நீ நான் நிழல்- விமர்சனம்! | நீ நான் நிழல், விமர்சனம், சரத்குமார்.

வெளியிடப்பட்ட நேரம்: 11:33 (21/10/2014)

கடைசி தொடர்பு:11:33 (21/10/2014)

நீ நான் நிழல்- விமர்சனம்!

 

காதலிக்கு களங்கம் விளைவித்தவர்களைக் காதலன் பழிவாங்கும் கதைதான் 'நீ நான் நிழல்'! 

மலேசியாவில் வாழும் டீன் ஏஜ் பெண் இஷிதா.  இவருடன் ஃபேஸ்புக்  ஐ.டி.யில் தொடர்ந்து சாட் செய்யும் ஐந்து இளைஞர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகிறார்கள். இதற்கான காரணம் தெரியாமல் போலீஸ் குழம்புகிறது. இஷிதாவைக் கண்டுபிடித்தால் கொலைக்கான காரணம் தெரிந்துவிடும் என்று இஷிதாவைத் தேடுகிறது. ஆனால், ஒரு மாதத்துக்கு முன்பாகவே இஷிதா தற்கொலை செய்துகொள்கிறார். அதே சமயத்தில் இஷிதாவின் ஃபேஸ்புக் ஆக்டிவிட்டி தொடர்கிறது. கொலைகள் தொடர்ந்து நடக்கின்றன. இஷிதா இறந்ததும் உண்மைதான். ஆனால், இஷிதாவின் ஃபேஸ்புக்கை யார் கையாள்வது? கொலையாளி யார்? எதற்காக கொலைகள் நடக்கின்றன என்பதுதான் மீதிக்கதை. 

அறிமுக இயக்குநர் ஜான் ராபின்சனின் வித்தியாசமான முயற்சி இது. ஃபேஸ்புக், சாட்டிங், வெப் கேமரா மூலம் சமூகத்தில் நிகழும் சீரழிவுகளை அழுத்தமாகப் பதிவு செய்த இயக்குநர் ஜான் ராபின்சனைப் பாராட்டலாம். 

'நான் ஒன்னும் சின்னப் பொண்ணு இல்ல" எனக் குழந்தைத்தனத்தோடு சிணுங்கும் ஆஷா பிளாக் கேரக்டரில் இஷிதா ரசிக்க வைக்கிறார். சில இடங்களில் க்யூட் எக்ஸ்பிரஷன்களில் ஈர்க்கும் இஷிதா, தன் வயதை அதிகப்படுத்திச் சொல்வது, அன்புக்காக ஏங்குவது, தப்பான நபரிடம் சிக்கிக் கொள்வது என... தனக்கு நடந்த கொடூரங்களை ஒவ்வொன்றாக விவரிக்கும்போது பரிதாபத்தை அள்ளுகிறார்.  

ரோஹித்தாக நடித்திருக்கும் அர்ஜூன் லால் நல்வரவு. இசைக்காக எடுக்கும் முயற்சிகள், முகம் தெரியாத பெண்ணுடன் சாட்டிங் செய்வதில் தெறிக்கும் உற்சாகம், இஷிதாவைத் தேடி மலேசியா புறப்படும் தருணம், இஷிதாவை மிஸ் பண்ணியதும் கலங்குவதும், பிறகு வெடிப்பதுமாக  நன்றாக நடித்திருக்கிறார். 

ஒட்டு தாடியுடன் அசிஸ்டண்ட் போலீஸ் கமிஷ்னராக சரத்குமார் ஓ.கே. ஆனால், நடிப்பில் எந்த மிடுக்கும், கம்பீரமும் இல்லாமல் வந்துபோகிறார். தன் 13 வயது மகளை நினைத்து பதறும்போது மட்டும் அப்பாவாக பாஸ்மார்க் வாங்குகிறார். எம்.எஸ்.பாஸ்கர், பிளாக் பாண்டி, மனோஜ் கே.ஜெயன், தேவன் ஆகியோர் பொருத்தமான தேர்வு. 

பாடல்கள் சுமார் ரகம்தான். பின்னணி இசையில் இம்சையை ஏற்படுத்துகிறார் ஜெசின் ஜார்ஜ். மலேசியா, கோயம்புத்தூர் தவிர்த்து லேப்டாப், செல்போன், கார் என்றே பயணித்தாலும் நஸீரின் கேமிரா எந்த அலுப்பையும் தரவில்லை. 

ஒரு த்ரில்லர் தொனியில் பட்டென்று சொல்ல வேண்டிய படம் திரைக்கதை சறுக்கலால் பயங்கர குழப்பத்தோடு காதல் கதையாகவே நகர்கிறது. அர்ஜூன் லால் அடிக்கடி ரத்தம் பார்த்துப் பதறுவதும், கையில் ரத்தம் சொட்டி அதிருவதும் ஏன்? பேய் பட எஃபெக்டை இந்தப் படத்தில் கொடுத்ததற்கான எந்த லாஜிக்கும், விளக்கமும் படத்தில் இல்லை. சரத்குமார் கொலையாளியைத் தேடிக்கொண்டே இருக்கிறார். அப்போதுதான் அர்ஜூன் லால் மலேசியா புறப்படுகிறார். அப்படி என்றால் அதற்கு முன் என்ன நடந்தது? எந்த டைம் ஃபிரேமும் இல்லாமல், லாஜிக் இடிக்கிறதே சாரே? 

ஒரு குடும்பத்தில் பெண் குழந்தைகளை எவ்வளவு கவனத்துடனும், பாசத்துடனும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதையும், சமூகவலை தளங்களின் இன்னொரு குரூரமான முகத்தைக் காட்டிய விதத்திலும் படம் கவனிக்க வைக்கிறது. எச்சரிக்கை உணர்வைப் பதிவு செய்ததற்காக 'நீ நான் நிழல்' படத்தை வரவேற்கலாம்!ந

க.நாகப்பன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close