100 டேஸ் ஆஃப் லவ் - காதலும் காமெடியும் கலந்த விருந்து!

நிச்சயம் ஆன பெண்ணை காதலித்துக் கரம்பிடிக்கும் அதே பழைய ஸ்டைல் சினிமா தான். ஆனால் கொஞ்சம் காமெடி, கொஞ்சம் சென்டிமெண்ட், கொஞ்சம் ஃபேஸ்புக், கொஞ்சம் வாட்ஸ் ஆப் எல்லாம் சேர்த்து கொடுத்திருக்கிறார்கள். 

பாலன் கே.நாயர் (துல்கர் சல்மான்) சுருக்கமாக பிகேஎன், ஒரு நாளிதழில் வேலை செய்கிறார். இவருக்கு உம்மர் (சேகர் மேனன்) என்ற நண்பனும் உண்டு. உயர் அதிகாரியுடன் ஒரு சின்ன உரசல் காரணமாக வேலை காலியாகிறது 'பிகேஎன்'னுக்கு. அதோடு சேர்த்து காதல் தோல்வி வேறு. தன் முன்னாள் காதலியின் ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸில் கலாய் கமெண்ட் சென்று வைரல் பிரபலமும் ஆகிறான். ஒரு நாள் மழை அன்று ஷீலாவைப் (நித்யா மேனன்) பார்க்கிறான், பார்த்ததும் காதல். அவள் தவரவிடும் கேமிராவை பத்திரமாக வைத்துக் கொண்டு அவளைத் தேடுகிறான். இதற்கிடையில் நாளிதழின் உயர்அதிகாரி மாற்றலாக மீண்டும் வேலை கிடைக்கிறது துல்கருக்கு. நண்பன் ஒருவனுக்கு விபத்து என செய்தி வர துல்கர் மருத்துவமனை செல்கிறார். அங்கு மீண்டும் நித்யா மேனனைப் பார்க்கிறார் துல்கர். அந்த விபத்தை நிகழ்த்தியதே நித்யா எனத் தெரிய வருகிறது. பின் துல்கர் நித்யாவிடம் பேச்சு கொடுக்க, அன்று மழை சந்திப்பை ஞாபகப்படுத்திக் கொள்கின்றனர். ஆனால் அதற்கு முன்பே உன்னைத் தெரியும் என நித்யா கூற பள்ளிகாலத்து சண்டை ஞாபகத்துக்கு வருகிறது. ஒரு பிரச்சனையில் நித்யாவால் அவமானப்பட துல்கருக்கு சட்டெனக் கோபம் வந்து அங்கிருந்து கிளம்புகிறார். பிறகு சில சமாதனங்களுக்குப் பிறகு நெருங்குகிறார்கள். நித்யாவிடம் காதலைச் சொல்ல துல்கர் காத்திருக்கும் வேளையில் வில்லன் என்ட்ரி. நித்யாவிற்கு நிச்சயம் செய்திருக்கும் ராகுல் வருகிறார். பின்னர் எப்படி துல்கரின் காதல் இணைகிறது என்பது க்ளைமாக்ஸ். ஹீரோயினை சந்தித்து 100வது நாளில் காதல் கைகூடுகிறது இது தான் தலைப்பிற்கான காரணம்.

இது கிட்டத்தட்ட மலையாள காதல் படங்களைப் பற்றிய ஸ்பூஃப் என்று சொல்லலாம். நாயகன் நாயகி பெயர் முதல் கொண்டு க்ளைமாக்ஸ் ரயில்வே ஸ்டேஷன் காட்சி க்ளிஷே வரை ஆங்காங்கே கிண்டல் தொனி (பிரச்சனை என்னவென்றால் மலையாள ரசிகர்களுக்கு மட்டும் தான் இவற்றை முழுமையாகப் புரிந்து கொண்டு சிரிக்க முடியும்) பரவி கிடக்கிறது. படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது ப்ரதீஷ் வர்மாவின் ஒளிப்பதிவு. ஒவ்வொரு ஃப்ரேமும் கேண்வாஸ் முழுவதிலும் அழகு சேர்க்கிறது. அதிலும் ஹ்ருதயத்தின் நிறமாய் பாடலின் வண்ணம் அத்தனை அழகு.

வழக்கமான அதே கதை தான். ஆனால் சின்ன சின்ன ட்ரெண்டி விஷயங்களை இணைத்திருப்பது அழகு சேர்கிறது. படத்தை விட படத்தின் குழுவைப் பற்றிய தகவல்கள் சுவாரஸ்யமாக இருக்கும். படத்தை இயக்கியிருப்பது ஜெனுஸ் முகமத். இவர் பிரபல மலையாள இயக்குநர் கமலின் மகன். தமிழில் பிரசாந்த், ஷாலினி நடிப்பில் 'பிரியாத வரம் வேண்டும்' படத்தை இயக்கியவர் தான் கமல். மலையாளத்தில் ப்ரித்திவிரஜ் நடிப்பில் ஜே.சி.டேனியலின் வாழ்க்கையை தழுவி எடுத்த 'செல்லுலாய்டு' உட்பட பல படங்களை இயக்கியவர். தமிழில் ரஜினி - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணி போல மலையாளத்தில் மம்மூட்டி - கமல் கூட்டணி. கமல் இயக்கத்தில் மம்மூட்டி நடித்தது போல கமலின் மகன் ஜெனுஸ் இயக்கத்தில் மம்மூட்டி மகன் துல்கர் நடிப்பது என முடிவானதும் பரபரப்பானது மலையாளத் திரையுலகு. மிக்சடு ரிசல்டால் தப்பிப்பிழைத்திருக்கிறது படம்.

எது எப்படியோ, காதலும், காமெடியுமாக இரண்டரை மணிநேரத்தை செலவழிக்க விரும்புபவர்களுக்கு படம் செம்ம விருந்து!

- பா.ஜான்ஸன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!