சகலகலாவல்லவன் படம் எப்படி? | sakalakalavallavan Movie Review

வெளியிடப்பட்ட நேரம்: 11:07 (01/08/2015)

கடைசி தொடர்பு:11:32 (01/08/2015)

சகலகலாவல்லவன் படம் எப்படி?

ராட்சித்தலைவராக இருக்கிற பிரபுவின் மகன் ஜெயம்ரவி, அவர் அஞ்சலியைக் காதலிக்கிறார், எதிர்பாராமல் அவருக்கு த்ரிஷாவுடன் திருமணம் நடந்துவிடுகிறது. அந்த வாழ்க்கை எப்படியிருக்கிறது? என்பதை நகைச்சுவையுடன் கலந்து சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் சுராஜ். அப்பா ஊராட்சித்தலைவர் என்பதால் நண்பர்களுடன் சேர்ந்து பொதுக்காரியங்களில் ஈடுபடுகிற வேடம் ரவிக்கு.

கொடுத்த வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார். ஓரிடத்தில் அஞ்சலியைக் கண்டவுடன் காதல் வருகிறது. அஞ்சலியின் முறைமாமன் சூரி. அவரையும் மீறி ஜெயம்ரவியை அஞ்சலியும் காதலிக்கிறார். காதல் காட்சிகளில் அஞ்சலியின் உடலை அங்கம் அங்கமாகக் காட்டுகிறார்கள், ஜெயம்ரவியுடனான காதல்பாடலில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைச்சலான உடைகள் அணிந்து ஆட்டம்போட்டிருக்கிறார் அஞ்சலி. ஆனாலும் ரசிக்கமுடியவில்லை.

த்ரிஷாவின் திருமணத்துக்குப் போன இடத்தில் திடீர் மாப்பிள்ளையாகி அவரை மணக்கிறார் ரவி. அவர்கள் வாழ்க்கை கசப்பாகிவிடுகிறது. த்ரிஷா இந்தப்படத்தில் அழகாக இருக்கிறார். அவ்வப்போது நடிக்கவும் செய்திருக்கிறார். கணவனுடனான சண்டைகள் வலிந்து திணிக்கப்பட்டவையாகவே இருக்கின்றன. வாஸ்துமீனை ரவி சமைத்துச்சாப்பிட்டுவிடுகிறார் என்பது உட்பட அவர்கள் குடும்பச்சண்டைக்கான காரணங்கள் நம்பமுடியாதவையாகவே இருக்கின்றன.

நகரத்தில் இருந்து கிராமத்துக்கு வந்து முப்பதுநாட்கள் இருந்தால் விவாகரத்து தருகிறேன் என்று சொல்லி த்ரிஷாவை கிராமத்துக்கு அழைத்துவருகிறார் ரவி. வந்தஇடத்தில், வாழ்க்கை என்றால் என்னவென்று தெரிந்து அதன் அருமைபெருமைகளை அறிந்து கணவனை மனப்பூர்வமாக ஏற்கிறாரா  என்றால் இல்லை. தேர்தல், போட்டி என்று ஏகத்துக்கும் கூத்தடித்து படத்தை முடிக்கிறார்கள். கணவனே வேண்டாம் என்று வருகிற த்ரிஷா, தேர்தலில் போட்டியிட சம்மதிப்பது எப்படி? என்பது உட்பட நிறையக்குறைகள் படத்தில் இருக்கின்றன. சூரிக்குப் படம் முழுக்க வருகிற வேடம்.சில இடங்களில் சிரிக்கவைத்து பல இடங்களில் நோகடிக்கிறார்.

ஜெயம்ரவிக்கு அஞ்சலி நீச்சல் கற்றுத்தருகிற இடம், அஞ்சலிக்கு ரவி சைக்கிள் ஓட்டக் கற்றுத்தருகிற இடம் ஆகியனவற்றில் சூரி மற்றும் அவருடைய கூட்டத்தினர் எரிச்சல் மூட்டிவிடுகிறார்கள். நாயகன் ஜெயம்ரவிக்கு சண்டைக்காட்சி வேண்டுமென்பதற்காக டம்மியாக ஒரு சண்டைக்காட்சி வைத்திருப்பது இயக்குநரின் பொறுப்பற்ற தனத்தையே காட்டுகிறது. இரண்டாம்பாதியில் கொஞ்சநேரம், அதுவும் இரட்டைவேடங்களில் நடித்திருக்கிற விவேக், இரட்டை அர்த்த வசனங்களால் அப்போதைக்கு சிரிக்கவைக்கிறார். பிரபு, ரேகா, ராதாரவி, ஜான் விஜய் உட்பட படத்தில் இருக்கும் நிறைய நடிகர்கள் செட்பிராப்பர்ட்டி போலவே இருக்கிறார்கள்.

காவல்துறையைச் சேர்ந்தவராக நடித்திருக்கும் நான் கடவுள் ராஜேந்திரனின் வேடம் அளவுகதிகமாக ஊதிப்பெரிதாக்கப்பட்டிருக்கிறது. அஞ்சலி, த்ரிஷா ஆகியோரோடு தலா ஒரு காதல் பாடல், சூரியுடன் சேர்ந்து குடித்துவிட்டு ஆடும் பாடல்கள், இதில் படம் ஆரம்பித்தவுடன் பூர்ணா கவர்ச்சியில் ஒரு குத்தாட்ட பாடல், என்று வகைக்கிரண்டாகப் பாடல்கள் போட்டிருக்கிறார் இசையைமப்பாளர் தமன். அவற்றில் ஜெயம்ரவி த்ரிஷா ஆகியோர் ஆடிப்பாடும் பாடல் ஏற்கெனவே ஜெயம்ரவி த்ரிஷா கோழி வெடக்கோழி பாடலின் மெட்டிலேயே இருப்பது தெரிந்தே செய்ததா?

ஒரு கதாநாயகன், இரண்டு கதாநாயகிகள், இரண்டு நகைச்சுவை நடிகர்கள் மற்றும் நிறைய குணச்சித்திர நடிகர்கள் ஆகியோரை வைத்துக்கொண்டு திரைக்கதையைப் பற்றிக் கவலைப்படாமல் காட்சிகளாகச் சிந்தித்து அவற்றைக் கோர்த்து ஒரு படமாக ஆக்கும் அரதப்பழசான உத்தியைக் கையாண்டு இந்தப்படத்தை வீணடித்திருக்கிறார் இயக்குநர் சுராஜ்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close