Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“என்னை அறிந்தால்” படம் எப்படி?

ஆடியோ வடிவில் கட்டுரையை கேட்க: https://soundcloud.com/vikatan/vikatan_ennai-arinthal-vimarsanam 

‘காக்க காக்க’ பார்த்திருக்கீங்களா? ‘வேட்டையாடு விளையாடு’ பார்த்திருக்கீங்களா? ‘வாரணம் ஆயிரம்’...? பார்க்கலையா?, அப்போ ‘என்னை அறிந்தால்’ பாருங்க. எல்லாப் படத்தில் இருந்தும் குட்டிக்குட்டியாப் பார்க்கலாம். ஒருவேளை மேலே சொன்ன எல்லாப் படங்களையும் நீங்க பார்த்திருந்தாலும், அதெல்லாம் சேர்த்து ஒரு படமா பண்ணினா எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்கிறதுக்காக ‘என்னை அறிந்தால்’ பார்க்கலாம். அஸ் யூஷுவல் கௌதம் வாசுதேவ் மேனனின் போலீஸ் ஸ்டோரி படம்.

‘காக்க காக்க’வில் இருந்து போலீஸ் & கேங்ஸ்டர் மோதல், ‘வேட்டையாடு விளையாடு’வில் இருந்து நண்பனின் மகளைக் கடத்திப் போனவனைப் பற்றிய தேடல், டைவர்ஸ் ஆன பெண்ணுடன் கோடு தாண்டாத காதல், ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் வர்ற அன்பான அப்பா, மனசு விரக்தியாகறப்போ தூரதேசத்தில போய் அலையற வாழ்க்கை இதையெல்லாம் ஒரு கிளாஸ்ல போட்டுக் கலக்கி, அதில் அஜித்தை முக்கி எடுத்தா ‘என்னை அறிந்தால்’.

கதை நாம பல படங்களில் பார்த்ததா இருந்தாலும் கௌதம் மேனன் அதைச் சொல்லியிருக்கிறவிதமும் ஸ்டைலும்தான் படத்தைத் தூக்கி நிறுத்துது. குறிப்பா, அஜித்துக்கான ஹீரோயிஸ பில்டப்களைக் கதையோட்டத்திலேயே வெச்சிருக்கார். அஜித் படத்தில நின்னாக் கைதட்டுறாங்க. நடந்தா கைதட்டறாங்க. அவர் தலைமுடி வெளுப்பா இருந்தாலும் கைதட்டறாங்க, கறுப்பா இருந்தாலும் கைதட்டறாங்க. காக்கி யூனிபார்ம் போட்டாலும் கைதட்டல், ஷார்ட்ஸ் போட்டுவந்தாலும் கைதட்டல். ஆனா, ரொம்பகாலமா கோட்டும் கூலிங்கிளாஸும் போட்டுக்கிட்டு நீண்டதூர நடைபயணம் போயிக்கிட்டிருந்த அஜித், இந்தப் படத்தில் வெவ்வெறு கெட்டப்கள், வெவ்வேறு எமோஷன்ஸ்னு அழகா நடிச்சிருக்கார். த்ரிஷாவோட இழப்பைத் தாங்கமுடியாம தடுமாறுறது, பொறுப்பான அப்பாவா மாறி மகளைக் கண்ணும் கருத்துமாப் பாதுகாக்கிறது, பொறுப்பான போலீஸ்காரரா விறைப்பும் முறைப்பும் காட்டுறது, த்ரிஷாவைக் கொன்னத யார், அவங்க எப்படி செத்தாங்கங்கிறது தெரிஞ்சதும் உடைஞ்சு அழுகிறதுமா நல்லா நடிச்சிருக்கார் அஜித். அதிலும் ஹீரோ அஜித்துக்கும் வில்லன் அருண்விஜய்க்கும் இடையில் ‘இன்னும் நட்பு இருக்கா, இல்லையா?‘னு புரியாத ஓர் உறவு... வசனங்கள், நடிப்பு வழியா கச்சிதமா வந்திருக்கு.

அஜித்துக்கு அடுத்த இடம் அருண்விஜய். சில படங்களில்தான் வில்லன் ஸ்கோர் பண்றதுக்கான வாய்ப்பு இருக்கு. இந்தப் படத்தில் அருண்விஜய்க்கு எக்கச்சக்கமா இருக்கு. ‘மெல்லிய கோட்டுக்கு அந்தப்பக்கம் எப்பவோ நான் போயிட்டேன். நான் நினைச்சாக்கூட கோட்டுக்கு இந்தப் பக்கம் வரமுடியாது‘னு அவர் சொல்றது முக்கியமான இடம்.

