எலி - படம் எப்படி? | Eli Movie Review!

வெளியிடப்பட்ட நேரம்: 10:59 (20/06/2015)

கடைசி தொடர்பு:13:37 (22/06/2015)

எலி - படம் எப்படி?

தான் திரையில் வந்தாலே மக்கள் சிரித்துவிடுவார்கள் படத்தில் வேறு எதைப்பற்றியும் அவர்கள் கவலைப்படமாட்டார்கள் என்று நம்பி வடிவேலு நடித்திருக்கும் படம். படத்தின் தொடக்கத்திலேயே 1960 இல் நடக்கும் கதை என்று சொல்லிவிடுகிறார்கள். அப்போது தங்கம் வைரத்தைவிட உயர்ந்த பொருளாக இருப்பது சிகரெட். அதற்கு அரசாங்கம் தடைவிதித்திருக்கிறது. ஆனாலும் மக்கள் திருட்டுத்தனமாக அதைப் பயன்படுத்துகிறார்கள். அதை வெளிநாட்டிலிருந்து கடத்திக்கொண்டு வரும் கொள்ளைக்கூட்டத்தைப் பிடிக்க காவல்துறை திட்டமிடுகிறது. முள்ளை முள்ளால் எடுக்கவேண்டுமென்கிற அரதப்பழசான விதிப்படி கடத்தல்கூட்டத்தைப் பிடிக்க ஒரு திருடனை அனுப்புகிறார்கள். அந்தத் திருடன்தான் வடிவேலு.

படம் முழுக்க வடிவேலு, வடிவேலு, வடிவேலு தான். எல்லாக் காட்சிகளிலும் அவரே இருக்கிறார். நிறையப் பேசுகிறார், அவருடைய உடல்மொழியைப் பார்த்தாலே சிரிக்கிற காலம் முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் அவர் தன் உடல்மொழியை மட்டும் நம்பிக்கொண்டிருக்கிறார்.

தொடக்கத்தில் எலி என்ற பெயருடன் விநோதமான முடியலங்காரத்துடன் வடிவேலு பல திருட்டுகளைச் செய்கிறார். ஒவ்வொன்றும் தனித்தனிக் காட்சிகளாகவே இருக்கின்றன. திருடுவதற்கு அவரும் அவருடைய கூட்டாளிகளும் பயன்படுத்துகிற உத்தி மிகப்பழைய உத்திகள் என்பதால் சிரிப்புக்குப் பஞ்சமாகிவிட்டது. வங்கியொன்றில் கொள்ளையடிக்கப் போகும் காட்சி உட்பட வடிவேலு திருடப்போகும் காட்சிகளில், 1960 போல் காட்டவேண்டும் என்பதற்காக மெனக்கெட்டிருப்பதில் பாதியைக் காட்சி உருவாகத்திலும் காட்டியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

காவலதிகாரி வீட்டிலேயே திருடும்காட்சியும் ஏற்கெனவே பார்த்த மாதிரி இருக்கிறது. அதன்பின்னர் அவர் கொள்ளைக்கூட்டத்தில் ஒருவராகச் சேர்ந்துவிடுகிறார். எம்ஜிஆர் படங்களில் வருகிற கொள்ளைக்கூட்டம், அதன் பாஸ், அடியாட்கள், சீட்டாட்டம் எல்லாவற்றையும் அப்படியே வைத்திருக்கிறார்கள். அப்போது ரசிக்க முடிந்தவவை, இப்போது ரசிக்கமுடியாதவையாக இருக்கின்றன.

இடைவேளைக்குப் பிறகுதான் நாயகி சதா வருகிறார். இரண்டு பாடல்கள் மற்றும் இரண்டரைக்காட்சிகளில் மட்டும் நடித்திருக்கிறார். அவ்விரு பாடல்களிலும் தன் பங்கை நன்றாகச் செய்து ரசிகர்களை மகிழ்விக்கிறார். ஆராதனா படப்பாடலை அப்படியே எடுத்திருக்கிறார்கள். அந்தப்பாடலில் ராஜேஷ்கண்ணா இடத்தை வடிவேலுவால் நிரப்பமுடியவில்லை என்றாலும் ஷர்மிளாதாகூரின் இடத்தில் பாதியைப் பிடித்துவிடுகிறார் சதா.

படத்தில் கலைஇயக்குநர் தோட்டாதரணிக்குத்தான் அதிகவேலை, வங்கி, அஞ்சல்நிலையம், வானொலிநிலையம் மற்றும் கொள்ளைக்கூட்டத்தின் தலைமையகம் என்று 1960களில் இருப்பது போன்ற எல்லாவற்றையும் செட் போட்டிருக்கிறார். பழையபடங்களைப் பார்ப்பது போன்ற எண்ணத்தைக் கொண்டுவந்து தன் பங்கைச் சரியாக நிறைவேற்றியிருக்கிறார்.

வித்யாசாகரின் இசையில் பாடல்கள் கேட்கிற மாதிரி இருக்கின்றன. பின்னணிஇசை 1960 களைப் போலிருக்கவேண்டும் என்பதற்காகக் காதுகிழிகிற மாதிரி பின்னணிஇசை அமைக்கவேண்டுமா என்ன? அதுவும் வடிவேலு வருகிற காட்சிகளில் பின்னணிஇசையின் மூலமும் சிரிக்கவைக்கவேண்டும் என்று அவர் நிறைய உழைத்திருக்கிறார்.

படத்தில் வில்லனாக நடித்திருக்கும் பிரதிப்ராவத், காவலதிகாரியாக நடித்திருக்கும் ஆதித்யா ஆகிய இருவரும்தான் வடிவேலுவுக்கு அடுத்து அதிகக்காட்சிகளில் வருகிறார்கள். மகாநதிசங்கர், போஸ்வெங்கட், நான்கடவுள்ராஜேந்திரன், ராஜ்கபூர், முத்துகாளை உட்பட பல நடிகர்கள் சில காட்சிகளில் வந்துபோகிறார்கள்.

இயக்குநர் யுவராஜ்தயாளன், நாயகன் வடிவேலுவின் மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்துவிட்டார், அதனால் கதை மற்றும் திரைக்கதையில் போதியகவனத்தைச் செலுத்தவில்லை. நிறையச் செலவு செய்து அரங்குகளை அமைத்திருக்கிறார்கள் ஆனாலும் வானொலி இருக்கும் காலத்திய படமென்பதால் வானொலியில் ஒலிச்சித்திரமாகக் கேட்டுப் புரிந்துகொள்ளக்கூடிய அளவில் வசனங்கள் நிறைந்திருப்பதால் கண்களைவிடக் காதுகளுக்குக் கூடுதல் வேலை கொடுக்கவேண்டியிருப்பது பலவீனம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்