டிமான்ட்டி காலனி படம் எப்படி?

சென்னைக் கடற்கரையோரம் உள்ள பட்டினப்பாக்கத்தில்  வசிக்கும் நாயகன் அருள்நிதி அவருடைய நண்பர்கள் ரமேஷ்திலக், ஷனத், அபிஷேக்ஜோசப் ஆகியோர் ஆளுக்கொரு வேலை செய்துகொண்டு வாழ்கிறார்கள். இவர்களும் மாலையானால் டாஸ்மாஸ்க்கில் ஒன்றுகூடுகிற இளைஞர்கள்தாம்.

அப்படிக்குடித்துவிட்ட ஒரு பொழுதில், மழைபெய்யும் இரவில், வீட்டுக்குப் போகாமல் எங்காவது போகலாம் என்று பேசுகிறார்கள். நால்வரில் ஒருவர் உதவிஇயக்குநர். அவர் ஒரு பேய்ப்படத்துக்கான திரைக்கதை எழுதிவைத்திருக்கிறார். அதனால் அவருக்குப் பேய் உலவும் என்று சொல்லப்படுகிற டிமாண்ட்டிகாலனி பங்களாவுக்குப் போக ஆசை. இதை நண்பர்களிடம் அவர் சொல்கிறார். ஒருவர் மறுக்க மற்றவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

எல்லோரும் அங்கு போகிறார்கள். போனஇடத்தில் நாயகன் அருள்நிதிக்கு அங்கு பேய் இருக்கிற உணர்வு வருகிறது. எல்லோரையும் கூட்டிக்கொண்டு வந்துவிடுகிறார். அங்கு போனவர்கள் உயிருடன் திரும்பியதே இல்லை என்று சொல்லப்படுகிற நேரத்தில் அவர்கள் போய்விட்டு அந்தவீட்டில் உள்ள ஒரு விலையுயர்ந்த பொருளையும் எடுத்துக்கொண்டு வந்துவிடுகிறார்கள். அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதுதான் படம்.

அருள்நிதி முந்தைய படங்களைக்காட்டிலும் பக்குவப்பட்டிருக்கிறார். நடனம் ஆடுவதும் பயப்படாதது போல நடிப்பதும் உண்மையிலேயே பயப்படுவதும் ஆகிய எல்லா இடங்களிலும் தவறாகத் தெரியவில்லை. நண்பர்களாக நடித்திருக்கும் ரமேஷ்திலக், ஷனத், அபிஷேக்ஜோசப் ஆகியோரும் தங்குளுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைக் குறைவின்றி செய்திருக்கிறார்கள். நாடிசோதிடராக எம்.எஸ்.பாஸ்கர், திரைப்படத் தயாரிப்பாளராக சிங்கம்புலி, ஜில்லாக நடித்திருக்கும் மதுமிதா (அந்தப்பாத்திரம் எதற்கு?) ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள்.


பேய்ப்படங்களுக்குரிய  விளக்குகள் அணைவது திடீரென சத்தம் வருவது, அமைதியாக இருந்துவிட்டு திடீரென பின்னணிஇசை ஒலிப்பது போன்ற எல்லா அம்சங்களும் இந்தப்படத்திலும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. பூனை மட்டும்தான் குறுக்கே போகவில்லை.

தொலைக்காட்சியில் பேய்ப்படம் போட்டுப் பார்க்கலாம் என்றால் அதில் இவர்களே தெரிவதும் எற்கெனவே வந்ததுதான். டிமாண்ட்டி என்கிற போர்த்துக்கீசியப் பெரியமனிதர் அவருடைய மனநலம் தவறிய மனைவி அவருக்கு வருகிற சிக்கல் என்கிற பழையகதையில் பெரிய சுவாரசியம் எதுவும் இல்லை.

தூங்கிக்கொண்டிருக்கிறார் என்று நினைக்கிற நண்பர் இறந்துபோய்விட்டார் என்பதும் கடைசியில் அருள்நிதி தப்பிவிட்டாரா? இல்லையா? என்பதும்தான் படத்தில் திருப்புமுனைக்காட்சிகள்.

கேபாஜெர்மியாவின் இசையில் வாடாமச்சி பாடல் கேட்கிற மாதிரி இருக்கிறது. பின்னணிஇசை பேய்ப்படத்துக்கேற்ப இருக்கிறது. அரவிந்தசிங்கின் கேமிரா அவ்வப்போது சென்னையைப் பருந்து போலப் பறந்து பார்க்கிறது. ஒரு பங்களா மற்றும் பட்டினப்பாக்கம் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டுக்குள்ளேயே மொத்தப்படத்தையும் எடுத்துமுடித்துவிட்டார்கள்.

இதுபோன்ற பேய்ப்படங்களில் கடைசியில் நடந்ததெல்லாம் பேயின் வேலை இல்லை. மனிதர்களின் வேலைதான் என்று சொல்லி முடிப்பார்கள். அண்மைக்காலமாக எல்லாப்படங்களிலும் பேய்தான் என்றே வெளிப்படையாகச் சொல்லுகிறார்கள். இந்தப்படத்திலும் அப்படித்தான், பேய் இருக்கிறது, நாடிசோதிடம் சொல்வதெல்லாம் உண்மை என்கிற கருத்துகளைத்தான் சொல்லியிருக்கிறார்கள்.

படத்தில் நாயகியே இல்லை. நாயகி இல்லாமல் பேயை நம்பி மட்டுமே படத்தை எடுக்க நினைத்தது இயக்குநர் அஜய்ஞானமுத்துவின் துணிவுதான். படத்தில் கடைசிக் கொஞ்சநேரம் இருக்கிற வேகம் தொடக்கத்திலிருந்து இருந்திருந்தால் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும்.

Demonte Colony Timepass Review:

Do you like the story?

Please Appreciate the Author by clapping!