Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புறம்போக்கு என்கிற பொதுவுடைமை- படம் எப்படி?

ஒரு மரணதண்டனைக் கைதி, அவரைத் தூக்கில் தொங்கவிடும் கடமையை ஏற்றுக்கொண்ட காவல்அதிகாரி, தூக்குப்போடுகிற வேலையைச் செய்கிற ஊழியர் ஆகிய மூவரைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கிற திரைக்கதையை வைத்துக்கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்தப்படம், தமிழில் மக்கள்அரசியல்படங்களே வருவதில்லை என்கிற குறையைப் போக்கியிருக்கிறது.

முற்காலத்தில் தீவிரகம்யூனிஸ்டுகள் என்றும் இப்போது மாவோயிஸ்டுகள் என்று அழைக்கப்படுகிறவர் வேடத்தில் ஆர்யா நடித்திருக்கிறார். காவல்அதிகாரியாக ஷாமும், தூக்குப்போடும் ஊழியராக விஜய்சேதுபதியும் நடித்திருக்கிறார்கள். ஆர்யாவின் இயக்கத்தைச் சேர்ந்த போராளியாக நாயகி கார்த்திகா நடித்திருக்கிறார்.

ஆர்யாவுக்கு மரணதண்டனை என்று தீர்ப்புச் சொல்லுவதோடு தொடங்குகிறது படம். தூக்குத்தண்டனை வேண்டாம் என்னைப் போர்க்கைதியாகப் பாவித்துச் சுட்டுக்கொல்லுங்கள் என்று ஆர்யா கேட்கிறார். நீதிமன்றத்தால் அந்தக்கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. சிறையில் ஆர்யா அடைக்கப்படுகிறார். ஆர்யாவைச் சிறையிலிருந்து மீட்க நாயகி கார்த்திகா தலைமையில் அவர்களுடைய இயக்கம் போராடுகிறது. ஆர்யாவைத் தூக்கில் போட்டுத் தன் கடமையைச் செவ்வனே செய்யவேண்டும் என்கிற துடிப்புள்ள அதிகாரியாக ஷாம் இருக்கிறார். தூக்குப்போடும் வேலையை வெறுத்து தொடர்வண்டித்துறையில் தற்காலிகப்பணியாளராக இருக்கும் விஜய்சேதுபதியைத் தூக்குப்போட அழைக்கிறார்கள். முதலில் மறுத்துவிட்டு பிறகு ஆர்யா தப்பிக்க உதவவேண்டும் என்பதற்காக அந்த வேலையை ஒப்புக்கொள்கிறார் விஜயசேதுபதி. ஆர்யா சிறையிலிருந்து தப்பித்தாரா இல்லையா என்பதுதான் படம். அதை மிகவும் விறுவிறுப்புடன் சொல்லியிருக்கிறார்கள்.
 
படத்தின் பெரும்பகுதி சிறைக்குள்ளேயே நடக்கிறது என்றாலும் போரடிக்கவில்லை. பேனா வாங்கிக்கொடுத்ததற்காக தூக்குத்தண்டனை என்று ஒருவரைச் சுட்டுவது, இளம்பெண் ஒருவரைக கற்பழித்துக்கொன்றார் என்ற குற்றத்திற்காக ஆயுள்தண்டனை பெற்றிருக்கும் ஒருவரிடம், உன்னை விசாரித்த அதிகாரி உன்னை திட்டமிட்டு இந்தவழக்கில் சிக்கவைத்துவிட்டதாக எழுதி வைத்துவிட்டுச் செத்துப்போய்விட்டார் அதனால் உன்னை விடுதலை செய்கிறேன் என்று நீதிபதி சொன்னதும், அதைக்கேட்டுக் கதறியழுதுகொண்டே நான்தான் கற்பழிச்சேன்னு நினைச்சு அவமானம் தாங்கமுடியாம என் மனைவியும் பொண்ணும் தற்கொலை பண்ணிகிட்டாங்க அவங்க உயிரைத் திருப்பித்தருவீங்களா என்று கைதி கேட்பது உள்ளிட்ட பல காட்சிகளில் நடைமுறை அவலங்களைச் சுட்டிக்காடுகிறார் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்..
 
