அமர காவியம் - சினிமா விமர்சனம்

காதலும், காதல் நிமித்தமும், பிரிதலும் அதன் நிமித்தம் உயிர் துறத்தலுமான 'எய்ட்டீஸ்’ கால காதல் காவியம்!  

நண்பனின் காதலைச் சொல்லப்போன சந்தர்ப்பத்தில் மியா (அறிமுகம்) மீது காதல் கொள்கிறார் சத்யா. பலப்பல காரணங்கள் சொல்லி இருவரையும் பிரிக்கிறார்கள் பெற்றோர்கள். மன அழுத்தத்துக்கு ஆளாகிறார் சத்யா. காதலர்கள் மீண்டும் சந்திக்கும்போது,   கோபதாபங்கள் வெடிக்கின்றன. அடுத்தடுத்து சத்யா எடுக்கும் அதிர்ச்சி முடிவுகளே... படம்!

தகவல் தொடர்பே இல்லாத 80-களில், அன்றைய காதலர்களின் ரகசியக் கொண்டாட்டங்களையும், பிரிவு வேதனைகளையும் மென்மையாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் ஜீவா சங்கர். காதலுக்கு நண்பர்கள், பெற்றோர் மட்டுமே எதிரி அல்ல... தகவல் தொடர்பின்மை யும்தான் என்பதைச் சொன்ன விதம் கிளாஸ்.

'ஹீரோ’ சத்யா... அலட்டிக்கொள்ளாமல் நடித்திருக்கிறார். காதலியைப் பார்க்கும்போது எத்தனை சந்தோஷ மின்னல்கள் முகத்தில் தெறிக்க வேண்டும்!? சின்ன சிரிப்பைத் தவிர, மற்ற உணர்வுகள் வருவேனா என்கிறது. பெட்டர் லக் நெக்ஸ்ட் ஃபிலிம் சத்யா!  

நாயகி மியாவுக்கு படம்  அட்டகாச கிரீட்டிங் கார்டு! குறும்பு கொப்பளிக்கும் கண்கள், க்யூட் ஸ்வீட் ரியாக்ஷன்கள் எனக் கவிதை வாசிக்குது பொண்ணு.  

மெதுமெதுவாக நகரும் காட்சிகள், திருப்பமே இல்லாத திரைக்கதை எனப் படம் முற்பாதியில்  ஸ்லோமோஷன் சினிமா. காதலர்கள் இடையிலான சிக்கலுக்கு அவர்களின் 'பொசஸிவ்’ குணமும்கூட காரணமாக இருக்கலாம் என்பதை பிற்பாதி வசனங்களிலும் காட்சிகளிலும் இயல்பாக விவரித்திருக்கிறார்கள். 'அவன் உன்னைக் காதலிக்கிறான்னா, நீ ஏன் நாம காதலிக்கிறதை இன்னும் அவன்கிட்ட சொல்லலை? நீ அமைதியா இருக்கிறதைப் பார்த்துட்டு நீயும் காதலிக்கிறேனு தப்பாப் புரிஞ்சுப்பான்ல’ என சத்யா, மியாவிடம் குமுறும் இடம் ஓர் உதாரணம்.  

இசைக்கருவிகளை காதல் கருவிகளாக மாற்றியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான். 'தாகம் தீர...’, 'மௌனம் பேசும்...’ பாடல்களிலும்  படம் நெடுகிலும் பின்னணி இசையில் அத்தனை காதல். ஜீவா சங்கரின் ஒளிப்பதிவில் ஊட்டி ஜில்லிப்பு... நம் விழிகளில்!

80-களின் காதல் கதையைக் களமாகக் கொண்டவர்கள், இன்னும் மனதுக்கு நெருக்கமான காட்சிகளைப் பிடித்திருக்க வேண்டாமா? எவ்வளவு எக்ஸ்ட்ரீம் போனாலும், காதலி சொல்வதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது கூடத் தெரியாமலா ஒரு காதலன் இருப்பான்? அமரகாவியம் என்று டைட்டில் வைத்ததற்காகவே, அப்படி ஒரு திகீர் கிளைமாக்ஸ்போல!

'எய்ட்டீஸ்’ இளைஞர்களுக்கு படம் 'அமரகாவியமா’க இருக்கலாம்!

- விகடன் விமர்சனக் குழு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!