பூஜை - சினிமா விமர்சனம் | பூஜை - சினிமா விமர்சனம் , பூஜை, விஷால், ஸ்ருதி ஹாசன், ஹரி, அருவா, துப்பாக்கி, அடியாள்

வெளியிடப்பட்ட நேரம்: 15:39 (05/11/2014)

கடைசி தொடர்பு:15:39 (05/11/2014)

பூஜை - சினிமா விமர்சனம்

ஸ்கார்ப்பியோ துரத்தல், அரிவாள் சீவல், வில்லன் விரட்டல், முஷ்டி முறுக்கல் என அதே 'ஹரிபரி ஹரி’ திரைக்கதையோடு ஒரு சினிமா. இந்த முறை அரிவாள் தூக்கியிருப்பது: விஷால், ஸ்பாட்: கோவை, பெயர்: 'பூஜை’... அவ்வளவே வித்தியாசம்!

கோயில் அறங்காவலர் போர்வையில் கூலிப்படையை வைத்து கொலைத் தொழில் செய்யும் முகேஷ் திவாரி, 'யதார்த்தமாக’  விஷாலுடன் மோத, அது பெரும் பகையாக மூள... பிறகு என்ன, அடிதடி சரவெடிதான்!

'சிங்கம்’ துப்பாக்கி, 'வேல்’ குடும்ப சென்டிமென்ட், 'தாமிரபரணி’ அருவாள் என பழைய மசாலாவில் கூகுள் மேப், யூடியூப் அப்லோடு, பீகாரி வில்லன், கூலிப் படை ஸ்கெட்ச் என சமீப டிரெண்டு சேர்த்திருக்கிறார் இயக்குநர் ஹரி. கடமுடவென சுழலும் கேமரா, கணக்கிட முடியாத ஷாட்கள், செவுள் கிழிக்கும் சவடால் வசனங்கள்... என படம் முழுக்க 'பிளட் பிரஷர்’ எகிறவைக்கிறார்கள். 'என்ன இவ்ளோ நேரமா பனை மரம் ஒண்ணும் சாயலையே?’ என நினைக்கும்போது, சரியாக ஒரு கார் பறந்து வந்து ஒரு பனையை முறிக்கிறது!    

விஷால் படத்தில் நடித்திருக்கிறார் என்பதைவிட, 'அடித்திருக்கிறார்’. நெகுநெகு உயரத்துடன் ஓங்கி உயர்ந்த முஷ்டியால் வில்லன்களை அடிக்கும்போது, நிஜமாகவே பொறி பறக்கிறது. ஆனால், படம் முழுக்க பொறி மட்டுமே பறந்துகொண்டிருக்கிறது. ஹரி படத்தின் நாயகி 'மாடர்ன் மகாலட்சுமி’தானே. இதில் ஸ்ருதி அப்படி வருகிறார். டூயட்களில் மட்டும் அள்ளு கிளப்புகிறார்!

சூரி, பாண்டி, இமான் கூட்டணி ஆரம்பத்தில் செம கடி. போதையில் சலம்பி அடிவாங்கி, பிறகு எதுவுமே நடக்காததுபோல, 'அப்புறம் பங்காளி... நல்லா இருக்கியா? உடம்பைப் பார்த்துக்கோ’ என சூரி உதார்விடுவது... கெத்து! சத்யராஜ், ராதிகா, ஜெயப்பிரகாஷ், கௌசல்யா, அபிநயா என பல பலே நடிகர்கள். ஆனால், படத்தின் 'பில்லர்’களாக இல்லாமல், 'ஸ்பேஸ் ஃபில்லர்’களாக வந்துபோகிறார்கள்.

மூன்று அடுக்கு கூலிப் படை அசைன்மென்ட், விஷால், வில்லனை வெளுக்கும் வீடியோவை இணையத்தில் பார்த்து பாட்னாவில் இருந்து கிளம்பிவரும் இளைஞன்... என சில இடங்களில் மட்டுமே விறுவிறு ட்விஸ்ட். மற்ற சமயங்களில் திகீர், பகீர், படீரெனத் தீப்பிடித்தபடியே கிடக்கிறது திரைக்கதை. அதிலும், 'நல்ல குடும்பத்துல பிறந்த நீயே இப்படி இருக்குறேன்னா.. என் தாத்தன் ஒரு மொள்ளைமாரி, என் அப்பன் ஒரு முடிச்சவிக்கி. அப்ப நான் எப்படி இருப்பேன்?’ என வில்லன் அடிக்கும் பன்ச்... அடிச்சுக்கவே முடியாது; அடிச்சுக்கவே முடியாது! ஒளிப்பதிவு, பாடல்கள், எடிட்டிங் என எல்லாமே 'டூ மினிட்ஸ் ஃபாஸ்ட் ஃபுட்’ போல பரபரக்கின்றன.  

படம் எக்ஸ்பிரஸ் வேகத்தில் பயணிக்க வேண்டியதுதான். ஆனால், அதற்காக அவசர அவசரமாக காமெடி பண்ணி சிரித்.. காதலித்.... வில்லன் கும்பலை அடித்... மாறி மாறி சவால் விட்...

ஏம்ம்பா... ஏன் நீங்க இப்படியே பண்ணிட்டு இருக்கீங்க?!

- விகடன் விமர்சனக் குழு

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்