அனுஷ்காவா, த்ரிஷாவானு பார்த்தா த்ரிஷாவுக்குத்தான் நடிக்கிறதுக்கான வாய்ப்பு. அஜித்துடனான ரொமான்ஸ் காட்சிகளில் கண்களிலேயே காதலைக் கொட்டுறாங்க த்ரிஷா. அனுஷ்காவுக்கு அய்யோ பாவம் மாதிரியான இடம்தான். விமானத்தில் சின்னதாச் சரக்கடிச்சுட்டு வாந்தி எடுக்கிற இடம் ரசிக்கவைக்குது. வாந்தி எடுக்கிறதில என்னடா ரசிக்கிறதுக்கு இருக்குனு கேட்கறீங்களா? என்ன பண்றதுங்க, அதுக்கப்புறம் வர்ற சீன்களில் அனுஷ்காவுக்கு நடிக்கிற வாய்ப்புகளே இல்லையே! வழக்கமான தமிழ்சினிமாவில வழக்கமான ஹீரோயினுக்கு வர்றமாதிரி அஜித்தைக் கண்டவுடன் காதல். பெப்பர் சால்ட் தலையோட இருக்கிற அஜித்தைப் பார்த்து ’இந்த உலகத்திலேயே அழகானவர் நீங்கதான்’கிறாங்க. அடடடா...

ஹாரிஸ் இசையில் ‘அதாரு உதாரு’ பாடல் தெறி மாஸ்னா ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ பாட்டு செம மெலோடி. ஆனா ‘அன்பே ஆருயிரே’ பாட்டு, எங்கேயோ சுட்ட மாதிரி இருக்கு. பின்னணி இசை ஓ.கே.தான் என்றாலும் அஜித் படத்துக்கான மாஸ் இல்லைனுதான் சொல்லணும்.

படத்தில நெருடற சில விஷயங்களைச் சொல்லியே ஆகணும்.

இப்போல்லாம் எவ்வளவோ டெக்னாலஜி முன்னேறியாச்சு. தமிழ்சினிமாக்களிலேயே தாறுமாறு தக்காளிச்சோறு கிண்டறாங்க. ஆனா கடத்தப்படற தன் மகளோட கையில் ஜி.பி.எஸ் வாட்ச் கட்டி, அஜித் கடத்தல் வண்டியை ட்ராக்கிங் பண்றதெல்லாம், ஸாரி கௌதம் உங்க வாட்ச் ரொம்ப லேட்டா ஓடுது. அதேமாதிரி அருண்விஜய் க்ளைமாக்ஸ்ல செல்போனோடுதான் அலையறார். அவரே ஒரு இடத்தில் கேட்கிறார், ‘இன்னுமா நான் இருக்கிற இடத்தை நீங்க ட்ரேஸ் பண்ணலை?‘னு. கேட்டபிறகும் அஜித் மகளைக் கடத்தவும் செய்றார். அப்பக்கூட அவர் போன் சிக்னலை வெச்சு ட்ரேஸ் பண்ணி மடக்கிறமாதிரி தெரியலை. சாலையோரத்தில இருக்கிறவங்களைக் கடத்தி உறுப்புகளைத் திருடி சேஃப்டியா விக்கிற வில்லன் கேங் அப்புறம் ஏன் ரிஸ்க் எடுத்து அனுஷ்கா மாதிரியான ஆட்களைக் கடத்தநினைக்குது. அதுவும் புரியலை!

வழக்கமான கௌதம்மேனன் போலீஸ் படங்களில் ஒரு துப்பாக்கியில் ஒரு லாரி தோட்டா இருக்கும். இதிலும் அப்படித்தான் கொஞ்சநேரம் டிஷ்யூம் டிஷ்யூம், அது ஓய்ஞ்சநேரம் கத்தியில் சதக் சதக். படம் முடிஞ்சு தியேட்டரை விட்டு வெளியில் வரும்போது நம்ம சட்டை ஓட்டையாகி, ரத்தத்தில் நனைஞ்சமாதிரி ஃபீலிங். அஜித்தும் ஒரு சீன்ல ‘சண்டையில கிழியாத சட்டை இருக்கா?‘னு வேற கேட்கிறார். அப்புறம் கௌதம்மேனன் படத்தில நிறைய இங்கிலீஷ் கெட்டவார்த்தை பேசுவாங்க. இதில அஜித்தும் பீப் சவுண்டு ஒலிக்க ரெண்டு, மூணு கெட்டவார்த்தை பேசுறார். ஆனா அத்தனையும் தமிழ். செம்மொழியான தமிழ்மொழியாம்!

ஆடியோ வடிவில் கட்டுரையை கேட்க: https://soundcloud.com/vikatan/vikatan_ennai-arinthal-vimarsanam 

 சினிமா விகடன் குழு

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்