Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மெட்ராஸ் - சினிமா விமர்சனம்

திகாரத்துக்கு அடையாளமாக இருக்கும் ஒற்றைச் சுவருக்காக நடக்கும் ரத்த யுத்தம்... 'மெட்ராஸ்’!

வட சென்னையின் ஒரு ஹவுசிங் போர்டு குடியிருப்பில் உள்ள சுவரை யார் பிடிப்பது என்ற போட்டி நிலவுகிறது. மறைந்த லோக்கல் அரசியல்புள்ளியின் உருவப்படம் பிரமாண்டமாக வரையப்பட்ட சுவரை, எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்பது கார்த்தியின் நண்பன் கலையரசனின் கனவு. அதகள ரணகளத்தில் கலையரசன் கொல்லப்படுகிறார். நண்பனின் மரணத்துக்கு பழிவாங்க கார்த்தி அலையும்போது, சதிவலையின் விஷ வேர் தெரியவருகிறது. தலைமுறைகளாக ரத்தம்பூசிய அந்த ஒற்றைச் சுவர் என்ன ஆனது என்பது திக்திக் கிளைமாக்ஸ்.

விலக்கப்பட்டவர்களாக, விளிம்பில் வாழும் சென்னையின் பூர்வீகக் குடிமக்களை, அவர்களை ஆட்டுவிக்கும் அரசியலை அசலாக, அழுத்தமாக, அட்டகாசமாகப் பதிவுசெய்திருப்பதற்கு... சலாம் ரஞ்சித்!

ஹீரோயிஸத்தைத் தள்ளிவைத்துவிட்டு கிட்டத்தட்ட செகண்டு ஹீரோவோ என நினைக்கும் அளவுக்கு முதல் பாதியில் அடக்கி வாசித்திருக்கிறார் கார்த்தி. தனக்குப் பார்க்கும் பெண்களை அம்மா நிராகரிக்கும்போது எரிச்சல், கேத்ரின் தெரஸாவிடம் வழிசல், நண்பனுக்காகத்  தெறிக்கும் கோபம், ஒவ்வொரு முறையும் ஆத்திரம் உச்சிக்கு ஏறி அவசரப்பட்டு செய்துவிட்டு பின் பயப்படுவது என நீண்ட நாட்களுக்குப் பிறகு... 'வெல்கம் பேக்’ கார்த்தி. 'அப்போ அது உண்மை இல்லியா?’ என கார்த்தியைக் கலாய்ப்பது, 'திட்டினா... போயிடுவியா?’ என எகிறுவது, நண்பன் இறந்த சோகத்திலும் கோபத்திலும் கார்த்தி திசைமாறிவிடுவாரோ எனக்  கலங்குவது... அறிமுகத்திலே அசத்தல்... கேத்ரின் தெரஸா அலெக்சாண்டர்!

படத்தின் முதல் பாதி நாயகன், கலையரசன்தான். அரசியல் புரிதலோ, சமூகக் கல்வியோ இல்லாவிட்டாலும் தன் மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற துடிப்புமிக்க தலித் இளைஞன் பாத்திரத்தை அத்தனை இயல்பாக, அழகாகக் கொண்டுவந்திருக்கிறார். சற்றே மனநிலை பிசகிய ஜானியாக  நடித்திருக்கும் ஹரி, 'வரம் வாங்கி உன்னைப் பெத்தேன்டா’ என அழுது புலம்பும் கார்த்தியின் அம்மா ரமா, அன்புவின் மனைவியாக வரும் ரித்விகா, வில்லங்க வில்லன் மாரியாக வரும் வினோத் என வட சென்னை வார்ப்புகள் ஒவ்வொருவரும்.

ஹவுசிங் போர்டு படி இடுக்குகளோ, முட்டுச்சந்துகளோ... கதாபாத்திரங்களின் தோளில் தவ்விப் பயணித்து பரபரக்கிறது முரளியின் ஒளிப்பதிவு. உமா தேவியின் வரிகளில் கஜல் பாடும் 'நான் நீ நாம் வாழவே...’, கபிலனின் வரிகளில் காதல் சொல்லும் 'ஆகாயம் தீப்பிடிக்க...’ பாடல்களுக்கு மெல்லிசை தரும் சந்தோஷ் நாராயணன், 'கானா’ பாலாவின் தடதடக்கும் 'இறந்திடவா...’ பாடலுக்கு வன்மையும் சோகமும் பாய்ச்சுகிறார்.  

முதல் பாதியில் அரசியல் ஆட்டத்தில் நகரும் படம், இரண்டாம் பாதியில் தனிப்பட்ட பழிவாங்குதல் எனச் சுணங்கி நிற்கிறது. கட்டக்கடைசியில் கிண்டர்கார்டன் குழந்தைகளுக்கு 'சமூக அரசியல்’ பாடம் எடுப்பதெல்லாம்... லுல்லுலாயி!

என்னதான் சொல்லேன்... வட சென்னையை ரத்தமும் சதையுமாகப் பதிவுசெய்த வகையில் இந்த மெட்ராஸ் செம கெத்து!

- விகடன் விமர்சனக் குழு

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்