மாரி - படம் எப்படி? | maari film review

வெளியிடப்பட்ட நேரம்: 10:15 (18/07/2015)

கடைசி தொடர்பு:11:37 (18/07/2015)

மாரி - படம் எப்படி?

ஒரு பகுதியில் தாதாவாக இருக்கும் ஒருவனைக் கொலை செய்துவிட்டு இன்னொருவன் தாதாவாகிறான். அவனுக்குப் போட்டியாக இன்னொருவனும் இருக்கிறான், இருவருக்கும் இடையே மோதல் நடக்கும் கடைசியில் இந்த இருவரில் யார் கதாநாயகனோ அவரே வெல்வார், சொல்லும்போதே கொட்டாவி வரவழைக்கிற அரதப்பழசான திரைக்கதையில் இதுவரை தமிழ்த்திரைப்படங்களில் வராத புறா பந்தயம் என்றொரு புதியவிசயத்தை வைத்திருக்கிறார்கள். ஆனால் படத்துக்கு அது கொஞ்சமும் உதவவில்லை என்பதுதான் உண்மை.

காலையில் எழுந்ததும் புறாக்களோடு இருப்பது அப்புறம், வேலுஅண்ணன் என்கிற இன்னொரு பெரிய ரவுடி கொடுக்கும் வேலைகைளச் செய்வது, அப்புற்ம் அந்தப்பகுதிக்கடைகளில் மாமுல் வசூலிப்பது மாலையானால் மது அருந்திவிட்டு மட்டையாகிவிடுவது என்கிற மாரியின் ஒருநாள் வாழ்க்கையைக் குலைக்கிற மாதிரி அந்தப்பகுதிக்குப் புதிதாக வருகிற காவல்உதவிஆய்வாளர் நடந்துகொள்கிறார்.

 மாரி அயிட்டங்காரனாகக்கூட இல்லாத வயதில் நடந்த ஒரு கொலைக்காக அவரைக் கைதுசெய்து சிறையில் அடைக்கிறார். அதன்பின்னர் அந்த காவல்ஆய்வாளரே மாரியின் இடத்தை இட்டுநிரப்பும் அளவைவிட அதிகமாகக் கெட்டவனாகிறார். சிறையிலிருந்து வெளியே வந்து மாரி அவரை வென்று மறுபடி கேப்மாரியாகிறாரா இல்லையா என்பதுதான் படம்.மாரி என்கிற ரவுடி வேடத்திற்கான முறுக்கிய மீசை, கழுத்தில் தங்கச்சங்கிலிகள், குளிர்கண்ணாடி ஆகிய சகலசம்பத்துகளுடனும் தனுஷ் இருக்கிறார். மொத்தப்படத்திலும், தனுஷிடமே எதிர்கோஷ்டி மாமுல் கேட்கிற காட்சியில் தனுஷ் நடந்துகெள்ளும் விதமும் அவருடைய நடிப்பும் அவருக்குப் பலமான காட்சி என்று சொல்லலாம்.

அவரிடம் எப்போதும் அடிவாங்கும் அடிதாங்கி வேடத்தில் வினோத், அவரையே கிண்டல் செய்து கொண்டிருக்கும் சனிக்கிழமை என்கிற கதாபாத்திரத்தில் ரோபோசங்கர் ஆகியோர் தனுஷ் கூடவே இருக்கிறார்கள். படத்தின் பெரியஆறுதலாக இருப்பது அவர்கள் இருவரும்தான். அவ்வப்போது  அவர்கள் அடிக்கும் கமெண்ட்டுகளில் கொஞ்சம் சிரித்து இளைப்பாறிக்கொள்ளலாம்.

