Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாபநாசம்

  பாபநாசத்தில் ஒரு கேபிள்டிவி ஆபரேட்டர், மனைவி மற்றும் இரண்டு பெண்குழந்தைகளோடு சந்தோசமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார். திடீரென அவர்கள் மிகப்பெரிய சிக்கல் ஒன்றை எதிர்கொள்கிறார்கள். சாமான்யமனிதர்கள் உடைந்து நொறுங்கிப் போய்விடுகிற அவ்வளவு பெரிய சிக்கலை அந்த எளியகுடும்பம் எவ்வாறு எதிர்கொள்கிறது? என்பதை நெஞ்சம் பதைபதைக்கச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஜீத்துஜோசப், மீண்டும் ஓர் எளியமனிதனாக வந்திருக்கிறார் கமல்.

அந்தவேடத்துக்குரிய நியாயங்களைச் செய்திருக்கிறார். அவர் கேபிள்ஆபரேட்டர் என்பதால், எல்லாத் திரைப்படங்களையும் பார்த்துவிடுகிறார், தமிழ் தாண்டி தெலுங்கு, கன்னடம், இந்தின்னு எல்லா பாஷைப்படங்களையும் புரியுதோ இல்லியோ பாத்துடறீங்க என்று மனைவி கௌதமி சொல்லும்போது, சினிமாவே ஒரு பாஷைதானே என்கிறார். கேபிளில் இரவு பதினோருமணிக்கு மேலாக ஒளிபரப்பாகும் படங்களைப் பார்ப்பவர், அம்மாதிரிப்படங்களை ஒளிபரப்புகிறவர் என்றெல்லாம் சொல்லி அவரைச் சாதாரணமனிதராகக் காட்டமுயல்கிறார்கள்.

அதோடு சாதாரணமனிதன் என்று திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தாலும், அவருடைய செயல்கள், பேச்சு ஆகியன முதிர்ந்தமனிதராகவே காட்டுகிறது. பாபநாசம் வட்டாரவழக்கையும் பொருத்தமாகப் பேசியிருக்கிறார் அவர் மட்டுமல்ல எல்லா நடிகர்களும் அதில் கவனமாக இருந்திருக்கிறார்கள். கமல், இயற்கைவிவசாயம், கல்விமுறை, அரசியல் என எல்லாவற்றையும் பேசுகிறார். தலைக்கு மேல் வளர்ந்த பெண்குழந்தைகளைக் கொண்டிருந்தாலும் கமல் நடிப்பதால், அவர் காதல்மன்னன்தான் என்பதற்காகவே சில காட்சிகளையும் வைத்திருக்கிறார்கள். சிரிப்பும் கிண்டலுமாக அந்தக்காட்சிகள் கலகலப்பூட்டுகின்றன. எப்போதும் சினிமாவையே பார்த்துக்கொண்டிருப்பதற்குத் திரைக்கதையில் நியாயம் சொல்லிவிட்டார்கள்.

அவருடைய மனைவியாக கௌதமி, தோற்றத்தில் முதிர்ச்சி தெரிந்தாலும் கமலைப் பார்க்கும் காதல்பார்வை தேவர்மகனை நினைவுபடுத்துகிறது. திடீரென ஏற்பட்டுவிட்ட அசம்பாவிதத்தை அவர் எதிர்கொள்ளும் விதத்தில் நல்லநடிகை என்பதையும் காட்டிவிடுகிறார். கஞ்சத்தனம் மிகுந்த அப்பாவைப் பாசமிக்க பெண்குழந்தைகள் என்னவெல்லாம் செய்யுமோ அவ்வளவும் இந்தப்படத்தில் இருக்கிறது. பெரியபெண்ணாக நடித்திருக்கும் நிவேதாதாமஸூம் சிறியபெண்ணாக நடித்திருக்கும் எஸ்தரும் கமல், கௌதமி ஆகிய இருவருக்கு இணையாக நடித்திருக்கிறார்கள். காவல்துறை ஐஜியாக நடித்திருக்கும் ஆஷாசரத், மிடுக்கான நடிப்பில் யார்இவர்? என்று கேட்கவைத்திருக்கிறார்.

