Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பொறியாளன் - சினிமா விமர்சனம்

ரியல் எஸ்டேட் புரோக்கரால் ஏமாற்றப்படும் ஹீரோ, சிக்கலில் இருந்து மீள வகுக்கும்  'பொறியாளன்’ வியூகமே... படம்!

சிவில் இன்ஜினீயர் ஹரீஷ் கல்யாண், கட்டுமான நிறுவனம் ஆரம்பிக்கிறார். முதல் புராஜெக்ட்டுக்கு இரண்டு கோடி தேவைப்படுகிறது. கந்துவட்டி தாதா அச்சுதகுமார் சிறையில் இருக்கும்  சமயம், அவருடைய பணம் ஹரீஷ் கைக்கு வருகிறது. ஆனால், ஹரீஷ் மோசடி புரோக்கரிடம் பணத்தைப் பறிகொடுக்க, தாதா அச்சுதகுமாரிடம் சிக்கிய ஹரிஷின் நிலை என்ன? திக்திக் திருப்பங்களுக்குப் பதில் சொல்கிறது பின்பாதி!

மோசடி நிலப் பதிவுகள், கந்துவட்டி கொலைகள்... என ரியல் எஸ்டேட் உலகின் கறுப்புப் பக்கங்களை பக்கா சினிமா ஆக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் தாணுகுமார். சிவில் இன்ஜினீயரிங் கனவு, ஏரியா ஏஞ்சலுடன் காதல், நிறுவன உரிமையாளருடன் பஞ்சாயத்து... என நிதானமாக நகரும் கதை, கந்துவட்டி தாதா அத்தியாயம் தொட்டதும் கியர் தட்டுகிறது. 'பணம் போச்சு... தாதா வந்துட்டான்... வீட்டுப் பெண்களை நோட்டம் விட்டுப் போயிருக்கான்’ என்று எல்லாம் பி.பி ஏற்றுகிறார்கள். 'அடடா...’ என செமத்தியான ஆக்ஷன் 'சமோசா’ எதிர்பார்த்தால், ஹீரோ எல்லோரையும் நம்பி, 'காமாசோமா’ என்று சுற்றிக்கொண்டே இருக்கிறார்.  

' 'சென்னை’னா உங்களுக்கு என்ன ஞாபகம் வரும்... எல்.ஐ.சி-தானே? அப்படி ஒரு ஊருக்கே அடையாளம் கொடுக்கிறவங்க சிவில் இன்ஜினீயர்தானே!’ என்று தன் 'சொற்ப சம்பளம்’ வேலை குறித்த பெருமிதமும், காதலியை 'அண்ணனாக’ அதட்டி பின்னர் பிரியம் பொழிவதும், ஏமாந்த பிறகு கலங்கி பின்னர் வெறிகொண்டு அலைவதுமாக... இயல்பாக ஈர்க்கிறார் ஹரீஷ் கல்யாண். அறிமுக நாயகி ரக்ஷிதாவுக்கு சின்ன கேரக்டர். ஆனால், அத்தனை பெரிய கண்களால்  லைக்ஸ் குவிக்கிறார். பணத்தைத் திருப்பிக்கொடுக்க அவகாசம் கேட்டு வரும் ஹரீஷையும் அஜய்ராஜையும் பார்த்து, இருக்கையில் இருந்து படாரென எழுந்து உதற வைக்கும் இடத்தில்... முகம்கூடக் காட்டாமல் பயமுறுத்துகிறார் வில்லன் அச்சுதகுமார்.

'ஹீரோ வாங்கியது மோசடி நிலம்’ என்ற ஒரு வரியை நிலைநிறுத்த மிக நீளமாகப் பயணிக்கிறது முன்பாதி. இன்ஜினீயரிங் பட்டதாரி, கட்டுமான நிறுவனத்தில்  பணிபுரிந்த அனுபவமிக்க ஹீரோ, வாங்கும் நிலத்துக்கு வில்லங்கம் போட்டுப் பார்க்க மாட்டாரா, மோசடிப் பேர்வழி சென்ற விலாசத்தைக் கொடுப்பதோடு போலீஸ் ஒதுங்கிக்கொள்ளுமா..., எனப் பின்பாதி முழுக்க கேள்விச் செங்கல்களை அடுக்குகிறது திரைக்கதை. அதிலும் 'சைவ பட்சினி’ புரோக்கரை கோவா வரை துரத்திச் செல்வது, அவர் பீர் பாட்டிலுக்குப் பயந்து உண்மை சொல்வது எல்லாம்... ஜுஜுலிப்பா!

அடுத்து என்ன நடக்குமோ என்ற டென்ஷனை ஏற்றும் 'பொறியாளன்’, அதைத் தீர்க்கும் 'ஸ்கெட்ச்களிலும்’ பொறிபறக்க வைத்திருக்கலாம்!

- விகடன் விமர்சனக் குழு

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்