மாரியின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குப் புதிதாகக் குடிவருகிறது நாயகி காஜல்அகர்வாலின் குடும்பம், மாரியின் அட்டகாசத்தால் முதலில் அவரை எதிர்த்து அப்புறும் அவர்மேல் காதல்கொள்ளும் வழக்கமான கதாநாயகிவேடம் காஜலுக்கு. பார்த்துச் சலித்த காதல்காட்சிகள் அலுப்பூட்டுகின்றன. தனுஷே சொல்கிற மாதிரி சிவாஜி நடித்த புதியபார்வை படக் காட்சியை எடுத்திருக்கிறார்கள். பழைய காட்சியென்றாலும் பொருத்தமாக நடித்திருக்கிறார் காஜல்.காவல்உதவிஆய்வாளர் வேடத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியிருக்கும் பாடகர் விஜய்யேசுதாஸ், அந்தப்பாத்திரத்துக்குப் பொருத்தமாக இருப்பதோடு தேவையான அளவு நடிக்கவும் செய்திருக்கிறார் விஜய்யேசுதாஸ். தொடக்கக்காட்சிகளில், இவரிடம் என்னவோ இருக்கிறது என்பதுபோலக் காட்டுகிறார்கள் போகப்போக காற்றுப்போன பலூன் மாதிரி புஸ்ஸென்று போய்விடுகிறார். மாரிக்குப் பதிலாக அந்தப்பகுதியின் கட்டுப்பாடு என்னிடம் வரவேண்டும் என்று ஒரு காவல்உதவிஆய்வாளர் சொல்வதெல்லாம் அபத்தம். காவல்துறையினர் தமக்கு ஆதரவான ரவுடியை உருவாக்கலாம் அவர்களே ரவுடியாக முடியாது என்கிற அடிப்படையை அறியாமல் திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது.

தனுஷூக்கு எதிராளியாக வலம்வரும் மைம்கோபி, தனுஷூக்குக் குருவாக வருகிற சண்முகராஜன் ஆகியோர் கவனிக்கவைக்கிறார்கள்.

கெட்டவனைக் கதாநாயகனாக்கவேண்டுமென்றால் அவனைவிடக் கெட்டவனை வில்லனாக உருவாக்கவேண்டும் என்று நினைத்திருக்கிறார் இயக்குநர். தனுஷ் முப்பதுரூபாய் மாமுல் வாங்கினால் மைம்கோபி தொண்ணூறுரூபாய் மாமுல் வாங்குகிறார். அதாவது தனுஷ் வாங்கியதைக் காட்டிலும் இரண்டுமடங்கு அதிகம். இதனால் அந்தப்பகுதி மக்கள் தனுஷே சிறந்தவர் என்று முடிவுசெய்கிறார்கள். இந்தக்காட்சிகளில் தமிழகஅரசியலைக் குறியீடாக வைத்திருக்கிறார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது.நல்லவரா, கெட்டவரா என்று கேட்கும்போது சந்தேகமே இல்லை நான் கெட்டவன்தான் என்றும் கலப்படமான நல்லவனாக இருப்பதை விட சுத்தமான கெட்டவனா இருப்பதே மேல் என்றும் தனுஷ் பேசுவதைக் கேட்கும்போது, நல்லாயிருக்குப்பா உங்க நியாயம் என்கிற வேதனைதான் ஏற்படுகிறது. படத்தில் அனிருத்தும் இருக்கிறார்.

செஞ்சுருவேன் செஞ்சுருவேன் என்று படம் முழுக்க தனுஷைச் சொல்ல வைத்திருக்கும் இயக்குநர் பாலாஜிமோகன், கடைசிவரை அவரை எதுவுமே செய்யவைக்கவில்லை. தொடக்கத்தில் அவர் கொலை செய்வதாகச் சொல்லப்படுவதிலும் உண்மை இல்லை. நான் குத்தினேன், அவன் தப்பித்துவிட்டான், ரெண்டுநாள் கழிச்சு அவனை வேறு யாரோ கொன்னுட்டாங்க எனக்கு மாஸ் வந்துவிட்டது என்கிறார் தனுஷ், கடைசியிலும் வில்லன்கூட்டத்தைப் பிடிக்க சண்முகராஜனும் காளிவெங்கட்டும் காரணமாக இருககிறார்கள். ஆக மாரி கதையில் மாரி ஒன்றுமே செய்யவில்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்