Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இது என்ன மாயம் - படம் எப்படி?

காதலும் காதல் நிமித்தமும் தான் இது என்ன மாயம்.. படித்த படிப்புக்கு வேலையைச் செய்யாமல் நண்பர்கள் இணைந்து இதுதான் எங்கள் வாழ்க்கை லட்சியம் என நாடகம் போட்டு பெரிய ஆளாக வரலாம் என நினைக்கிறார்கள். ஆனால் வழக்கம் போல் அரங்கம் ஈ ஆடுகிறது.

வீட்டிலும் செம டோஸ் விழ விக்ரம் பிரபு அவரின் நண்பர்கள் குழு சூழ பிளான் சேஞ்ச். நாடகத்தை ரியல் வாழ்க்கையிலேயே போடலாமே. என ஒரு தலைக் காதல்களை நாடகம் போட்டு சேர்த்து வைக்கும் படலம் ஆரம்பிக்கிறது. அப்போதுதான் வருகிறார், இன்னொரு நாயகன் நவ் தீப். காதலை சேர்த்து வையுங்கள் என சொல்லிக்கொண்டு. பெண் யாரென தெரிந்தவுடன் விக்ரம் பிரபுவிடம் தடுமாற்றம்.

அதே தான் கல்லூரி வாழ்க்கை கீர்த்தி சுரேஷ் லவ், பிரேக் அப் என நாம் நினைத்த அப்பட்டமான அதே கதை. இருப்பினும் மிகப்பெரிய தொழிலதிபர் நவ் தீப்பின் பணம், இவர்களின் நிலை என நண்பர்கள் வற்புருத்த ஒப்புக் கொள்கிறார் விக்ரம் பிரபு. எனினும் பழைய காதல் விடுமா. காதலின் சக்தியை கொஞ்சம் எதிர்பாரா திருப்பமாக எண்ட் கார்டு போடுகிறார்கள்

விக்ரம் பிரபு, கல்லூரி மாணவர், பின் ஒரு டீம் லீடர் என பக்கா பொருத்தம், நடுவில் ஒரு விதமான சகுனி கேரக்டராகவே மாறிவிடும் போது கண்களிலேயே பொறாமை, சோகம் என வெளிப்படுத்தியிருக்கிறார். கீர்த்திசுரேஷ் அழகாக இருக்கிறார், தமிழுக்கேத்த பப்ளி பொண்ணு. உணர்வுகளை நன்றாக வெளிப்படுத்தவும் செய்கிறார். நான் துபாய் போகக் கூடாதுன்னு நீதான் பிளான் போட்டியா என கேட்டுவிட்டு மருத்துவமனையில் சின்னதாக சிரிக்கும் காட்சியில் , என்ன பொண்ணுடா மொமெண்ட். 

அப்பட்டமான பணக்கார லுக்,ஹீரோயினை விட்டுக் கொடுக்கும் இரண்டாம் ஹீரோ என நவ் தீப் செம பொருத்தம். ஆனால் காதலே இல்லாத பொண்ணுக்காக காசை லட்ச லட்சமாக வாரி இறைப்பதெல்லம் கொஞ்சம் அதிகம். இந்த காதலை உன் வாயால சொல்ல வைக்கணும்னு நினச்சு நாங்க போட்ட பிளான் என நவ் தீப் கூறும் போது, பரிதாபமாகவே தெரிகிறார்.

நாசர் , அம்பிகா, ஆர்.ஜே பாலாஜி, இப்படி படம் முழுக்க நடிகர்கள், எனினும் திரைக்கதைக்கு உதவவில்லை. சில இடங்களில் ஆர்.ஜே. பாலாஜி வசனங்கள் இந்த இடத்தில் இது தேவையா எனக் கேட்கவும் செய்து விடுகிறது. இயக்குநர் விஜய் என்ன தான் ஆச்சு உங்களுக்கு கதை கொஞ்சம் மெதுவாக போகலாம் அதுக்காக இடைவேளை விடுங்களேன் என வாய் திறந்து கேட்டே விடும் அளவிற்கா மெதுவான கதை ஓட்டம்.

காதலுக்காக நாடகம் போடும் உங்கள் லோகேஷன்களில் அதெப்படி யாருமே வராமல் செட்டப்பாகவே இருக்கும். ஒரு பார்க்கில் விக்ரம் பிரபு குழு செட்டப் செய்யும் ஆட்களை தவிர வேறு யாரும் வராமல் இருப்பது ஓகே. சென்னையில் பல பூங்காங்களை அப்படிப் பார்க்க முடியும். ஆனால் அவ்வளவு பெரிய பீச்சில் சாத்தியமா. இன்னொரு காதலுக்காக நாடகம் போடுவது அதில் சொதப்புவது பின் தானே லவ்வி எஸ்! ஐ லவ் திஸ் இடியட் இதெல்லாம் இருபது வருடப் பழசு..

20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் விஜய் வித விதமாக செய்து விட்டார் முதல் பாதி தேமே என செல்கிறது இதில் நான்கு பாடல்கள் வேறு. மீண்டும் மீண்டும் ஒரே விதமான காட்சிகள், பெரிதாக காட்சிகளுக்கு மெனக்கெடவில்லை. 

’இரவாக நீ’ , சுற்றும் பூமி பாடல்கள் சுமார் ரகம். மற்ற பாடல்கள் ஈர்க்கவில்லை. பின்னணி இசை காதல் காட்சிகளில் அருமை. என்றாலும் ஹைய்யோ ஜி.வி .பிரகாஷ் இசையாச்சே என மண்டையில் உதித்தவுடன் அடக்கடவுளே! என சொல்ல வைக்கிறது. பாடல் காட்சிகளில் நிரவ் ஷாவின் ஒளிப்பதிவு ரசிக்கலாம்.

காட்சிக்கு காட்சி தெரிந்துவிடும் படியான கதை. மெதுவான திரைக்கதை ஒட்டம் , காதலர்களுக்காக போடும் நாடகம் , எல்லாவற்றிற்கும் மேல் மிகச் சிறிய கதைக் கரு என ’இது என்ன மாயம்’ கொஞ்சம் மனதை கவர மறந்து மாயமாய்த்தான் போகிறது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்