல்லை திரைக்கதை. ஆனால் அப்புறம் யோசித்தால், எல்லாமே ஹைடெக் போங்கு சாரே! 'ரவுடிக்குச் சுடத் தெரியும்; கத்தியால குத்தத் தெரியும். ஆனா, உனக்கு சண்டை போடத் தெரியும். திருப்பி அடி!’ போல மிகச் சொற்பமாக ஈர்க்கின்றன வசனங்கள். பரபர பன்ச் சேர்த்திருக்க வேண்டாமா?

'டிரம்ஸ்’ சிவமணியின் அறிமுக இசை, பின்னணி இசையில் அதிரடிக்கிறது. ஆர்டி.ராஜசேகரின் ஒளிப்பதிவில்... ஆக்ஷன் அனல்.

அவ்வளவு அதிகாரம் படைத்த மத்திய மந்திரி லோக்கல் தாதாக்களை நம்பி அசைன்மென்ட் கொடுப்பாரா? ஒற்றை பட்டன் கேமராவை வைத்துக்கொண்டு தேசம் முழுவதும் லைவ் டெலிகாஸ்ட் செய்வது சாத்தியமா?

இப்படியான சந்தேகங்களை படம் முடியும் வரை எழுப்பவிடாத 'விறுவிறு வியூக’ திரைக்கதையே, இந்த அரிமாவைக் கம்பீரமாகக் கர்ஜிக்கவைக்கிறது!

- விகடன் விமர்சனக் குழு

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்