என்னும் எப்போழும் - படம் எப்படி!

'என்னும் எப்போழும்' தமிழில் 'என்றும் எப்பொழுதும்' என்று அர்த்தம். சமீபத்தில் மோகன் லால், மஞ்சுவாரியர், ரீனு மேத்திவ்ஸ் நடிப்பில் சத்யன் அந்திகாடு இயக்கி வெளியாகியிருக்கும் மலையாள சினிமா தான் இது.

வனிதாரத்னம் பத்திரிகையின் ஸ்டாஃப் ரிப்போர்டர் வினீதம்பிள்ளா சாரி... வினீத் என்.பிள்ளை(மோகன் லால்). வேலையில் கவனக் குறைவு, லேட்டாக ஆஃபீஸ் வருவது என பல குறைகள் இருந்தும் அவர் வேலையில் நீடித்திருப்பதற்கு ஒரு சென்டிமெண்ட் காரணம் உண்டு. இந்தக் கதை ஒரு பக்கம். இன்னொரு பக்கம் வழக்குரைஞர் தீபா (மஞ்சுவாரியர்). விவாகரத்துக்குப் பின் மகளுடன் வசித்து வருகிறார். வழக்குரைஞர் தீபாவை பேட்டி எடுக்க சொல்லி மோகன் லாலுக்கு ஒரு வேலை வருகிறது. அதற்காக தீபாவை சந்திக்க எடுக்கும் அத்தனை முயற்சிகளிலும் சிக்கலில் முடிகிறது. பேட்டி எடுத்தாரா? இல்லையா? என்பது க்ளைமாக்ஸ்.

மிகச் சாதாரணமான கதை தான். ஆனால் ஒவ்வொரு சீனிலும் அத்தனை உற்சாகம் மோகன் லாலின் நடிப்பில். தன் முந்தைய படங்களின் வசனங்களை ஆங்காங்கே பேசுவது, அவ்வப்போது சிக்கலில் மாட்டிக் கொண்டு முழிப்பது, ஜேக்கப்புடன் அடிக்கும் ரகளைகள் என படம் முழுவதும் எக்ஸ்ட்ரா எனர்ஜி காட்டுகிறார். 'இந்தப் பேட்டி என்னுடைய ப்ரஸ்டீஞ் ப்ரஷர் குக்கர், சொதப்பீடக்கூடாது!' எனத் தேங்காய் உடைக்கும் போதும், சொதப்பிய பின் 'ஒரு தேங்காயோட விலை என்னானு தெரியுமா?' என விநாயகருடன் செய்யும் வாக்குவாதத்திலும் தியேட்டர் அதிர்கிறது. 

'உங்களோட இந்த சந்தனப் பொட்டு எனக்குப் பிடிக்கலை அதனால பேட்டி கொடுக்க முடியாது' என்று மோகன் லாலிடம் வெறுப்பு காட்டுவது, கணவர் இரண்டாவது திருமணம் பற்றி தெரிந்து கொள்ளும் போது சின்ன கவலையுடன் 'ஓ அப்படியா' என்பது என சின்ன சின்ன ரியாக்ஷன்களிலேயே கவர்கிறார் மஞ்சு வாரியர். இன்னோசென்ட், ரீனு மேத்திவ்ஸ், லீனா என அத்தனை பேரும் யதார்த்த நடிப்பில் கச்சிதம்.

படத்தின் இசை நம்ம மெலடி கிங் வித்யாசாகர் தான். 'மலர் வண்ண கொம்பத்து', 'நிலாவும்' பாடல்கள் இதம். நீல் ஒளிப்பதிவு இயல்பான காட்சிகளுடன் அழகாய் பயணிக்கிறது. 

தெளிவான கதை, மிகவும் எளிமையான திரைக்கதை ஆனால் ஜாலியாக ரசிக்கும் படி ஒரு படம் தந்திருக்கிறார் இயக்குநர் சத்யன் அந்திகாடு. அவசியம் பார்த்தாகவேண்டிய படம் என்றில்லை, குடும்பத்தோடு ஜாலியாய் ஒரு படம் ரசிக்க நினைப்பவர்களுக்காக காத்திருக்கிறது இந்த 'என்னும் எப்போழும்'.

பா.ஜான்ஸன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!