கதை திரைக்கதை வசனம் இயக்கம் - சினிமா விமர்சனம் | kathai thiraikkathai vasanam iyakkam, ktvi, parthiban, கதை திரைக்கதை வசனம் இயக்கம், பார்த்திபன், அகிலா கிஷோர், சந்தோஷ், தம்பி ராமையா

வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (21/08/2014)

கடைசி தொடர்பு:12:45 (21/08/2014)

கதை திரைக்கதை வசனம் இயக்கம் - சினிமா விமர்சனம்

ஒரு சினிமாவுக்கு 'கதை’ பிடிக்கும் கதை!

ஒவ்வொரு பிரபலத்துக்கும் 'அட’ என ஒன்-மினிட் சினிமா ஓட்டியது தொடங்கி, 'நீ என்னப்பா சொல்றது... நானே வரப்போற சீனைச் சொல்லிடுறேன்!’ என்று படத்துக்குள் 'டீஸர்’ ஓட்டியது வரை... ஜூனியர் இயக்குநர்களுக்கு செம டஃப் கொடுத்திருக்கிறார் 'கால் நூற்றாண்டு’ சீனியர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன்!

'நியூ வேவ் சினிமா’ ஃபார்மெட்டில் புத்தம் புதிய கதை பிடிக்க, 'சீனியர்’ தம்பி ராமையா உள்ளிட்ட உதவி இயக்குநர்கள் குழுவினருடன் தன் வீட்டிலேயே கதை விவாதத்தில் ஈடுபடுகிறார் இயக்குநர் சந்தோஷ் (அறிமுகம்). அது தங்கள் காதல் திருமணத்தின் நெருக்கத்தையும் அந்தரங்கத்தையும் பாதிக்கிறது என ஆதங்கப்படுகிறார் சந்தோஷின் மனைவி அகிலா (அறிமுகம்). உப்புமா தயாரிப்பாளர் ஒருவர் மூலம் கதை விவாதத்துக்காக சந்தோஷ§க்கு ஓர் இடம் கிடைக்க, தொடர்ந்து ஒரு கொலைப்பழி விழ, அடுத்த இடியாக மனைவி பிரிந்து செல்ல, சந்தோஷிடம் கதை கேட்ட தயாரிப்பாளர் முடிவை, 'ஆர்.ஏ.சி’யில் வைத்திருக்க... சுருக் நறுக் முடிச்சுகளை அவிழ்க்கும் கிளைமாக்ஸ்!

அட... டீக்கடை முதல் ஃபேஸ்புக் வரையிலான சினிமாப் பேச்சுக்களையே செம கிச்சுகிச்சு சினிமா ஆக்கிவிட்டார் பார்த்திபன். வீட்டைச் சுத்தம் செய்யும் பெண், தண்ணீர் கேன் போடும் நபர் என ஆரம்பித்து ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்-அப் இளைஞர்கள் வரை பலதரப்பட்டவர்களின் சினிமா பார்வையை, புரிதலை, எதிர்பார்ப்பை அப்-டு-டேட் செய்திருக்கிறது படம்.

'தேவர், ஒரே கதையை வெச்சுக்கிட்டு ஒம்போது படம் பண்ணுவார். ஆனா எல்லாத்துக்கும் மியூசிக் ஒண்ணுதான். டடன்டன்... டடன்டன்...’, 'தாலின்னா சின்னக் குழந்தைக்குக்கூட தெரியும். ஆனா, 'சின்னத்தம்பி’ படத்துல பிரபுவுக்குத் தெரியாது. எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு விஷயத்தை ஒருத்தனுக்குத் தெரியாதுனு வெச்சு ஹிட்டு கொடுத்தார்யா பி.வாசு!’ எனப் போகிறபோக்கில் தமிழ் சினிமாவின் வரலாறை, தகராறை நையாண்டியோடு வைக்கிறது பார்த்திபனின் வசனங்கள்.

40 ஆண்டு தமிழ் சினிமாவைக் கரைத்து குடித்த, சினிமாவில் தோற்ற, புதிய அசிஸ்டென்ட் டைரக்டர்களிடம் அவமானப்படுகிற தம்பி ராமையா கதாபாத்திரத்தின் ஸ்கெட்ச்... மாஸ்டர் ஸ்ட்ரோக்! 'நாங்க 40 வருஷமா ஒரு ஃபார்மட் வெச்சிருப்போம். நேத்து முளைச்சு கேமராவைத் தூக்கிட்டு வந்திருவீங்க!, சினிமானா என்னானு தெரியுமாடா? குறும்படம் எடுக்குற குரங்குப் பசங்களா!’ என்றெல்லாம் சிலரின் பொருமலைச் சுட்டிக்காட்டுவதுபோல உறுமுகிறது அந்த கேரக்டர். மகள் திருமணம் தள்ளிப்போய் தற்கொலை முயற்சியில் ஈடுபட, 'நாளைக்கு டைரக்டர் ஆகிருவோம்னு நம்பி நம்பி 58 வயசு ஆச்சு. வேற வேலை பார்த்திருந்தா இந்நேரம் ரிடையர்மென்ட்டே கொடுத்திருப்பாங்க. பெத்த பொண்ணுக்கு ஒரு கல்யாணம் பண்ண வக்கில்லை. சினிமாலாம் வேணாம்டா’ என்று ஆதங்கத்தோடு அவர் குமுறும் இடம்... சென்டிமென்ட் பட்டாசு!

