பாயும்புலி படம் எப்படி? | payumpuli film review

வெளியிடப்பட்ட நேரம்: 16:52 (04/09/2015)

கடைசி தொடர்பு:17:01 (04/09/2015)

பாயும்புலி படம் எப்படி?

மதுரையில் தொழிலதிபர்களை மிரட்டிப் பணம் பறிக்கும் கூட்டத்தைப் பிடிக்கபோகும் உதவிஆய்வாளர் ஒருவரை நடுச்சாலையில் வைத்து வெட்டிக்கொல்கிறார்கள். போலிஸ் மேல கைய வைக்க ஒவ்வொருத்தனும் பயப்படணும் என்பதற்காக அவர்களையெல்லாம் குருவி சுடுவது போல் சுட்டு வீழ்த்தப் புறப்படுகிறார் விஷால்.

கதாநாயகன் காவல்துறை அதிகாரி என்றால், என்னவெல்லாம் நடக்குமோ அவையெல்லாம் இம்மி பிசகாமல் இந்தப்படத்திலும் நடக்கிறது. ஏதாவது வித்தியாசம் காட்டவேண்டுமே என்பதற்காக, வில்லன் யார்? என்பதில் ஒரு மாற்றத்தைச் செய்திருக்கிறார்கள். அதுவும் புதிதல்ல.

எண்ட்ரியே அதிரடியா இருக்கு பார் என்று சூரி வசனம் பேசும்போது ஒருவனை ஓங்கிக்குத்திக்கொண்டே அறிமுகமாகிறார் விஷால். அதிலிருந்து அவர் செய்யும் எல்லாக்காரியங்களுமே அதிரடிதான். காதல்காட்சிகளிலும் கடமையைக் கலந்துவிட்டிருக்கிறார்கள்.

காவல்அதிகாரியாகக் கொதிப்பது, காதலனாகக் குழைவது என்று தேவைக்கேற்ற வேறுபாட்டைக்காட்டி தன் பங்கைச் சரியாகச் செய்திருக்கிறார் விஷால்.

நாலுபாட்டு இரண்டுசீன் வகைக் கதாநாயகியாக காஜல்அகர்வால். அவருக்குச் சாலையைக் கடக்கப் பயம் என்றெல்லாம் சொல்லி அநியாயத்துக்கு நடிக்கவைத்திருக்கிறார்கள். கல்லூரிமாணவனிடம் தப்பி ரவுடியிடம் மாட்டி அவனிடமிருந்து தப்ப விஷாலை நாடினால் அவர் அவர்களை விட மோசமானவர் என்று தெரிந்து அதிர்ந்து நிற்பது மட்டுமே காஜலுக்குச் சொல்லிக்கொள்கிற மாதிரியான காட்சி. மற்றபடி பாதிவழியிலேயே அவரை இறக்கிவிட்டுவிட்டு திரைக்கதை பயணித்துவிடுகிறது.

விஷால் உதவிஆணையாளர் என்றால், சாதாரண காவலராக சூரி. அப்போதுதானே அவருடனே இருக்கமுடியும். அவ்வப்போது சிரிக்கவைக்கிறார். மதுக்குடித்துவிட்டு மனைவியிடம் மாட்டிக்கொள்ளும் காட்சிகள் குறிப்பாக தலைக்கவசக்காட்சி பெரியவரவேற்புப்பெறும்.  

விஷாலின் பாசமிக்க அப்பாவாக வேலராமமூர்த்தியும் அண்ணனாக சமுத்திரக்கனியும் நடித்திருக்கிறார்கள். இப்படி ஒரு குடும்பம் இருந்தால் எப்படி இருக்கும்? என்று நினைக்கிற மாதிரியான குடும்பம். இறுதிக்காட்சியில் அந்த வீட்டுக்குள் நடக்கும் நிகழ்வு எதிரிக்கும் நடக்கக்கூடாது என்று நினைக்கவைக்கிறது. படத்தில் மிகவும் பலமான காட்சி அது.

சமுத்திரக்கனியின் வேடம்தான் திரைக்கதையின் மையம். அதைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப சிறப்பாக நடித்திருக்கிறார்.  

தொழிலதிபர்களாக நடித்திருப்பவர்களில் ஜெயப்பிரகாஷ் தனித்துத் தெரிகிறார். அவர் காஜலின் அப்பா என்பது மட்டுமல்ல, மகளின் திருமணம் பற்றிப் பேசப்போன இடத்தில் நடக்கும் நிகழ்வில் அவருடைய நடிப்பு நன்று. அமைச்சராக வருகிற ஆர்கே, காவலதிகாரியாக வருகிற ஆனந்தராஜ் ஆகியோரும் கவனிக்க வைக்கிறார்கள்.

இமானின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன. பின்னணிஇசை பரவாயில்லை ரகம். பசிகொண்ட சிங்கத்தைப் பாயும்புலி வெல்லும் என்று ஒரு பாடலில் சொல்லியிருக்கிறார் வைரமுத்து.

மதுரை மேல் பறந்து பறந்து பயணம் செய்கிறது வேல்ராஜின் ஒளிப்பதிவுக்கருவி. காட்சியமைப்புகளில் நேர்த்தியும் பாடல்காட்சிகளில் மண்மணத்தையும் கலந்திருக்கிறார். சிவப்பான காஜலின் இடுப்பில் விஷால் கைவைக்கும் காட்சி திமுக கொடியை பளிச்சென நினைவுபடுத்துகிறது. அதைத் தவிர்த்திருக்கலாமோ?

நான்மகான்அல்ல, பாண்டியநாடு போன்ற படங்களில் மத்தியதரவர்க்கத்தினரின் பாசத்தைப் பற்றிக் காட்டிய இயக்குநர் சுசீந்திரன், இந்தப்படத்தில் அவர்கள் செய்யும் மோசத்தைப் படமாக எடுத்திருக்கிறார். சுசீந்திரனின் கதாநாயகர்கள் குடும்பத்தின் மீது பாசம் கொண்டவர்களாகவும் நல்லவர்களாகவும் இருப்பார்கள். அதற்கேற்ப அந்தக்குடும்பமும் இருக்கும், இந்தப்படத்தில் அதைக் குலைத்துவிட்டார்.

மதுரைமண்சார்ந்த ஒரு பாரம்பரியமான குடும்பத்தில் தப்பான ஒருவர் என்று காட்டியிருப்பது கதைக்குப் பெரிதாகப் பயன்படவில்லை என்றே சொல்லலாம். அரசியல்ஆசை எதுவேண்டுமானாலும் செய்யவைக்கும் என்பதும் இரத்த உறவுகளைக் கூடக் காவுகேட்கும் என்பதும் கூடப் புதிதல்ல. இனிமேல் கதைக்காக நடிகர்களைத் தேடுங்கள் இயக்குநரே.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close