இனிமே இப்படித்தான் படம் எப்படி?

சந்தானத்துக்கு மூன்றுமாதங்களுக்குள் திருமணம் செய்தாக வேண்டும் என்று சோதிடத்தில் சொல்லிவிடுகிறார்கள். அதனால் அவருடைய அம்மா அப்பா அவசரஅவசரமாகப் பெண் பார்க்கிறார்கள். அவர்கள் ஒரு பெண்ணைப் பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். அதற்குள் சந்தானத்துக்கு நாயகி மீது காதல் வந்துவிடுகிறது. காதலியைக் கல்யாணம் செய்தாரா? நிச்சயிக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்தாரா? என்று சொல்வதுதான் படம்.

ஏற்கெனவே பல படங்களில் பாத்துவிட்ட கதை மற்றும் காட்சிகள் அதிகம் இருக்கின்றன என்றாலும் சந்தானம் தன்னுடைய நகைச்சுவை வசனங்களால் மொத்தப்படத்தையும் இலகுவாக நகர்த்திச் செல்கிறார். அவர் ஏற்கெனவே நகைச்சுவைநடிகராவும் இதுபோன்று ஏராளமான வசனங்கள் பேசி நம்மைக் கவந்£த்திருப்பதால் அவர் பேசும்போதெல்லாம் ரசிக்கமுடிகிறது, அதேநேரம் இவரே பேசிக்கொண்டிருக்கிறாரே கதாநாயகனைக் காணவில்லையே எனகிற எண்ணமும் வரத்தான் செய்கிறது.

படத்தின் தொடக்கத்தில் வீட்டில் அப்பா ஆடுகளம்நரேனைக் கேலி செய்வதில் தொடங்கி காதலி ஆஷ்னாசவேரி, விடிவிகணேஷ் உள்ளிட்ட நண்பர்கள், தாய்மாமாவாக நடித்திருக்கும் தம்பிராமய்யா ஆகிய எல்லோரையும் சகட்டுமேனிக்கு நையாண்டி செய்துகொண்டேயிருக்கிறார். ஒவ்வொரு முறை அவர் வசனம் பேசும்போதும் வாய்விட்டுச் சிரிக்கவைக்கிறார்.

கதாநாயகனாக நடிப்பதால் பாடல்களில் நன்றாக நடனம் ஆட முயன்றிருக்கிறார், ஓரிடத்தில் வருகிற சண்டையிலும் நன்றாகச் செய்திருக்கிறார். மற்றபடி வழக்கமான சந்தானம்தான். அவருக்குப் பல படங்களில் நகைக்சுவை வசனங்களை எழுதிக்கொடுத்த முருகனும் ஆனந்துமே இந்தப்படத்தின் இயக்குநர்கள் என்பதால் ஒவ்வொரு சொல்லிலும் சிரிப்புவெடிகள் வெடிக்கின்றன. காதலில் சிக்கல் ஏற்பட்டு சோகமாக இருக்கும்காட்சிகளிலும் பாட்டுப்பாடும் காட்சிகளிலும் கூட நன்றாக நடித்திருக்கிறார் சந்தானம்.

நாயகி ஆஷ்னாசவேரி, பல பையன்கள் பின்னால் சுற்றினாலும் எவரையும் திரும்பிப்பார்க்காத தெனாவெட்டான நாயகி. அவரிடம் சந்தானம் காதல்சொல்லும் நிகழ்ச்சியை தோழிகளிடம் சொல்லும் போதும், அதேபாணியில் அவர் தன்னுடைய காதலைச் சொல்லதும், தோழியின் நண்பன் முகத்தில் அமிலம் வீசுவதும் என்று எல்லாக்காட்சிகளிலும் தேர்ச்சிபெறுகிறார். வசனக்காட்சிகளைக் காட்டிலும் பாடல்காட்சிகளில் அதிகஅழகாகத் தெரிகிறார்.

இன்னொருநாயகியாக நடித்திருக்கும் அகிலாகிஷோரின் வேடம் சிறிது என்றாலும் அதைப் பொருத்தமாகச் செய்து இவரை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தியிருக்கலாமே என்று சொல்லவைத்துவிடுகிறார்.

நாயகனாக நடிக்கும்போது கூடவே ஒரு நண்பனை வைத்திருக்கும் தமிழ்த்திரையுலக வழக்கப்படி இவரும் ஒரு நண்பனை உடன் வைத்திருந்தால், நேற்றுவரை இன்னொருநாயனுக்கு நண்பராக இருந்த சந்தானத்துக்கு இந்தப்படத்தில் இவர் நண்பர் என்று சொல்லிவிடக்கூடும் என நினைத்து ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு நண்பரை உடன் வைத்துக்கொள்கிறார். அவர்களில் விடிவிகணேஷூம், தாய்மாமாவாக நடித்திருக்கும் தம்பிராமய்யாவும் அதிகநேரம் வருகிறார்கள். எல்லோரும் சிரிக்கவைக்க உதவுகிறார்கள். நண்பர்களின் உருவத்தைக் கிண்டல் செய்து பேசுவதை சந்தானம் குறைத்துக்கொள்வது நல்லது. படம் முடியும்போது நடக்கும் அதிரடித் திருப்பம் யாரும் எதிர்பாராதது.

அப்பாவாக நடித்திருக்கும் ஆடுகளம்நரேன், அம்மா பிரகதி, நாயகியின் தந்தை பெப்சிவிஜயன் உட்பட படத்தில் இருக்கும் எல்லோரும் தங்களுக்கான வேடங்களைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.

காதலி மற்றும் நிச்சயிக்கப்பட்ட பெண் ஆகிய இருவரையும் சேர்த்து உணவுவிடுதியொன்றில் வைத்திருக்கும் காட்சி வெடிச்சிரிப்பு, அப்படியே இன்னும் சில காட்சிகள் வைத்திருக்கக்கூடாதா என்று நினைக்கவைத்துவிடுகிறார்கள்.

சந்தோஷ்தயாநிதியின் இசையில் பாடல்கள் கேட்கிற மாதிரி இருக்கின்றன, பின்னணிஇசையும் பொருத்தமாக இருக்கிறது. கோபிஜெகதீசுவரனின் ஒளிப்பதிவும் படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறது.

இயக்குநர்கள் முருகன் ஆனந்த் (படத்தில் முருகானந்த் என்று பெயர் போடுகிறார்கள்) ஆகியோருக்கு இது முதல்படம். சந்தானம் கதாநாயகனாக நடித்திருப்பதால் இந்தப் பழைய மெல்லியகதையும் காட்சிகளும் ரசிக்கிற மாதிரி அமைந்துவிட்டன. காட்சிகளிலும் வசனங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். கதைத் தேர்விலும் இதே கவனத்தைச் செலுத்துவதுதான் அவர்களுக்குப் பாதுகாப்பு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!