Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாலு போலிஸூம் நல்லா இருந்த ஊரும் படம் எப்படி?

 திருட்டு, கொலை, கொள்ளைகள் மலிந்திருக்கும் கிராமம், அந்த ஊர் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு வீட்டுக்குப் போய், குளித்துவிட்டு. உடைமாற்றி, உணவுண்டு வரக்கூட நேரமில்லாமல் வேலை. வேறு ஊர்களில் இருக்கும் காவலர்களை அந்த ஊருக்கு மாற்றினால், அய்யய்யோ அந்த ஊருக்கா பணிமாற்றம்? என்று அலறுகிற நிலைமை. இப்படிப்பட்ட கிராமம், குடியரசுத்தலைவரால் பாராட்டப்பெற்று, இந்தியாவிலேயே சிறந்த கிராமம் என்று ஆண்டுதோறும் விருதுகள் வாங்குகிறது. இது எப்படி நடந்தது? என்பதுதான் படம் என்று எழுத முடியாதபடி இதை அப்படியே தலைகீழாகத் திருப்பிப்போட்டு இந்தப்படத்தை எடுத்திருக்கிறார்கள்.

தேநீர்க்கடையில் கல்லாப்பெட்டி கடைக்கு வெளியிலேயே இருக்கிறது, பால்காரர் தண்ணீர்கலக்காமல் பொய் சொல்லாமல் பால் ஊற்றுகிறார், என் ஊர் மக்கள், என்னிடம் பொருள் வாங்கிப்போவதில்லை நம்பிக்கையை வாங்கிப்போகிறார்கள் என்று சொல்லி கலப்படப் பொருளைத் திருப்பி அனுப்பும் மளிகைக்கடைக்காரர், சாலையில் கிடக்கும் பத்துப்பவுன் மதிப்புள்ள தங்கச்சங்கிலி இரண்டுநாட்களாக யாரும் எடுக்காமலே கிடக்கிறது, திருடவந்தவருக்கு ஊரே திரண்டு பணம் கொடுக்கிறது, அதை வாங்க மறுத்து அவர் அந்த ஊரிலேயே தங்கிவிடுகிறார், அங்குள்ள காவல்நிலையம் அரசுஅலுவலகம் போல காலை ஒன்பதிலிருந்து மாலை ஐந்துவரை நடக்கிறது, ஞாயிறு விடுமுறை.

அடடா இதுபோன்ற ஒரு ஊர் இருந்தால் எப்படி இருக்கும்? என்று ஏங்க வைக்கிற கிராமம் பொற்பந்தல். அங்கு காவலர்களாக இருக்கும் நாயகன் அருள்நிதி, சிங்கம்புலி, பகவதிபெருமாள், ராஜ்குமார் ஆகியோருக்கு இந்தக்கிராமத்தில் வேலையே இல்லை என்பதால், கலவரம் நடக்கிற இராமநாதபுரத்துக்கு மாற்றி உத்தரவு வருகிறது. அங்கு போகாமல் தப்பிக்க செய்யும் செயல்களால் அந்த ஊரே தலைகீழாக மாறிப்போகிறது.   

அந்தஊரைப்பற்றிய அறிமுகத்தோடு படம் தொடங்கும்போது புதியஅனுபவங்களைத் தரப்போகிறார்கள் என்கிற எண்ணம் வருகிறது. காவல்நிலையத்தில் உள்ளூர்க்காரர்களைக் கூப்பிட்டு வைத்துக்கொண்டு கிரிக்கெட் பார்ப்பது, கேரம்போர்டு விளையாடிக்கொண்டிருப்பது என்று கலகலப்பாகப் போகிறது. அந்த ஊர்க்கோயில் நிர்வாகத்தை நடத்தும் கல்லூரிமாணவர்கள் என்று வித்தியாசமாக இருக்கிறது.

இப்படியே கடைசிவரை சுவாரசியமாகக் கொண்டுபோய்விடுவார்கள் என்று நம்பிப்பார்த்தால் கடைசிவரை அதைத்தராமல் ஏமாற்றிவிட்டார்கள். நாயகன் அருள்நிதிக்குக் காவலர் வேடம் சரியாகப் பொருந்தியிருக்கிறது. ஆனால் திரைக்கதையில் அவருக்கு மிகக்குறைந்த பங்கே இருக்கிறது. காவலர் வேடம் கொடுத்துவிட்டு ஒரு நல்ல சண்டையையாவது கொடுத்திருக்கலாம், காதல்காட்சிகளாவது வைத்திருக்கலாம், அதுவும் கொடுக்காமல் அவரைக் குறைத்துவிட்டார்கள்.

நாயகனுக்கே இந்த நிலை என்றால் நாயகி ரம்யாநம்பீசனைப் பற்றிக் கேட்கவே வேண்டியதில்லை, ஒரேநாளில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கியிருப்பார்களோ என்று நினைக்கிற அளவு மிகக்குறைந்த காட்சிகளில் வருகிறார். இருக்கும் ஒரே காதல்பாடலையும் கறுப்புவெள்ளையில் வைத்துவிட்டார்கள். காவலராக நடித்திருக்கும் சிங்கம்புலிக்கு இந்தப்படத்தில் அதிக வாய்ப்பு.

சில இடங்களில் சிரிக்கவைத்திருக்கிறார். காவலர்கள், திருடராக வருகிற யோகிபாபு, ஊராட்சித்தலைவராக வருகிற திருமுருகன் உட்பட படத்தில் உள்ளவர்கள் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள். ஊர்த்தலைவரிலிருந்து ஊர்க்காரர்கள் மட்டுமின்றி மாணவர்கள், திருடர் வரை அவ்வளவு நல்லவர்களாக இருக்கும் எல்லோருமே ஒரேகாட்சியில் அவ்வளவு கெட்டவர்களாக மாறிவிடுகிறார்கள் என்பது எதார்த்தமாக இல்லை.

இசையமைப்பாளர் ரெஜினின் இசை, மற்றும் மகேஷ்முத்துசாமியின் ஒளிப்பதிவு ஆகியன படத்துக்குப் பலமும் சேர்க்கவில்லை பலவீனமும் ஆக்கவில்லை. நல்லகதைக்களத்தைத் தேர்வு செய்த இயக்குநர் திரைக்கதை மற்றும் காட்சிகளில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். நல்லா இருந்திருக்க வேண்டிய படம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்