ஆவிகுமார் - படம் எப்படி?

பேய்ப்படங்களுக்குரிய பின்னணிஇசை, பூனை, வெள்ளைஉடை உருவம், கொடூர முகங்களுடைய உருவங்கள் ஆகிய எதுவுமில்லாமல் வந்திருக்கும் பேய்ப்படம். ஆவிகளுடன் பேசுகிற கதாநாயகன் உதயாவுக்கு மட்டும் நாயகி கனிகாசவுத்ரி தெரிகிறார்.

நாயகி ஆவியானது எப்படி? என்பதை நாயகன் கண்டறிவதுதான் கதை. தொலைக்காட்சியொன்றில் ஆவிகளுடன் பேசும் நிகழ்ச்சியை நடத்திப் புகழ்பெற்றிருக்கும் உதயா, அந்நிகழ்ச்சியை மக்கள் முன் நடத்துவதற்காக மலேசியா செல்கிறார். அங்கு காவல்துறைஅதிகாரி நாசர் முன் நடக்கும் நிகழ்ச்சியில், ஏற்கெனவே நடந்த கொலையைச் செய்தது யார்? என்கிற விவாதம் வருகிறது.

அதன் விளைவாக உதயா அங்கேயே தங்கவேண்டி வருகிறது. வாடகைக்கு வீடு பிடித்துத் தங்கப்போக அந்தவீட்டில் நாயகி கனிகாசவுத்ரி ஆவியாக இருக்கிறார். நாயகன் கண்களுக்கு மட்டும் தெரியும் அவரைப் பற்றிய விவரங்களைச் சேகரிக்கத் தொடங்கும்போது பல சிக்கல்கள். உதயாவுக்கு இந்தப்படம் சொல்லிக்கொள்ளுமளவுக்கு அமைந்திருக்கிறது.

ஆவிகளுடன் பேசும் காட்சிகளில் தெம்பாக இருக்கிறார். காதல் மற்றும் தோல்விக்காட்சிகளில் இன்னும் முன்னேறவேண்டும். ஆவி என்று சொல்லமுடியாதபடி அழகான நாயகி கனிகாசவுத்ரி இருக்கிறார். அவர் ஆவி என்பதற்காக அவருடைய கூந்தலைப் பறக்கவிட்டதைத் தவிர வேறெதுவும் செய்யாத இயக்குநர் காண்டிபனைப் பாராட்டலாம்.

நான் சாகல என்று சொல்லிக்கொண்டு அறிமுகமாகும் நாயகி கனிகாவுக்கு இது அறிமுகப்படம். நல்லஅறிமுகமாக அமைந்திருக்கிறது. அழகு மட்டுமின்றி தனக்குக் கொடுத்த வேடத்தையும் சரியாகச் செய்திருக்கிறார். கம்பீரமான காவல்துறைஅதிகாரியாக நாசர். மூடநம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று சவால் விடுவதும், உண்மைகள் தெரிந்ததும் நாயகனுக்கு ஆதரவாக அவர் இருப்பதும் பொருத்தமாக இருக்கிறது.

நகைச்சுவைக்கென்று ஜெகன், முனிஸ்காந்த், தேவதர்ஷினி ஜோடி ஆகியோர் இருக்கிறார்கள். முனிஸ்காந்த் ஜோடிகளை வைத்துக்கொண்டு இரட்டைஅர்த்த வசனங்களை அதிகம் வைத்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் ராஜேஷ்கேநாராயணனின் ஒளிப்பதிவில் நாயகியும் மலேசியாவும் அழகு. விஜய்ஆண்டனி, ஸ்ரீகாந்த்தேவா ஆகிய இருவர் இசையமைத்தும் பாடல்கள் பெரிதாகக் கைகொடுக்கவில்லை. சொல்லவந்த விசயத்தைச் சரியாகச் சொல்லிவிட்டார் இயக்குநர் காண்டிபன். ஆனால் அவை ஏற்கெனவே தமிழில் வந்தபடங்களின் திரைக்கதை சாயலில் இருப்பதென்பது பெரியபலவீனம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!