ஷமிதாப் - படம் எப்படி? | ஷமிதாப், அக்‌ஷரா, தனுஷ், அமிதாப் பச்சன், பால்கி, இளையராஜா,

வெளியிடப்பட்ட நேரம்: 12:55 (07/02/2015)

கடைசி தொடர்பு:17:32 (25/03/2015)

ஷமிதாப் - படம் எப்படி?

சினிமா கனவை மட்டுமே சுமந்தபடி மும்பைக்கு வரும் வாய் பேசமுடியாத ஏழை இளைஞன், அவனுக்கு பின்னணி குரலாக வரும் மனிதன். இருவருக்கும் பாலமாக ஒரு பெண். ஈகோ மனிதனை என்னவெல்லாம் செய்யும் என்று இந்த முக்கோண கூட்டணியை வைத்து பால்கி நடத்தியிருக்கும் பாடமே ‘ஷமிதாப்’.
 
பள்ளியில், ‘காந்திஜியின் மனைவி பெயர் என்ன?’ என்று கேட்டால், ‘காந்தி’ படத்தில் அவருக்கு மனைவியாக நடித்த நடிகையின் பெயரை’ எழுதும் அளவுக்கு சினிமா ரசிகனாக இருக்கிறார் சின்ன வயது தனுஷ். ஹீரோவாக நினைக்கும் தனுஷுக்கு குரலாகிறார் அமிதாப். இருவரும் இணையும் புள்ளியில் ஹீரோ ‘ஷமிதாப்’பாக உருவெடுக்கும் தனுஷ், காலப்போக்கில் சூப்பர் ஸ்டாராகிறார். பிறகு படம் முழுக்க பேசுகிறது ஈகோ. ஈகோ உடையும் தருவாயில் என்ன நடந்தது என்பதே மீதிக்கதை. 
 

 அமிதாப், அசால்டாக மனதை அள்ளுகிறார். படம் முழுவதும் குடித்துக்கொண்டே தனுஷை தன் பிடியில் வைத்துக் கொண்டு ஆட்டி வைக்கும் போதும், ‘என்னது நீ ஹீரோவாகணுமா, அதும் உன் மூஞ்சிக்கு என்னோட வாய்ஸா..?‘ என பிரித்தெடுக்கிறார் பிக்பி. அதுவும் கடைசி அரைமணிநேரம் ரசிகர்களின் மனதில் நாற்காலி போட்டு அமர்கிறார். மிகைப்படுத்தாத நடிப்பு, அர்ப்பணிப்பு... இந்த வயதிலும் பாலிவுட்டில் அவசிய தேவையாக தன்னை தேடுவது ஏன் என்பதை தன் நடிப்பால் உணர்த்துகிறார். 

கரும்பும் குறும்புமாக தனுஷ். பார்த்த உடனேயே பிடித்துவிடுகிறது. இந்தப் படத்துக்குப் பிறகு அவர் பாலிவுட்டிலேயே தங்கிவிட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. தன் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கேட்டு அலைவது, அக்ஷராவுடன் நெருங்கி மருங்குவது, அமிதாப் தன்னை சீண்டும்போதெல்லாம் கோபமும் வெறுப்பும் காட்டுவது என காட்சிக்கு காட்சி ஸ்கோர் செய்கிறார். அதுவும் ’நான் இல்லன்னா நீயும் ஃபினிஷ்ட்’ என கால் மேல் கால் போட்டு லுக் விடுவது, அமிதாப்பின் டார்ச்சர் தாங்காமல் அவரை அடித்துவிட்டு, சத்தமே இல்லாமல் உணர்வுகளினாலேயே துடிப்பது என தனுஷ் இந்திய புகழ் நடிகர் என காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம்.

