ஆள் - சினிமா விமர்சனம் | ஆள், ஆனந் கிருஷ்ணா, விதார்த், அமீர், என்.எஸ்.உதயகுமார், விடியல் ராஜூ, தீவிரவாதம், தேசப்பற்று, மதப் பிரச்னை, ஆள் விமர்சனம், ஆள் சினிமா விமர்சனம், சினிமா விமர்சனம் ஆள்

வெளியிடப்பட்ட நேரம்: 10:55 (25/09/2014)

கடைசி தொடர்பு:10:55 (25/09/2014)

ஆள் - சினிமா விமர்சனம்

கிரைம் நெட்வொர்க்கால் ஓர் 'ஆள்’ கட்டுப்படுத்தப்படும் ஆட்டம்!

கல்லூரிப் பேராசிரியர் விதார்த் (படத்தில் அமீர்) தன் காதலியின் குடும்பத்தினரைச் சந்திக்க சென்னை வருகிறார். வந்த இடத்தில் அவரது லக்கேஜ் பறிபோக, ஒரு செல்போன் கையில் திணிக்கப்படுகிறது. அதில் வரும் அழைப்பை ஏற்கிறார். அப்போது  தான், தன் உடமைகள், குடும்பம்... என அனைத்தும் வேறு ஒருவன் கட்டுப்பாட்டில் இருப்பது தெரிய வருகிறது. ஏன், எதற்கு, என்ன நடக்கிறது என்பதுதான் படம்!

'அமீர்’ என்ற இந்திப் படத்தை தமிழ் பேச வைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஆனந் கிருஷ்ணா. தீவிரவாதம் - தேசப்பற்று இடையில் ஒரு மதம் எவ்வளவு பெரிய பிரச்னையாக இருக்கிறது என மிகக் கனமான கதைக் களம். சர்ச்சைக்குரிய மதப் பின்னணி இருந்தாலும், முடிந்தவரை பேலன்ஸ் பண்ணியிருக்கிறார் இயக்குநர். மிகவும் சின்னக் கதைக்கு, அதைவிட சின்ன திரைக்கதை அமைத்துவிட்டார்கள். இதனால் இரண்டே மணி நேர த்ரில் சினிமா, அத்தனை மெதுவாகப் பயணிக்கிறது!  

செம சீரியஸ் கதையை, தனி ஆளாகச் சுமக்க வேண்டிய பொறுப்பு விதார்த்துக்கு. முகம் தெரியாத ஒருவன், எங்கேயோ அமர்ந்துகொண்டு குடும்பத்தைக் கடத்திவைத்து மிரட்டி, தன்னைக் கட்டுப்படுத்தினால் எத்தனை கோபம், வன்மம் இயலாமை வெடிக்க வேண்டும்! இறுக்கமான உணர்வுடனே கடந்துபோகிறார். கிளைமாக்ஸ் பதற்றத்தில் மட்டும் உயிரோட்டம்.

'இந்த கேம்ல ரெண்டு ரூல் இருக்கு. ஒண்ணு, நான் சொல்றதைச் செய்யணும். இன்னொண்ணு, நான் என்ன சொன்னாலும் செய்யணும்!’ என விதார்த்தைக் கட்டுப்படுத்தும்  வில்லனாக விடியல் ராஜு செம மிரட்டல்.

செல்போன் கைக்கு வந்ததும் சென்னை வீதிகளில் சுற்றித்திரிவதைத் தவிர, வேறு எந்த வேலையும் இல்லை விதார்த்துக்கு. சந்துபொந்துகளில் கோட் - சூட்டுடன் நடக்கும் சுவாரஸ்யம் தவிர, கிளைமாக்ஸ் வரை எந்தத் திகீர் திருப்பமும் இல்லை!

படத்தின் இரண்டாவது ஹீரோ என்.எஸ்.உதயகுமாரின் கேண்டிட் ஒளிப்பதிவு. சென்னையை அத்தனை அழுக்கோடும், அழகோடும், இயல்போடும் படம் பிடித்திருப்பது... வெல்டன்.  

தானே விருப்பப்பட்டு வருபவனைச் சேர்த்துக் கொள்வது, அல்லது தயங்கும் ஒருவனை மூளைச்சலவை செய்து மாற்றுவதுதானே தீவிரவாதம். தேசத்தின் மீது எந்தக் கோபமும் இல்லாத, தேசத்தைக் காதலிக்கும் ஒருவனை மதத்தைக் காரணம் காட்டி எப்படி தீவிரவாதியாக மாற்ற முடியும்? இப்படி ஒரு கேள்வி எழுப்பினால், படத்தில் பதில் இல்லை. சொல்லப்போனால், படமே இல்லை!

அத்தனை துல்லிய நெட்வொர்க் வைத்திருக்கும் வில்லன், ஒரு சூட்கேஸைக் கடத்த ஏன் விதார்த்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? தீவிரவாதச் செயல்கள் ரொம்பவே ரகசியமானது. மிகச் சிலர் மூலமே திட்டமிட்டு அரங்கேற்றப்படுவது. ஆனால், சாம்பிராணி போடுபவர், ரூம் பாய் முதற்கொண்டு பாலியல் தொழிலாளி வரை அத்தனை பேரும்  தீவிரவாத வலைப்பின்னல் கண்ணிகளாக இருக்க முடியுமா? ஏகப்பட்ட கேள்விகள். ஆனால், 'ஏன் இவ்வளவு அலையவிட்டு அலைக்கழிக்கிறார்கள்?’ என்ற அந்த ஒரு சஸ்பென்ஸ்... இந்த ஆளைக் காப்பாற்றுகிறது!

- விகடன் விமர்சனக் குழு

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close