கொம்பன்- படம் எப்படி? | komban movie cinemavikatan review,

வெளியிடப்பட்ட நேரம்: 17:14 (03/04/2015)

கடைசி தொடர்பு:17:14 (03/04/2015)

கொம்பன்- படம் எப்படி?

படத்துக்கு எதிர்ப்பு, வெளியிட தடை கோரி மனு இப்படி பல சிக்கல்களை கடந்து ரிலீஸ் ஆகியிருக்கற படம் கொம்பன்.

இதில தாழ்த்தப்பட்ட மக்களையோ அல்லது வேற சாதிக்காரர்களையோ எங்கேயுமே இழிவுபடுத்தவில்லை. படம் முழுக்க ஒரே ஒரு சாதிக்காரங்கதான் வர்றாங்க. மறந்தும்கூட மருந்துக்குக்கூட வேறு சாதிக்காரர்கள் இல்லை.

பெரிய மீசை, ஏத்திக் கட்டின வேட்டி, எகத்தாளமான பார்வை...அப்போ கார்த்தி என்ன பண்ணுவாரு? பார்க்கிறவர்களையெல்லாம் அப்பப்போ பொளந்துகட்டுவாரு. அதுக்காக அநியாயத்துக்கு யாரையும் அடிக்கமாட்டாரு. நியாயத்துக்காகத்தான் அடிப்பாரு. அப்படி என்ன அநியாயத்தைத் தட்டிக் கேக்கிறார்னு கேக்கறீங்களா? ஆட்டுச்சந்தையில ஆட்டை நிறைய தண்ணி குடிக்கவெச்சு எடை கூட விக்கிறவங்களை அடிச்சுப் பொளக்கிறாரு. பின்னே அவர் என்ன ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளையா எதிர்க்கப்போறாரு. அரசநாடு, வெல்ல நாடு, சேமநாடுன்னு மொத்தம் மூணு ஊரு. இந்த மூணு ஊரையும் கண்ட்ரோல்லில வெச்சுக்கிட்டு தான் நினைக்கிறவங்களே ஊராட்சித் தலைவர் ஆகணும்னு நினைக்கிறாரு சூப்பர் சுப்பராயன். இதுக்கு தடையா கார்த்தி. இடையில் மாமனார், மருமகன் பாசம், உறவு, கடைசியா என்ன ஆச்சுங்கறது மிச்ச கதை.

கார்த்திக்கு இது பருத்திவீரன் பார்ட் டூ மாதிரிதான். அதே வாயோரச் சிரிப்பு, பந்தா நடை, தூக்கிக்கட்டின வேட்டி, கோபப் பார்வை... ஏற்கனவே செஞ்ச வேடம்கிறதால ஈஸியாப் பண்ணிடறார். ஆனா இடைவேளை வரைக்கும் அவர் நல்லவரா, கெட்டவரான்னு குழப்பமாவே இருக்கிறது. ஊருக்காக உயிரையே கொடுப்பேன்னு அலையற அளவுக்கு அவருக்கு ஊர் என்ன பண்ணுச்சுன்னுதான் அங்கங்க டவுட்டு வருது. பெரிசா மீசை வெச்ச அஞ்சாறு பெரிசுக வெட்டித்தனமா ஊரைச் சுத்தறது, பஞ்சாயத்துப் பண்றது, சாவடியில உக்காந்து தாயம் விளையாடறதுன்னு இருக்காங்க. இவங்ககூட சேர்ந்து கார்த்தியும் பல பஞ்சாயத்துகளைப் பண்ணிக்கிட்டிருக்காரு. மத்தபடி கிராமத்துக்கு நல்ல ரோடு வேணும், பஸ் வேணும், குடிதண்ணீர் வசதி வேணும்னு போராடறது  இதெல்லாம் ’ஊருக்கு நல்லது பண்றது’ லிஸ்ட்ல வராதுபோல.

மாமனார் ராஜ்கிரண் ‘எவ்ளோ அசிங்கப்படுத்தினாலும் தாங்கறார் இவரு ரொம்ப நல்லவர்’ மாதிரியான கேரக்டர். அவரு ஆங்காங்கே பல தத்துவங்களையும் அவர் ஸ்டைலில் அள்ளி விடுகிறார். உதாரணத்திற்கு, ”முடியை வெட்டினா வலிக்காது. பிடுங்கினாதான்யா வலிக்கும். அப்படித்தான் ஒரு பொண்ணோட வாழ்க்கை!” இப்படி.லெட்சுமி மேனன்...கிராமத்துக்குன்னே வாழ்க்கைப்பட்ட பொண்ணுமாதிரி இருக்காங்க. கார்த்தி ஏன் இப்படி ஊர் வம்பை விலைக்கு வாங்கிட்டு வர்றார்னு கேக்கற இடத்துல மட்டும் மனசுல நிக்கிறாங்க. மத்தபடி அவங்க அப்பாவை அசிங்கப்படுத்தறப்போ எல்லாம் ஏன் அவ்வளவு அமைதியா இருக்காங்கன்னு தெரியலை. தன்னோட டிரேட் மார்க் எக்ஸ்பிரஷன்களோட அசத்துறாங்க கோவை சரளா. தம்பி ராமையாவுக்கு வழக்கமான ரோல். ‘ஆல்கஹால்னு ஏன் பேர் வந்துச்சு தெரியுமா? ஆளுக்காள் அடிக்கிறதாலதான்’னு சொல்றதுமாதிரியான ஒருசில இடங்களில் ரசிக்கலாம்.

படத்தில் வில்லன்கள் கொஞ்சம் அதிகம். பெரிசு பெரிசா மீசை வெச்சு, எப்பப் பாத்தாலும் முறைச்சுக்கிட்டு, சவால்விட்டுக்கிட்டு திரியறாங்க. ஆனால் பல சமயங்களில் கார்த்திகிட்டேயும் ஒரு தடவை ராஜ்கிரண்கிட்டேயும் செமத்தியா வாங்கிக்கட்டிக்கிறாங்க. அதுவும் வயசான ராஜ்கிரணைப் போட்டுத்தள்ள அவங்க போடற பிளான்லாம் செம காமெடி பாஸ்!

ஜி.வி.பிரகாஷ் இசையில் ‘கறுப்பு நிறத்தழகி’ பாட்டு செம மாஸ். பின்னணி இசையும் ஒளிப்பதிவும் பக்கா.

ஆனா ஊருக்காக வாழ்க்கையை அர்ப்பணிக்கிற ஒருத்தன், அநியாயத்தைத் தட்டிக் கேக்கற ஹீரோ, அநியாயமான வில்லன்கள், எப்பப் பார்த்தாலும் சாமி, சாராயம், திருவிழா, அருவான்னே திரியற கிராமத்துக்காரங்கன்னு கொன்னெடுக்கிறாங்கப்பா இந்த கொம்பன்!

சரி பார்க்கலாமா? கார்த்திய ரொம்ப வர்சுஅஹ்ம் கழிச்சு திரும்பவும் பருத்தி வீரன் கெட்டப்ல பாக்கணும், அப்படியே வளைய வர அவருக்கேத்த ஜோடி லட்சுமி மேனன் இவங்க ரேண்டு பேரையும் பாக்கணும்னா கண்டிப்பா பாக்கலாம்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close