இந்த இருவருக்கும் இடையில் எப்போதும் கருப்பு உடையில் ‘ஹேய் இடியட்ஸ் ஏன் இப்படி அடிச்சுக்கறீங்க’ என கேட்டு ஒவ்வொரு கட்டத்திலும் தனுஷ், அமிதாப்பை இணைக்க போராடும் அக்‌ஷரா. அவ்வப்போது தனுஷிடம் என்னோட ஸ்க்ரிப்ட்ல நடிப்பேல்ல என அப்பாவியாக கேட்டு நிற்பது. முத்தம் கொடுக்க நெருங்கும் தனுஷை மத்தவங்களுக்குதான் நீ சூப்பர் ஸ்டார் , எனக்கு நீ குரங்கு தான் இப்படில்லா பாத்தா நான் மயங்க மாட்டேன் என அசால்ட்டாக டயலாக் பேசி விட்டு ஆனாலும் எனக்கு பிடிச்சுருக்கு என சொல்லி விட்டு தொப்பியை போடும் காட்சிகளில், ஓ இவுங்க கமல் பொண்ணுல்ல இது கூட நடிக்கலைன்னா எப்படி என நமக்கு நாமே ஆறுதல் சொல்லி கொள்ளலாம்.


கலைஞர்களின் ஈகோ, அதனால் எற்படும் விளைவு... நுணுக்கமாக செதுக்கியிருக்கும் பால்கியின் உழைப்பு ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. கோபம், ஆதங்கம், எள்ளல்... என பிரமாதமான கதையை தொய்வில்லாமல் கமர்ஷியலாக சொன்ன திரைக்கதையில் வெற்றிபெற்று இருக்கிறார் பால்கி. அவரின் கதைக்கு உயிராக நிற்கிறது பி.சி.ஸ்ரீராமின் விஷுவல்.

‘நான் விஸ்கி, அவன் தண்ணி, விஸ்கி தனியா போதை குடுக்கும், ஆனா தண்ணி தராது’ என படம் முழுக்க அமிதாப் சொல்லும் டயலாக்குக்கு ஒரு இடத்தில் அக்‌ஷரா, ‘ஹேய் லேபில் பாக்க மாட்ட, விஸ்கியிலயே 57 சதவீதம் தண்ணிதான்யா இருக்கு. 43 சதவீதம் தான் ஆல்கஹால்...’ இப்படி பல இடங்களில் அட... போட வைக்கிறது வசனம். 

பின்னணி இசையில் பின்னி எடுத்திருக்கிறார் ராஜா. காட்சியமைப்புக்கு ஏற்றபடி மனித உணர்வுகளை நம்முள் கடத்துவதுபோல் இருக்கிறது இவரின் இசை. சன்னட்டா பாடல் அதிரடி, பிட்லி பாடல் ரிதம், இஷ்க் இ ஃபில்லம் பாடல் சினிமாவுக்கு சமர்ப்பணம். இப்படி இசைஞானி படம் முழுவதும் ராஜாங்கம் நடத்துகிறார். எங்கேயோ இருந்து வந்த யாரென்றே தெரியாத ஒரு சினிமா ரசிகன் சூப்பர் ஸ்டார் ஆக தனது கனவுகளைக்கூட ஒத்தி வைத்து விட்டு ஏன் அக்‌ஷரா இப்படி விழுந்து கொண்டு உதவி செய்ய வேண்டும் என்ற கேள்விக்கான பதிலை இன்னும் ஆழமாக காட்சிப்படுத்தி இருக்கலாம். தனுஷ் சைகையில் பேசும்போது நாம் கேட்கும் முன்பே ‘சப் டைட்டில் ப்ளீஸ்’ என அமிதாப் கேட்கிறார். இப்படி ஒவ்வொரு ஃப்ரேமிலும் பால்கியும் ஒரு சினிமா ரசிகன் என காட்டுகிறது. 

பாலிவுட்டில் ‘100 கோடி கிளப்’பில் சேருவது என்பது பெரும் சாதனை. ஓப்பனிங்கை பார்க்கையில் அதில் ‘ஷமிதாப்’ படத்துக்கு கண்டிப்பாக இடம் உண்டு என்றே தெரிகிறது. அந்த வெற்றியில் பால்கி, இளையராஜா, பி.சி.ஸ்ரீராம், தனுஷ், அக்‌ஷரா... என தமிழ் பேசும் கலைஞர்கள் இருப்பது நமக்கும் பெருமைதானே? மொத்தத்தில் ‘ஷமிதாப்’ சினிமாவுக்கும், ஈகோவுக்கும் ஒரு சன்னட்டா (சைலண்ட்) பாடம்..
-சினிமா விகடன் குழு-

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close