மரணதண்டனை என்று தீர்ப்புச் சொல்லும்போதும் கூட மிகஅலட்சியமாகக் கடலை சாப்பிடுகிறார் ஆர்யா. இந்தியாவில் மரணதண்டனைக்குரிய கொடியகுற்றங்களைச் செய்தவர் என்று அவர் மீது குற்றம் சாட்டப்படுகிறது, அதை மிகவலிமையாக எதிர்கொள்கிறார். உச்சநீதிமன்றம் தானியங்களில் கிடக்கும் தானியங்களை மக்களுக்குக் கொடுக்கச் சொல்கிறது. அதைச் செய்தால் நான் குற்றவாளியா? என்று கேட்கிறார்.  கார்த்திகாவும் ஆர்யாவும் சேர்ந்து ராஜஸ்தான் பாலைவனத்தில் ஓடும் தொடர்வண்டியில் உணவுதானியங்களைக் கொள்ளையடிப்பதும் காஷ்மீரத்துப்பனிமலையில் இராணுவவாகனங்களைத் தாக்க மனிதவெடிகுண்டாகப் போவதும் போகிற இடத்தில் இந்தியாவைக் குப்பை மேடாக்காதே என்று பேனர் பிடிப்பதும் தமிழ்சினிமாவுக்குப் புதிது. போன இடத்தில் சும்மா இருக்காமல் ஆர்யாவையும் கார்த்திகாவையும் வைத்து ஒரு பாடலையும் படமாக்கிவிட்டார்கள். தாங்கள் ஏற்றுக்கொண்ட போராளிகள் வேடத்துக்கு இருவருமே மரியாதை செய்திருக்கிறார்கள்.
 
இரயில்வேதொழிலாளியாகவும் தூக்குப்போடுகிறவராகவும் நடித்திருக்கிற விஜயசேதுபதி, மிக நுட்பமான உடல்மொழிகள் மூலம் தன்னுடைய நடிப்புத்திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிட மனு கொடுத்ததற்கான காரணத்தைச் சொல்லுமிடத்தில் திரையரங்கே அதிரத்தான் செய்தது. மரணதண்டனையையே கொலை என்று விஜய்சேதுபதி சொல்வதும் ஷாம் அவருக்கு விளக்கம் கொடுப்பதும் கவனிக்கவேண்டிய இடங்கள்.
 
மரணதண்டனைக்காக மேடையைத் தயார் செய்வதைப் பார்த்துவிட்டு, திட்டமிட்டுச் செய்வது கொலை என்பார்கள் என்னைக் கொல்ல இவ்வளவு பக்காவாகத் திட்டமிடுகிறீர்களே இது எந்தவகை என்று ஆர்யா கேட்குமிடம் கைதட்டல் வாங்குகிறது. மரணதண்டனை நிறைவேற்ற எவ்வளவு நடைமுறைகள் இருக்கின்றன என்பதை விளக்கமாகக் காட்டியிருப்பதன் மூலம் ஒரு உயிரை வாங்க எவ்வளவு திட்டமிடுகிறார்கள் என்று காட்டியிருக்கிறார் இயக்குநர்.

தப்பு செய்கிறவனையெல்லாம் தொடர்ந்து தூக்கில் போட்டுக்கொண்டேயிருந்தால் சில ஆண்டுகளில் நாட்டில் குற்றமே இருக்காது என்று வாதாடும் ஷாம், காவல்துறை அதிகாரியின் மிடுக்கோடு கடைசிவரை இருக்கிறார். அரசாங்கத்தின் பிரதிநிதியாக அச்செடுத்தாற்போல் இருக்கிறார். அவருடைய தோற்றம் நடிப்பு ஆகியனவற்றில் நல்ல முத்ர்ச்சி இருக்கிறது. தூக்குப்போடும் தேதி என்று ஒருநாளை அறிவித்துவிட்டு அதற்கு முன்பாகவே தூக்குப்போடத் திட்டமிடுவது காவல்துறையினரின் சமயோசித புத்தியைக் காட்டும் காட்சிகள். ஆனால் காவல்அதிகாரியான ஷாம், நீதிபதி உட்பட எல்லோரையும் சிறைக்குள் கட்டாயமாக இருக்கவைக்கிறார் என்பது எதார்த்தமாக இல்லை.
 
விஜயசேதுபதி வேடத்தின் மூலம் வேலைநிரந்தரம் கோரிப்போராடும் இரயில்வேதொழிலாளர்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். எந்நேரமும் குடித்துவிட்டு வீணாய்ப்போகும் மகனுக்கு பாலியல்தொழிலாளியாக இருந்தாலும் பரவாயில்லை ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்துவைத்து அவளைக் குடும்பப்பெண்ணாக மாற்றிவிடலாம் என்று விஜயசேதுபதியின் அம்மா ரமா சொல்லும் காட்சியில் இயக்குநரின் மாறுபட்ட பார்வை தெரிகிறது.
 
ஸ்ரீகாந்த்தேவாவின் பின்னணிஇசை, என்,கே.ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு செல்வகுமாரின் கலைஇயக்கம் ஆகியனவும் படத்துக்குப் பலமாக அமைந்திருக்கிறது. ஆர்யா, விஜயசேதுபதி, ஷாம், கார்த்திகா ஆகிய நால்வரும் சொல்லிப்பெருமைப்பட்டுக்கொள்ளும் படமாக இருக்கும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்