Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தனிஒருவன் படம் எப்படி?

அண்ணன் உருவாக்கிய காவலதிகாரி வேடத்தில் பசை போட்டு தன்னை ஒட்டிக்கொண்டுவிட்டார் ஜெயம்ரவி. கதாநாயகன் என்பதால் ஒரு வரையறைக்குள் செயல்பட்டாக வேண்டியிருந்தாலும் பாத்திரப்படைப்பில் மட்டுமின்றி நடிப்பிலும் பலமாக எதிர்நிற்கும் அரவிந்த்சாமியைச் சரியாக எதிர்கொண்டிருக்கிறார்.

Thani Oruvan

நாயகி நயன்தாராவின் பாத்திரமும் அரவிந்த்சாமியின் பாத்திரத்துக்குக் கொஞ்சமும் குறையாமல் இருக்கிறது. கொஞ்சம் பிசகியிருந்தாலும் இருவர் முன்னாலும் ரவி வீழ்ந்திருப்பார். ஆனால் அவர்களுக்கு ஈடுகொடுத்து தன்னைக் காத்துக்கொண்டிருக்கிறார். 

பதினைந்துவயதிலேயே சமயோசிதமாகச் செயல்பட்டு தான் சிறைக்குப் போனாலும் தன்னுடைய அப்பாவை சட்டமன்றஉறுப்பினராக்கிவிடும் மூளைக்காரரான அரவிந்த்சாமி வளர்ந்து பெரியஆளாகும்போது, அறிவியலாளராகவும் வியாபாரப்புள்ளியாகவும் மாநிலஆட்சியையே தன் சுட்டுவிரலுக்குள் வைத்திருக்கும் சகலசக்தியும் பொருந்தியவராக இருக்கிறார். சித்தார்த் என்கிற அந்த வேடத்துக்கு நூறுசதம் பொருத்தமாக இருக்கிறார் அரவிந்த்சாமி.

மிகஅலட்சியமாகச் சிக்கல்களை எதிர்கொள்வதும் மிகப்பெரிய பாதகத்தையும் இதழ்க்கோடியில் புன்னகையுடன் மிகஎளிதாகச் செய்வதும் என்று எல்லாக்காட்சிகளிலும் வரவேற்புப் பெறுகிறார். அதுவும் கடைசிக்காட்சி சிறப்பு.

படத்தின் கதையில் கறிவேப்பிலை அளவுக்கே பயன்பட்டாலும் நயன்தாரா தன்னுடைய உடல்மொழியாலும் அவருக்குக் கொடுக்கப்பட்ட வசனங்களாலும் ஈர்த்துவிடுகிறார். ஜெயம்ரவியை அவர் விரட்டி விரட்டிக் காதலிக்கிறார் என்றாலும் அதற்குள்ளும் ஒரு கம்பீரம் இருக்கிறது.

அவனை எதிர்க்கிறேன்னு உன் நிதானத்தை இழந்துட்டியே என்று ரவியிடம் சொல்லுமிடத்திலும் எதுவாக இருந்தாலும் கட்டிப்பிடித்துக்கொண்டே பேசவும் என்று எழுதிக்காட்டுவதும் ரசிக்கத்தக்க காட்சிகள்.

ஓரிடத்தில்கூட நல்லவெளிச்சத்தில் நயன்தாராவைப் பளிச்சென்று காட்டாமல் பாடல்காட்சி உட்பட அவர் வருகிற எல்லாக்காட்சிகளிலும் அவர் முகத்தில் நிழல்படிகிற மாதிரியே படம்பிடித்திருக்கும் ஒளிப்பதிவாளர் ராம்ஜிக்கு ஒரு விசாரணைக்கமிஷன் வைக்கவேண்டும். எல்லா நேரங்களிலும் ரவியுடனிருக்கும் நயன்தாரா உச்சக்கட்டக்காட்சிகளில் ஓரிடத்திலும் தென்படவில்லை, அவற்றை எடுக்கும்போது அவருடைய கால்ஷீட் கிடைக்கவில்லையா?

அரவிந்த்சாமியின் அப்பாவாக நடித்திருக்கும் தம்பிராமய்யா போல் ஒரு அப்பாவியை இந்த உலகம் முழுவதும் தேடினாலும் கண்டுபிடிக்கமுடியாது. அவர் வருகிற காட்சிகள் சிரிப்பாக இருந்தாலும் அவருடைய வேடம் நம்பும்படியாக இல்லை.

ஜெயம்ரவியின் நண்பர்கள் அரவிந்தசாமியின் பினாமிகள் என்று படத்தில் நிறையப்பேர் இருக்கிறார்கள். அவரவர்க்குக் கொடுக்கப்பட்ட வேலைகளைச் சரியாகச் செய்துவிட்டார்கள்.

ஹிப்ஹாப்தமிழாவின் இசையில் பாடல்கள் கேட்கிற மாதிரி இருக்கின்றன. பின்னணிஇசையிலும் அவர் குறைவைக்கவில்லை. தன்னைவிட ஆயிரம் மடங்கு சக்திவாய்ந்த எதிரியான அரவிந்த்சாமியை நாயகன் ஜெயம்ரவி எப்படி எதிர்கொள்கிறார்? என்கிற பழைய கதையை திரைக்கதையில் சில யுக்திகளைச் சேர்த்து புதிதாக்கிக்கொடுத்திருக்கிறார் இயக்குநர் மோகன்ராஜா.

ஒவ்வொரு சின்ன குற்றத்துக்கும் பின்னால் பெரியகுற்றங்கள் இருக்கின்றன என்று சொல்லமுடியாவிட்டாலும் நடக்கிற பெரியகுற்றங்களுக்கு முன்பாக சின்னக்குற்றங்கள் இருக்கின்றன என்று சொல்வதோடு அதற்குச் சான்றாக, இப்போது நாட்டில் நடக்கிற நிகழ்வுகளையே காட்டியிருக்கிறார் இயக்குநர். 

எதிரியைத் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் பற்றி ஜெயம்ரவி விளக்குமிடங்கள் சலிப்பூட்டுபவை. அவர் முன்னால் வருகிறவர்களை எதிர்கொண்டாலே அந்தஇடத்தில்தான் போய்நிற்பார்.

நாயகனின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கும் புதியவழிமுறை அது புதிதாக இருப்பதால் ரசிக்கமுடிகிறது. நுணுகிப்பார்த்தால் அதிலும் குறைகள் உண்டு.

ஆனாலும் அந்த உண்மையைத் தெரிந்துகொண்டவுடன் ஜெயம்ரவி ஒரேநேரத்தில் இரண்டுபெண்களின் உயிர்களைக் காப்பாற்றுவது வரவேற்புக்குரிய காட்சியாக இருக்கும்.

முதலமைச்சர், அமைச்சர் என்று குறிப்பிட்டுக்காட்டிவிட்டு அவர்களை எதிர்க்கும் காவல்அதிகாரிக்கு உயர்மட்டத்திலிருந்து எவ்வித அழுத்தங்களும் இல்லாமல் இருக்கிறது, உலகஅளவில் கவனம் பெற்ற ஒரு மருந்துநிறுவனத்தின் தலைவர் மரணம் தொடர்பாக எவ்வித விசாரணையும் இல்லை என்பது உட்பட திரைக்கதையில் உள்ள பலவீனங்களை விறுவிறுப்பைக் கொண்டு மறைத்திருக்கிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்