'மிச்சம் இருக்குற 20 நிமிஷம் நீ எனக்கு வேணும்’ என்று திமிறிக் கொஞ்சுவதும், 'நீ சினிமாவுல ஜெயிச்ச பிறகு சேர்ந்து வாழ்வோம்’ எனக் குமுறிப் பொருமுவதுமாக... அகிலா... ஆசம்! தாடியும், இறுக்கமான முகமுமாகப் போராடும் சந்தோஷின் நடிப்பு... அந்த கேரக்டருக்குப் போதும் ரகம்.

வடையைக் கீழே போட்டுவிட்டு, 'இந்தா நீ கேட்ட உழுந்த வடை... கீழே உழுந்த வடை’ என்று சீனியர் தம்பி ராமையாவைச் சீண்டும், 'டைரக்டர் இன்டைரக்டா ஏதோ பண்றாருப்பா’ என்று கலாய்க்கும் திருடன் ப்ளஸ் உதவி இயக்குநர் விஜய் ராம் நச் கேரக்டர். 'நாமெல்லாம் சேர்ந்து இந்தப் படத்தை லஞ்ச் பண்றோம்’, 'ஃபாரின் சிகரெட் டப்பாக்குள்ள லோக்கல் பீடியெல்லாம் ஒரு சோவுக்கு’, 'கிளைமாக்ஸ்ல படம் முடியுதா... சூப்பருப்பா!’ என்று தப்பு இங்கிலீஷ் பேசும் மொக்கைத் தயாரிப்பாளராக வரும் முருகன்... அருமை அய்யா!

'பிரியாணி ஸ்பெஷலா.. பழைய சோறு ஸ்பெஷலா?’ 'பிரியாணி சாப்பிட ஒரு மணி நேரம் காத்திருந்தா போதும்... ஆனா பழைய சோறு சாப்பிட ஒரு நாள் காத்திருக்கணும். அதனால பழைய சோறுதான் ஸ்பெஷல்’ போன்ற 'பார்த்தி பிராண்ட்’ மாத்தி யோசி வசனங்களை ரசிக்கலாம்.

உப்புமா தயாரிப்பாளர் சொல்லும் ரணகள போலீஸ் ஸ்டோரி, இடைவேளையின் கேன்டீன் லாபி கமென்ட்களை தியேட்டரிலேயே ஓட்டுவது, '***’ வார்த்தையின்போது திருக்குறள் ஸ்லைடு போடுவது... என ஒவ்வோர் அடுக்கிலும் ஒரு துடுக்கு!

ஆனால், முன்பாதியில் அவ்வளவு தூரம் விவாதித்த விதிகளுக்கு எதிராக சந்தோஷின் கதை, திரைக்கதை அமைகிறதே... ஏன் சார்? முடிவு தெரிந்த அத்தியாயத்தை நோக்கிய பின்பாதி பயணத்திலும், ஆர்யா - அமலா பாலின் இன்டியூஷன் காதலிலும் சுவாரஸ்யம் இல்லை!

பெரும்பாலும் ஒற்றை அறைக்குள் பயணிக்கும் படத்தை ஜிக்ஜாக் ஒளிப்பதிவில் சுவாரஸ்யப்படுத்துகிறது ராஜரத்தினத்தின் ஒளிப்பதிவு. சரத் இசையில் 'பெண்மேகம் போலவே...’, அல்ஃபோன்ஸ் ஜோசப் இசையில் 'காத்தில் கதையிருக்கு...’ பாடல்களுக்கு லைக்ஸ். சத்யாவின் பின்னணி இசை படத்தின் திருப்பங்களுக்கு ஏற்ப இசைத்து அசத்துகிறது.

ருத்ரைய்யாவின் மேதாவிலாசம் குறித்தும், ஏவி.மெய்யப்ப செட்டியார் தெரியாத 'நாளைய இயக்குநர்கள்’ குறித்தும் ஒரே படத்தில் அமளிதுமளியாகப் பதிவுசெய்த 'பேக் டு ஃபார்ம்’ பார்த்திபனிடம் கேட்கலாம்... ஒரு ரீஎன்ட்ரி ட்ரீட்!

- விகடன் விமர்சனக் குழு

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்