எம்.எஸ்.பாஸ்கர், ஸ்ரீராம், கலாபவன்மணி, இளவரசு, அருள்தாஸ் உட்பட படத்தில் நடித்திருக்கும் எல்லோருமே தங்கள் வேலைகளைச் சரியாகச் செய்திருக்கிறார்கள். குற்றவாளி எப்படியும் ஒரு தடயத்தை விட்டுவிட்டுச் செல்வான் என்கிற அடிப்படையை மீறாமல், எவ்வளவோ புத்திசாலித்தனமாகத் திட்டமிட்டாலும் கமல் மாட்டிக்கொள்ளுகிற மாதிரி திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பது படத்துக்குப் பலமாக அமைந்திருக்கிறது. காவல்துறை அத்துமீறி நடந்துகொள்ளும்போது குழந்தைகள் உண்மையைச் சொல்லிவிடுவார்களோ என்கிற பதட்டத்தை ஏற்படுத்திவிட்டார்கள். குழந்தைகள் முன்னால் பெற்றோரை அடித்துநொறுக்குவது, பெற்றோர் முன்னால் குழந்தைகளை அடிப்பதும் கொடுமையான காட்சிகள். ஜிப்ரானின் இசையில் இரண்டுபாடல்களும் கேட்கிற மாதிரி இருக்கின்றன, அந்தப்பாடல்களுக்குள்ளும் கதை சொல்லிக்கொண்டிருப்பதால் அவை தனித்துத் தெரியவில்லை.

சுஜித்வாசுதேவின் ஒளிப்பதிவு, ஜெயமோகனின் வசனங்கள், சுகாவின் பங்களிப்பு ஆகியன படத்துக்குப் பலமாக அமைந்திருக்கின்றன. தொழில்நுட்பங்கள் அதிலும் குறிப்பாக நவீன கைபேசிகளால் நடக்கும் சிக்கலே இந்தப்படத்தின் மையச்சிக்கலுக்குக் காரணம். அதை வைத்துக்கொண்டு, இந்தநாடே நம்முடையதுதான் என்கிற எண்ணம் கொண்ட அதிகாரவர்க்கத்தினரை சாடியிருக்கிறார்கள். கடைசியில் கெளதமியிடம், பொய்யே பேசக்கூடாது என்று சொல்லி வளர்த்த என் குழந்தைகளுக்கு நானே பொய்பேசக்கற்றுக்கொடுத்துவிட்டேனே அதுவே உறுத்தலாக இருக்கிறது,

நீ பெரியமனசு இருக்கிறதால இப்படிச் சொல்றே இதுவே உன் இடத்தில் அந்தஅம்மா இருந்தா இப்படிப் பேசியிருப்பாங்களா? என்று கமல் பேசும் வசனங்கள் மட்டுமின்றி கடைசியில், ஐஜி குடும்பத்திடம், இந்த பாபாநாசத்துல முங்கி முங்கி எங்க பாவத்த கொஞ்சங் கொஞ்சமா கழிச்சிடறோம் என்று சொல்லிக் கமல் கலங்கும் காட்சி ஆகியன பொதுஒழுங்கு, சட்டம்ஒழுங்கு ஆகிய எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்குகிறது. தாங்களாக முன்வந்து எந்தத்தவறும் செய்யவில்லையென்றாலும், ஒரு மோசமான வினைக்கு எதிர்வினை ஆற்றப்போய் அல்லல்படுவோரை எண்ணிப்பார்க்கும்போது அவர்கள் செய்யும் தப்பைத் தப்பென்று சொல்லமுடியாத தர்மசங்கடமான நிலையை இந்தப்படம் ஏற்படுத்தும் என்பதில் மாற்றமில்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement