தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ்!

ஹிந்தியில் முதல் பாகத்தில் ஹிட் அடித்த படம் தனு வெட்ஸ் மனு. ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் மாதவன், கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த படத்தின் தொடர்ச்சியாக வந்துள்ள படம் தான் தனி வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ். படத்தின் ஆரம்பத்தில் லண்டனில் வசிக்கும் டாக்டரான மாதவனும், கங்கனா ரனாவத்துக்கும் இடையே ஏற்படும் பிரச்னை மனநல மருத்துவரிடம் கவுன்சிலிங்கிற்கு செல்வதிலிருந்து ஆரம்பமாகிறது. மாதவனை பிரிந்து இந்தியாவிற்கு திரும்புகிறார் கங்கனா.

மாதவனை மனநல மருத்துவமனையில் அனுமதிக்கிறார்கள். பின்னர் இந்தியா வரும் மாதவனுடன் கங்கனா ரனாவத் இணைந்தாரா இல்லையா என்பது தான் மீதி கதை. இந்த படத்தை பொறுத்தவரையில் மாதவினின் முதிர்ச்சியான நடிப்பு ரசிக்க வைக்கிறது. திமிரான வெளிநாட்டு கலாச்சாரத்தில் உள்ள பெண்ணாக கங்கனா. இந்தியா திரும்பியவுடன் பழைய நண்பர்களை சந்திப்பது, வீட்டுக்குள் யாருக்கும் தெரியாமல் குடிப்பது என வெளிநாட்டு பெண் காதாபாத்திரத்தில் பொருந்துகிறார் கங்கனா.

இந்தியாவிற்கு வந்து மாதவனை மனநல மருத்துவமனையில் சேர்த்துவிட்டேன் என மாதவனின் உறவினர்களிடம் கூறும் போதும் சரி, மாதவனுக்கு போன் செய்யலாமா என குழந்தைகளிடம் கேட்கும் போது சரி குறும்புத்தனம் கலந்த காதல் காட்டுகிறார் கங்கனா. இந்தியாவுக்கு திரும்பும் மாதவன் வீட்டிலேயே இருக்கிறார். ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி பல்கலைகழகத்துக்கு செல்லும் மாதவன் அங்கே கங்கனாவை போல் உள்ள டட்டூ எனும் விளையாட்டில் ஆர்வமுள்ள பெண்ணை பார்க்கிறார். அந்த பொண்ணும் கங்கனா தான். இரட்டை வேடம் என்றாலும் இரண்டு காதாபாத்திரங்களுக்கும் இடயே அத்தனை வித்தியாசங்கள்.

டட்டூ ஹரியானவை சேர்ந்த பெண், மாதவன் டட்டூவை பின் தொடர்வதை அறிந்து ஹாக்கி பேட்டால் அடிப்பது, பின்னர் உண்மையறிந்து மாதவனுக்காக பரிதாப்படுவது என ஸ்கோர் செய்கிறார் கங்கனா ரனாவத். இதற்கிடையே மனுவாக இருக்கும் கங்கனா வீட்ட்டிற்கு பெண் பார்க்க வருபவரிடம் குளியல் அறையிலிருந்து துண்டோடு வந்து அமர்ந்து கேள்வி கேட்பது என ரகளை செய்கிறார்.

இப்படியே நகரும் கதையில் மாதவனுக்கும் டட்டூவுக்கும் இடையே காதல் மலர்கிறது. இதனையறிந்த மனு மாதவனிடம் வந்து கேட்க. நம்மால் சேர்ந்து வாழமுடியாது பிரிந்து வாழ்வது தான் சரி என விவாகரத்துக்கு தான் வழி என்று கூறிவிடுகிறார். ஒரு கட்டத்தில் டட்டூவை போல வேடமிட்டு என்னை ஏற்று கொள்ளுங்கள் என சொல்லும் போது மாதவன் இல்லை என மறுப்பது எமோஷனல் போராட்டங்கள். இவர்களைதவிர கதையில் வரும் பாப்பீ எனும் மாதவனின் உறவினர் காதாபாத்திரம், மனு வீட்டில் இருக்கும் வழக்கறிஞர் கதாபாத்திரம் ஆகியவை கலகலக்க வைக்கின்றன.

சமூக பிரச்னைகளை பேசும் இடமாக டட்டூவின் வீடு, அங்குள்ள சாதி மற்றும் கெளரவ கொலைகளை போகிற போக்கில் பேசிவிட்டு செல்கிறார்  இயக்குனர். இறுதியில் மாதவன் டட்டூவை மணந்தாரா? இல்லை மனுவுடம் மீண்டும் இணைந்தாரா என்பது தான் க்ளைமாக்ஸ்.

சாதாரன குடும்ப சண்டை, விவாகரத்து, மீண்டும் காதல் என வழக்கமான கதையை வித்தியாசமாக சொல்லினாலும் மனைவியை போல் உள்ள பெண்ணை கண்டதும் காதல் வருவது கொஞ்சம் அதிகம் தான். அதுமட்டுமின்றி இந்திய பாரம்பரிய குடும்பத்தில் இருந்த மனுவுக்கு இந்திய கலாச்சாரம் தெரியாமல் குளியல் உடையோடு வீட்டுக்கு வந்தவர்களிடம் திமிராக பேசுவதெல்லாம் கொஞ்சம் முகம் சுழிக்க வைக்கிறது. மற்றபடி தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ். கணவன் மனைவி சண்டையின் புதிய பரிணாமம்.

ச.ஸ்ரீராம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!