36 வயதினிலே படம் எப்படி? | 36 vayathinile Movie Review

வெளியிடப்பட்ட நேரம்: 10:11 (15/05/2015)

கடைசி தொடர்பு:12:32 (18/05/2015)

36 வயதினிலே படம் எப்படி?

கல்லூரியில் படிக்கிற காலத்தில் எதையும் துணிச்சலுடன் எதிர்த்துப் போராடுகிற பெண், திருமணத்துக்குப் பிறகு குடும்பம் குழந்தை என்றாகி தன்னையே தொலைத்துவிடுகிறார். ஒருகட்டத்தில் தன்னை இழந்துவிட்டதை உணரும் அந்தப்பெண் 36 வயதினில் மீண்டும் தன்னைக் கண்டடைவது எப்படி? என்பதுதான் இந்தப்படம்.

வேலைகேட்டுப் போன இடத்தில் கொட்டாவி விட்டுக்கொண்டு அசிரத்தையாக உட்கார்ந்திருக்கும் ஜோதிகா படம் முழுக்க, தான் ஏற்றிருக்கும் வசந்தி பாத்திரத்தில் மிகஅக்கறையாக நடித்திருக்கிறார். ஒரு சோம்பேறியாக, கணவன் மற்றும் குழந்தைக்குப் பணிவிடை செய்வதையே பெருமையாகக் கருதும் குடும்பத்தலைவியாக, அலுவலகத்தின் சகஊழியர்களைப் பற்றி புறம் பேசுபவராக, குடியரசுத்தலைவரைப் பார்த்ததும் மயங்கிவிழும் அப்பாவியாக என  எல்லா இடங்களிலும் சிறப்பாகச் செய்திருக்கிறார் ஜோதிகா.

என் பொண்ணும் வசந்தி மாதிரி ஆகிவிடக்கூடாது என்று கணவன் ரகுமான் சொன்னதற்காக தோழியிடம் வந்து, 'அப்படின்னா இவ்வளவு வருசமா நான் என்னவா? இருந்தேன்' என்று கேட்டுக் கண்ணீர்விடும் காட்சியில் கலங்கவைத்துவிடுகிறார்.

உன்னை இன்ஸ்பிரேசனா வச்சுத்தான் நான் இந்தஅளவுக்கு வளர்ந்திருக்கேன், எதைக்கண்டும் பயப்படாமல் போராடுகிற அந்த வசந்தி எங்கே? என்று அபிராமி கேட்கும்போது, தெரியல, குனிஞ்சு குனிஞ்சு உடைஞ்சே போயிட்டேன் என்று கலங்கும்போதும் கடைசியில் அபிராமியோடு தெம்பாகக் கைபேசியில் பேசும் காட்சியும் நன்று.

வசந்தியின் கணவர் தமிழ்ச்செல்வனாக நடித்திருக்கிற ரகுமான், அளவாக நடித்திருக்கிறார். மனைவி மீது அக்கறை கொண்டவர் போலவே காட்டிக்கொண்டு தம்முடைய தேவைகளுக்காக அவரைப் பயன்படுத்திக்கொள்ளும் கணவன் பாத்திரத்தைச் சரியாகச் செய்திருக்கிறார். ஜோதிகாவின் பெண்ணாக நடித்திருக்கும் அமிர்தா, அந்தவயதுக்குரிய குழந்தைகளைப் பிரதிபலிக்கிறார். அவருடைய பாத்திரப்படைப்புதான் விஜியின் வசனத்தில் சொல்வது போல, இண்டர்நெட்டில் பழுத்ததாக இருக்கிறது.

நகரத்தின் நெரிலான வீடுகளின் மொட்டைமாடிகளை காய்கறி வளர்க்கும் தோட்டமாக மாற்றுகிற புதியயோசனையை இந்தப்படத்தின் மூலம் மக்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள். பத்துவீட்டு மாடிகளை வைத்துக்கொண்டு ஒரு பெரியஇடத்துக் கல்யாணத்துக்கே காய்கறிகள் கொடுக்கிறார்கள் என்பது அதிகபட்ச கற்பனை என்றாலும் நல்லகற்பனை. அதேநேரம் நாம் வாங்கும் காய்கறிகளை இனிமேல் அச்சத்துடனேயே பார்க்கிற நிலையையும் ஏற்படுத்திவிட்டார்கள்.

இளவரசு வைத்திருக்கும் காய்கறி மண்டியும், அங்கு நடக்கும் நிகழ்வுகளும், பூச்சிமருந்து இல்லாத காய்கறி எங்குமே இல்லையே என்கிற வசனமும் பயத்தை ஏற்படுத்துகிறது.

“நமக்குன்னு இந்த உலகத்துல ஒருத்தர் இருக்கிறாங்க என்கிற நம்பிக்கை ஒவ்வொருத்தருக்கும் இருக்கணும் அப்டி ஒருத்தரும் இருக்கணும்”  , நான் தனியா பொறந்தவங்கிற குறை எனக்கில்ல ஏன்னா ஐ'ம் பார்ன் வித் பெய்ன்', கல்யாணத்துக்குப் பிறகு பெண்களின் கனவுகள் காலாவதியாவது ஏன்? என்பது உட்பட படத்தில் பெரும்பாலான இடங்களில் விஜியின் வசனங்கள் பலமாக அமைந்திருக்கின்றன. பல இடங்களில் காட்சிகளில் விவரிக்கவேண்டிய விசயங்களும் வசனங்களில் கடந்துபோகின்றன.

முன்பாதிப்படத்தில் ரகுமானுக்கும் ஜோதிகாவுக்குமான காட்சிகள் மற்றும் ஜோதிகா மற்றும் அவருடைய பெண்ணுக்குமான காட்சிகள் செயற்கையாகத் தெரிகின்றன. ரகுமான் மற்றும் அமிர்தா பாத்திரம் ஆகியனவற்றை வலிந்து வில்லத்தனமாக்கியிருப்பது போலத் தோன்றுகிறது. காட்சிகளும் தொலைக்காட்சித்தொடர் மாதிரி போகின்றன. கதையில் கவனம் செலுத்திய இயக்குநர் ரோசன்ஆண்ட்ரூஸ் காட்சிகளில் அந்தளவுக்குக் கவனம் செலுத்தவில்லை. 13 இந்தியக் குடியரசுத்தலைவர்களில் ஒருவரே பெண், 14 பிரதமர்களில் ஒருவரே பெண், ஏன் இப்படி? என்பதுதான் படத்தின் மையக்கேள்வி என்பதை இன்னும் கொஞ்சம் தெளிவாகச் சொல்லியிருக்கலாம்.

குடியரசுத்தலைவர் ஜோதிகாவைப் பார்க்க விரும்புகிறார் என்றதும் அதற்காக காவல்துறை உட்பட பலருடைய பரபரப்பான நடவடிக்கைகள், குடியரசுத்தலைவரை ஒருவர் பார்க்க அனுமதி கேட்டாலும் குடியரசுத்தலைவரே ஒருவரைப் பார்க்க விரும்பினாலும் இவ்வளவு நடைமுறைகள் இருக்கின்றன என்பதை விவரிக்கின்றன.

சந்தோஷ்நாராயணின் இசை படத்துக்குப் பலம். வாடி ராசாத்தி மற்றும் நாலு கழுதை வயசாச்சி ஆகிய பாடல்கள் நல்லவரவேற்பைப் பெறும். ஜோதிகாவுக்கு இந்தப்படம் மரியாதையான மறுபிரவேசம், அவருடைய நடிப்பும் வசனங்களும் படத்தைக் காப்பாற்றுகின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்