ஆரஞ்சுமிட்டாய் படம் எப்படி? | orange mittai Movie Review

வெளியிடப்பட்ட நேரம்: 16:06 (31/07/2015)

கடைசி தொடர்பு:10:44 (01/08/2015)

ஆரஞ்சுமிட்டாய் படம் எப்படி?

சாகும்நாள் தெரிந்துவிட்டால் வாழும் நாட்கள் நரகமாகிவிடும் என்கிற பழங்கதையைப் பொய்யாக்கி, சாகும்நாள் தெரிந்தபிறகும் தன் விருப்பத்துக்கு வாழமுடியும் என்பதை புளிப்பும் இனிப்பும் கலந்து சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் பிஜூவிஸ்வநாத். ஆனால் எந்தச் சுவையும் முழுமை பெறாமல் போய்விட்டதுதான் சோகம்.

ஒரே மகனோடு சண்டை போட்டுக்கொண்டு தனியாக வசிக்கும் விஜய்சேதுபதிக்கு போரடித்தால் ஆம்புலன்ஸ்க்குப் போன் செய்து வரவழைத்து மருத்துவமனைக்குப் போய் வருவது பொழுதுபோக்கு. ஒருமுறை அவர் அழைக்கும்போது வருகிற ரமேஷ்திலக் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆறுபாலா ஆகிய இருவருடனான விஜய்சேதுபதியின் பயணம், மருத்துமனைக்குச் சென்று சேருவதோடு முடியாமல் சில மாதங்கள் தொடருகிறது. அந்தப்பயணம்தான் இந்தப்படம்.

சின்னச்சின்ன வேடங்களில் இருந்து படிப்படியாக முன்னேறிக்கொண்டிருக்கும் ரமேஷ்திலக்குக்கு இந்தப்படத்தில் படம் முழுவதும் வருகிற வேடம். காதலி, நண்பன், உயரதிகாரி ஆகியோரை அவர் சமாளிக்கும் விதங்கள் ரசிக்கிற மாதிரி இருக்கின்றன. தனிப்பட்ட முறையில் எவ்வளவு மனச்சிக்கல் இருந்தபோதும் பணியில் அவர் காட்டும் ஈடுபாடு அவருடைய பாத்திரத்துக்கு மதிப்பை அதிகரிக்கிறது.

விஜய்சேதுபதிக்கும் அவருக்கும் ஏற்படும் இனம்புரியாத ஒரு பிணைப்பை முகபாவங்களிலேயே நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார். "என் அப்பா இருந்தபோது, அந்த மனுசனை நான் மதிக்கவே இல்லை, இப்ப அவர் இல்ல, ஆனா என் மனசு அவரைத் தேடுது" என்கிற வசனம் அவருடைய நடிப்புக்கு விளக்கம் சொல்வதுபோல அமைந்திருக்கிறது.

ஆம்புலன்ஸ் ஓட்டுநராக நடித்திருக்கிற ஆறுபாலாவுக்கு சொல்லிக்கொள்கிற மாதிரியான வேடம். நண்பனின் காதலியை நீயும் காதலிக்கிறாய்தானே என்று விஜய்சேதுபதி போட்டு வாங்குமிடத்தில் வளைந்து நெளிந்து பேசிச் சிரிக்கவைக்கிறார்.

விஜய்சேதுபதியின் நடிப்பைப் பற்றிப் பேசுவதற்கு இந்தப்படம் பெரிதும் உதவியாக இருக்கும். மற்றவர்களை அவர் பார்க்கும் பார்வை மட்டுமின்றி உடல்மொழியில் நுணுக்கமான வேறுபாடுகளைக் காட்டி வியக்கவைக்கிறார். காவல்துறை ஆய்வாளரிடம் எடுத்தெறிந்து பேசுவது, மருத்துவமனையில் மருத்துவரிடம் பார்வையிலேயே கோபத்தைக் காட்டுவது என்று எல்லாக்காட்சிகளிலும் நன்றாக நடித்திருக்கிறார்.

நீ எனக்கு அப்பனே இல்லை என்று என் மகன், என்னிடம் சொன்னான், இதையேதான் நான் என் அப்பாவிடம் சொன்னேன், அவர் அவங்க அப்பாகிட்ட சொல்லியிருக்கார் என்று விஜய்சேதுபதி சொல்வதும், இன்னொரு இடத்தில், அவன் எனக்குச் சொல்லித்தரக்கூடாது நான் அவனோட அப்பா என்று கொந்தளிப்பதும் அவருடைய சிக்கலை வெளிப்படுத்துவதாக இருக்கிறது,

போரடித்தால் பொழுதுபோக்குக்காக ஆம்புலன்ஸை வரவழைப்பேன் என்று சொல்வதும் அதுபோலவே செய்வதும் அந்தப்பாத்திரத்துக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை. இது தவறு என்று உணராமல் காட்சி வைத்திருப்பது சரியல்ல.

விஜய்சேதுபதியின் மகனாக வருகிற கருணாகரன், தனக்கான வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார். அவர் பத்திரிகையாளரா? இல்லையா? என்பதை தெளிவாகச் சொல்லியிருக்கலாம். ரமேஷ்திலக்கின் காதலியாக வருகிற அஷ்ரிதா, ரசனைக்குரிய காதலியாக இருக்கிறார்.

இயக்குநரே ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் செய்திருக்கிறார். மூன்றிலும் அவர் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கவேண்டும். காட்சிகளில் தேவைக்கேற்ப கொஞ்சம் வேகத்தைக் கூட்டியிருந்தால் நன்றாக ரசித்திருக்கமுடியும். ஆறுபாலாவுக்கும் விஜயசேதுபதிக்குமிடையே ரமேஷ்திலக்-அஷ்ரிதா காதல் பற்றிய உரையாடல், ஆறுபாலாவிடம் ஒரு பெண் மற்றும் சிலர் கொள்ளையடிக்கும் காட்சி உட்பட சில காட்சிகளை இன்னும் கொஞ்சம் விளக்கிச் சொல்லியிருந்தால் பெரியவரவேற்பைப் பெற்றிருக்கும்.

ஜஸ்டின்பிரபாகரன் இசையில் பாடல்வரிகள் வரிகள் தத்துவங்களைப் பொழிவதாக இருந்தாலும் கேட்கிறமாதிரி அமைந்திருக்கிறது. அவருடைய பின்னணிஇசை சில இடங்களில் ஒரு பாத்திரம் போலவே நம்மைச் சிரிக்கவைக்கிறது. சில இடங்களில் சோதிக்கவும் செய்கிறது. ஒலிவடிவமைப்பு செய்திருக்கும் கீதாகுரப்பா தன்னுடைய இருப்பைப் பல இடங்களில் காட்டியிருக்கிறார்.   

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close