அஞ்சான் - சினிமா விமர்சனம் | anjaan, suriya, samantha, lingusami,அஞ்சான், சூர்யா, சமந்தா, லிங்குசாமி, வித்யூத் ஜம்வால்

வெளியிடப்பட்ட நேரம்: 12:42 (21/08/2014)

கடைசி தொடர்பு:12:42 (21/08/2014)

அஞ்சான் - சினிமா விமர்சனம்

மும்பையின் 'பாட்ஷா’ நண்பர்கள் இருவர். அந்தத் 'தளபதி’கள் இருவரையும் வில்லன் போட்டுத்தள்ள, பழிவாங்கக் கிளம்புகிறான் மாற்றுத்திறனாளி 'நாயகன்’. அந்த 'அஞ்சான்’ வென்றானா?

மும்பை, தாதா, டிஷ்யூம், டுமீல், சதக் சதக், நடுநடுவே காதலியோடு பச்சக், பச்சக்... தமிழ் சினிமாவின் மும்பை தாதா ஃபார்முலாவில், இந்த முறை சூர்யா!

டபுள் ஆக்ட் சூர்யா, செக்ஸி சமந்தா, மிரட்டல் மனோஜ் பாஜ்பாய்... என டாண் சினிமாவுக்கான பில்டிங் ஸ்ட்ராங்க். ஆனால், 'திரைக்கதை’ எனும் பேஸ்மென்ட் இத்தனை பலவீனமாகவா இருக்க வேண்டும்!?

ரஃப் அண்ட் டஃப் ராஜு பாய், சாஃப்ட் அண்ட் ஸ்வீட் கிருஷ்ணா என இரண்டு கெட்டப்களில் வித்தியாசம் காட்டுகிறார் சூர்யா. அதிலும் முறுக்கிய மீசை, சிலுப்பிய முடி, ரஃப் ட்ரிம் தாடி... என ராஜு பாய் தோற்றம், செம டிரெண்டி. ஆனால், அழுத்தம் இல்லாத சம்பவங்கள் 'ராஜு பாய்’க்கு பெரிதாக வேலை வைக்கவில்லை! ஒற்றை பட்டன் சட்டையும் ஸ்விம் சூட் நடனமுமாக 'சமத்துப் பொண்ணு’ இமேஜைக் கவர்ச்சியில் கரைத்துவிட்டார் சமந்தா. ஆனால், அத்தனை எனர்ஜியும் தமிழ் சினிமாவின் லூஸுப் பெண் கேரக்டருக்குத்தானா?! 'செகண்ட் ஹீரோ’வான வித்யூத் ஜம்வால் 'டப்பிங் படம்’ கணக்காக உதடு ஒட்டாமல் பேசுவது யார் கண்ணிலும் படவில்லையாஜி?

சமந்தா, சூர்யா, வித்யூத் ஆடும் இந்தி அந்தாக்ஷரி, பிரம்மானந்தத்தின் பிளேடு கச்சேரி, சூர்யாவின் டூப் அவதார்... திக், திடுக் எனக் கடக்க வேண்டிய ஆக்ஷன் சினிமாவின் காமாசோமா அத்தியாயங்கள்!

சூர்யா சுட்டதும் மனோஜ் பாஜ்பாய் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு பிறகு எழுந்து நிற்கும் மர்மம், 'இது ரிக்கார்டிங் வீடியோ இல்லை. நிஜமாவே அவன் மேலே வந்துட்டு இருக்கான்’ என்று அடியாட்கள் பதறும் இடம்... என மிகச் இடங்களில் மட்டும் லிங்குசாமி டச்!

வார்த்தைகளிலேயே சூர்யா-வித்யூத் இடையிலான நட்புப் படலத்தை, அதுவும் இடைவேளைக்குப் பிறகு, விவரிப்பதால்... 'நண்பர்கள்’ மீது எந்தக் கரிசனமும் தோன்றவே இல்லை. 'வில்லன் எவ்ளோ பெரிய டான்? அவனை வெட்டி உதாருக்குத் தூக்கி, பேன்ட்டைக் கழட்டி டவுசரோட திருப்பி அனுப்பினா, சும்மாவிடுவானா? அவனை ஏன் தூக்கணும்? அப்புறம் 'குத்திட்டான்... கொன்னுட்டான்’னு ஏன் புலம்பணும்!’ - இந்த சைக்காலஜி கேள்வி உறுத்திக்கொண்டே இருப்பதால், சூர்யாவின் சாகசத்தில் எந்தப் பிரமிப்பும் ஏற்படவே இல்லை.

'ராஜு பாய் அதைப் பண்ணினார், இதைப் பண்ணினார்’ என்று படா பில்டப் கொடுக்கிறார்கள். ஆனால், ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்டுவிட்டு வந்ததுபோல சூர்யா பல் குச்சியும் வாயுமாக இருப்பதைத் தவிர, அவருக்கு எந்த வேலையும் வைக்கவில்லை திரைக்கதை!

யுவன் ஷங்கர் ராஜா இசை 'பேங் பேங்..’ பாடலிலும் பின்னணியிலும் முடிந்த வரை ஆக்ஷன் டெம்போ ஏற்றுகிறது.

முதல் பாதி ட்விஸ்ட்டிலேயே படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. ஆனால், அதன் பிறகும் நீளும் இரண்டாம் பாதி... அந்த மேஜிக் மிஸ்ஸிங்!

- விகடன் விமர்சனக் குழு

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்