வெளியிடப்பட்ட நேரம்: 12:23 (13/06/2015)

கடைசி தொடர்பு:15:57 (13/06/2015)

ரோமியோ ஜூலியட் படம்எப்படி?

உடற்பயிற்சிக்கூடமொன்றில் பயிற்சியாளராக இருக்கும் ஜெயம்ரவிக்கு திரைப்பிரபலங்கள், மத்தியஅமைச்சர் உள்ளிட்ட அரசியல்வாதிகள், பெரும்பணக்காரர்கள் ஆகியோரிடன் நல்லபழக்கம் இருக்கிறது. அதனால் அவரைப் பெரும்பணக்காரர் என்று நினைத்துக் காதலிக்கிறார் ஹன்சிகா. பெற்றோர் இல்லாமல் தனியாக வாழும் அவருக்கு மத்தியதரவாழ்க்கையிலிருந்து விடுபட்டு உயர்தரவாழ்க்கைக்குப் போய்விட ஆசை. அதனால் பணக்காரர் என்று நம்பி ஜெயம்ரவியைக் காதலிக்கிறார்.

சில காட்சிகளிலேயே ஜெயம்ரவி மாதம்பதினைந்தாயிரம் சம்பளம் வாங்குகிற உடற்பயிற்சிக்கூடப் பயிற்சியாளர் என்பது தெரிந்துவிடுகிறது. அதனால் ஜெயம்ரவியை விட்டுவிலகுகிறார் ஹன்சிகா. அவருடைய பிரிவை ஏற்றுக்கொள்ள முடியாத ஜெயம்ரவி, ஹன்சிகாவுக்கு வைக்கும் நிபந்தனையும் அதை நிறைவேற்ற அவர் போராடுவதும், அதன்பின் என்ன நடக்கிறது? என்பதும்தான் படம்.

ஜெயம்ரவி நீண்டஇடைவெளிக்குப் பிறகு காதல்நாயகனாக நடித்திருக்கிறார். ஹன்சிகாவைப் பார்த்ததும் காதல்கொள்கிறார். சில காட்சிகள், ஒரு பாடல் ஆகியனவற்றுக்குப் பிறகு காதல்தோல்வி காரணமாக சோகமாக இருக்க முயன்றிருக்கிறார். காதலியை நோகடிக்கும் வில்லன் வேலையையும் செய்திருக்கிறார். உடற்பயிற்சிக்கூடத்தின் பயிற்சியாளர் என்பதற்குப் பொருத்தமாக உடலை வைத்திருக்கிறார். அது காதல்காட்சிகளுக்கேற்றாற்போல வளையமறுக்கிறது. ஹன்சிகாவை அவர் செய்யும் சித்ரவதைகளில் ஹன்சிகாவைவிட பார்க்கிறவர்கள் வதைக்குள்ளாவார்கள் என்பது நிச்சயம். குறிப்பாக போனில், இன்னும் சத்தமா, இன்னும் சத்தமா என்று ஜெயம்ரவி கத்தும்போது.

ஹன்சிகாவை அழகுப்பதுமையாகக் காட்ட அதிகமுயற்சி செய்திருக்கிறார்கள். ஜெயம்ரவியைப் பார்த்து வெட்கப்படும் நேரத்திலும் அவர் பணக்காரர் இல்லை என்று தெரிந்ததும் உதறும் இடத்திலும் அதன்பின்னர் வாழ்க்கை பற்றித் தெரிந்து கதறும் இடத்திலும் நடிப்பதற்குக் கிடைத்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். கடைசியில், முதல்ல இருந்து தொடங்கலாமா? என்று ஜெயம்ரவி கேட்கிறபோது ஹன்சிகாவின் நடிப்பு, சிறப்பு.

படத்தில் நகைச்சுவை நடிகரின் தேவையை விடிவிகணேஷ் நிறைவேற்றியிருக்கிறார். ஹன்சிகாவிடம் போனில், நான் விடிவிகணேஷ், சிம்பு ப்ரெண்டு என்று சொல்லும்போது படத்தைத் தாண்டி சிரிப்பு வருகிறது. திரைப்படத்தயாரிப்பாளர் அதன்பின் ஆர்யாவை வைத்து படம் இயக்கும் இயக்குநர் என்று அவருடைய வேடம் இருக்கிறது. எல்லா இடங்களிலும் அவர் ஜெயம்ரவிக்கு ஆரோசகராக இருக்கிறார். சிரிக்கவைக்கிறார். மதுக்குடித்துவிட்டு ஜெயம்ரவி செய்யும் அட்டகாசங்களைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் தடுமாறும் இடம் பழசு என்றாலும் சிரிப்பு.

வழக்கமாகத் தமிழ்த்திரைப்படங்களில் நாயகியின் வீடு, வசதி, கல்லூரி உட்பட மற்ற  விவரங்களைத் தேடி நாயகனும் அவருடைய நண்பர்களும் அலைவார்கள். இந்தப்படத்தில் அப்படியே திருப்பிப்போட்டு ஜெயம்ரவி பற்றிய விவரங்களை ஹன்சிகாவின் தோழிகள் சேகரிக்கிறார்கள். ஜெயம்ரவியைப் பின்தொடர்ந்து போய்க்காதலிக்கிறார். அதன்பின் எல்லாமே திரும்பிவிடுகிறது. இதுவரை வந்த படங்களில் நாயகியின் தந்தைகள் பேசிய வசனங்களை இந்தப்படத்தில் ஹன்சிகாவே பேசுகிறார். கடைசியில், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி என்கிற ஒரேபாடலில் அவரைத் திருந்த வைத்துவிடுகிறார்கள். வைக்கம்விஜயலட்சுமியின் குரலில் அந்தப்பாடல் நன்றாக இருக்கிறது.

படத்தில் இன்னொரு நாயகியாக பூனம்பாஜ்வா இருக்கிறார். ஒரு பாடல் மற்றும் சில காட்சிகளில் வந்தாலும் அவர் ரசிகர்களை ஈர்ப்பார். ஹன்சிகாவின் தோழிகளும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

எனக்கொரு பொண்ண செட் பண்ணிக்குடுத்துட்டுப்போ என்று நாயகியிடம் நாயகன் கேட்பதை மட்டும் புதிதாக வைத்துவிட்டு மற்றதெல்லாம் நாயகியின் தோழிகள் சொல்வது போல பழையசீன்களாகவே இருக்கின்றன. கதையே அப்படித்தான் எனும்போது காட்சிகள் மட்டும் எப்படியிருந்துவிடும்? அவ்வளவு பெரியபணக்காரக்குடும்பத்தில் திருமணநிச்சயம் செய்துவிட்டு திருமணத்துக்காகப் போகிற நேரத்தில், இந்தக்கல்யாணம் வேண்டாம் என்று சொல்லி ஓடுகிற காரிலிருந்து இறங்கிச்செல்கிறார் ஹன்சிகா, போகட்டும் விடு என்கிறார் வம்சிகருஷ்ணா. இதெல்லாம் நம்பமுடியாததாக இருக்கிறது. பணக்காரர்கள் தங்கள் கவுரவத்தை இதற்காகவெல்லாம் விட்டுக்கொடுத்துவிடுவார்களா?

இமானின் இசையில் பாடல்கள் கேட்கவைக்கின்றன. அனிருத் பாடியிருக்கும் டண்டணக்கா படத்துக்குப் பலம். அழகான காதல்கதையாக இருந்திருக்கவேண்டிய படம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்