சவாலே சமாளி - படம் எப்படி? | Savaale Samaali Movie Review!

வெளியிடப்பட்ட நேரம்: 17:41 (04/09/2015)

கடைசி தொடர்பு:18:05 (04/09/2015)

சவாலே சமாளி - படம் எப்படி?

வழக்கமான கமர்சியல் கலாட்டா படத்தில் காமெடி கொஞ்சம் தூக்கலாக நிறைத்து வெளியாகியிருக்கும் படமே சவாலே சமாளி.

விஸ்காம் படித்துவிட்டு வேலை தேடி அலையும் இளைஞனாக அறிமுகமாகி, நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் கருணாஸின் டாப் டிவியில் வேலைக்கு சேர்கிறார் அசோக் செல்வன். அதே சேனலில் பணிபுரிந்துவரும் நண்டுஜெகனும், அசோக் செல்வனும் இணைந்து டாப் டீவியை முன்னேற்ற எடுக்கும் சவால்களும் அதனால் வரும் பிரச்னைகளை எப்படி இருவரும் சமாளித்தனர் என்பதே சவாலே சமாளி படத்தின் ஒன்லைன்.

கருணாஸின் டாப் டிவியை நஷ்டத்திலிருந்து காப்பாற்றுவதற்காக “என் இனிய பொன்நிலாவே” என்ற நிகழ்ச்சியை தொடங்கி ஹிட் அடிக்கிறார்கள் அசோக் செல்வனும் நண்டு ஜெகனும். அந்நிகழ்சியால் வரும் பிரச்னையை இருவரும் சமாளிக்கும் காட்சிகளை காமெடியில் கலக்கியிருக்கிறார்கள்.

பிட்ஸா 2 , தெகிடி என்று வரிசையாக சீரியஸான கேரக்டர்களில் வலம் வந்த அசோக் செல்வன் முதன்முறையாக சிரிக்காமல் ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சி செய்து அதில் தேறியிருக்கிறார். 

தங்கையின் தோழியாக அறிமுகமாகும் பிந்துமாதவியை கண்டதும் காதலில் விழும் அசோக் செல்வன், பிந்துமாதவியை காதலிக்க வைப்பதற்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அதில் மொக்கை வாங்கும் காட்சிகளும் சுமார்.

நண்டு ஜெகன் அறிமுகமாகும் காட்சியில் தொடங்கி படம் இறுதி வரைக்கும் படத்தின் காட்சியை முழுமை படுத்தியது மட்டுமில்லாமல் ரசிகர்களின் அப்லாஸையும் வாங்கியிருக்கிறார். அவருக்கே உரிய தனி பாணியில் நடித்து கவுண்ட்டர் காமெடியில் கலக்கியிருக்கிறார்.

அசோக் செல்வனின் மார்டன் பாட்டியாக நடித்திருக்கும் பரவை முனியம்மா சில காட்சிகளே வந்தாலும் நிறைவாக நடித்திருக்கிறார். இருப்பினும் ஹீரோவுடன் பாட்டி மது அருந்துவது போன்ற காட்சிகள் முகம் சுழிக்க வைக்கின்றன.

காதல் காட்சிகளில் மட்டுமே இடம் பெற்றுவிட்டு மற்ற காட்சிகளில் காணாமல் போகும் தமிழ் சினிமா ஹீரோயின் வேடத்தில் சிறப்பாக தோன்றி மறைந்திருக்கிறார் பிந்துமாதவி.

பத்து நிமிடம் பேசிவிட்டு செல்கிறேன் என்று ஆரம்பித்து பிந்துமாதவி மயங்கி விழும் வரைக்கும் ஹீரோ பேசும் காட்சி, கார்த்திக்கு (அசோக்செல்வன்) பொண்ணு பார்த்தாச்சி என்று பரவை முனியம்மா சொல்லும் போது, “ பேசியே என்னை மயக்கம் போட வெச்சான். அவன கட்டிக்கிற பொண்ணு பாவம் என்று பிந்துமாதவி வருத்தத்துடன்  சொல்லும் காட்சி, இறுதியில் பிந்துமாதவி காதலைச் சொல்லவரும் காட்சிகள் வரைக்கும் அலுப்பு ஏற்படாவிட்டாலும் புதுசா ஒன்றுமில்லை என்று எண்ண வைக்கிறது. 

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் ஊர்வசியின் நடிப்பு தனி ரகம். டைரக்டராக அறிமுகமாகும் மனோபாலா, காதலர்களின் தந்தைகளாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், நாசர் என்று அவரவர்களின் நடிப்பில் ரசிக்கவைத்திருப்பது படத்தின் ப்ளஸ்.

தமனின் இசை சொல்லும் அளவிற்கு சிறப்பாக இல்லை என்பதே படத்தின் குறை. படத்திற்குப் போதுமான அகமதுவின் படத்தொகுப்பு, நிறைவான காட்சியமைப்பு என்றிருந்தாலும் சில காட்சிகள் அலுப்புடனும் அடுத்தடுத்த காட்சிகள் சிரிப்புடனும் நகர்கிறது.

கழுகு படத்தில் சீரியஸான கதைத்தளத்தில் சில்லென்ற காதலை விதைத்த இயக்குநர் சத்யசிவா இப்படம் காமெடியில் காதலைக் கலந்து தந்திருக்கிறார்.

முழுக்க முழுக்க பொழுதுபோக்குடன் நம்மை சிரிக்க வைக்கும் படமே சவாலே சமாளி. இதே கதைக்களத்தில் கொஞ்சம் விறுவிறுப்பும், சுவாரஸ்யமும், இன்னும் கூடுதல் டிகாஷனுடன் காமெடியும் கலந்திருந்தால் படம் சவாலை சமாளித்திருக்கும் என்றே தோன்றுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close