யட்சன் படம் எப்படி?

தூத்துக்குடியில் ஒரு கொலையைச் செய்துவிட்டு அதிலிருந்து தப்பிக்க சென்னைக்கு வருகிறார் ஆர்யா. பழனியிலிருந்து திரைப்படத்தில் நடிக்கவேண்டும் என்கிற ஆசையில் சென்னை வருகிறார் கிருஷ்ணா. நடக்கும் ஒரு தவறு காரணமாக ஆர்யா நடிகராகவும் கிருஷ்ணா கொலைகாரராகவும் ஆகிறார்கள். அதன்பின் என்னவாகிறது என்பதுதான் படம்.

படத்தில் ஆர்யா, அஜித் ரசிகராக நடிக்கிறார். அஜித் படத்துக்கான திரையரங்குநுழைவுச்சீட்டை கிழித்துவிட்டான் என்பதற்காக ஒருவனை ஓங்கிஅடிக்கிறார், அந்த ஒரேஅடியில் அவர் செத்துப்போக அதிலிருந்து தப்ப சென்னை வந்தால், அஜித் நடிக்கும் படத்திலேயே இன்னொரு நாயகனாக நடிக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது.

இந்த வேடத்துக்குப் பொருத்தமாக இருக்க முயன்றிருக்கிறார் ஆர்யா. ஆட்டம் பாட்டம், அடிதடி எல்லாவற்றையும் அலட்சியமாகவே செய்கிறார். கொஞ்சம் கவனமாக இருத்தல் நலம்.

நடித்தே ஆகவேண்டும் என்கிற வெறியில் சென்னை வருகிற கிருஷ்ணாவுக்கு வந்த இடத்தில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. அதற்காக நடிகர் தேர்வின்போது அவருடைய நடிப்பும் அதற்கான காரணமும் நன்றாக இருக்கிறது. கையில் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பை நழுவவிட்டுவிட்டோமே என்கிற பதட்டத்தை நன்றாக வெளிப்படுத்துகிறார்.

கிருஷ்ணாவின் காதலியாக நடித்திருக்கும் சுவாதி மிகவும் வரவேற்புப் பெறுகிறார். காதலனை அவருடைய அப்பா திட்டிவிட்டார் என்பதற்காக வீட்டுக்கே வந்து சண்டைபோடுகிறார், போட்ட ஜட்டியோட வா பொழச்சுக்கலாம் என்று கிருஷ்ணாவைக் கூப்பிடுகிறார், தனக்காக வீட்டில் சேர்த்துவைத்த நகைகளை விற்று கிருஷ்ணாவை சென்னைக்கு அனுப்புவது என்று எல்லாக்காட்சிகளிலும் நன்றாக நடித்திருக்கிறார்.

 பாடல்களில் அவருடைய நடனம், சுப்பிரமணியபுரம் சுவாதியா இது என்று வியக்கவைக்கிறது. இப்படி ஒரு காதலி இருந்தால் எல்லோரும் வென்றுவிடலாம். ஆர்யாவின் காதலியாக நடித்திருக்கும் தீபாசன்னதி நல்லவரவு. அவருக்கு இருக்கும் அதிகப்படியான சக்திதான் திரைக்கதைக்கு மையம் என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார்.

இரண்டு இணைகளுக்கும் தனித்தனியாகப் பாடல் கொடுத்தால் வழக்கமான விசயமாகிவிடும் என்று நினைத்து தனியாகப் பாடல் கொடுக்காமல், ஒரேபாடலில் ஆடவைத்தது மட்டுமின்றி கூட்டத்தில் ஆடவிட்டதற்காக விஷ்ணுவர்தனைக் கடிந்துகொள்ளலாம்.

வில்லனாக நடித்திருக்கும் அதில்ஹூசைன் கவனிக்க வைக்கிறார். அண்ணன் தம்பி என இரண்டுவேடங்களில் நடிக்கவைத்து அதற்குள் ஒரு சுவையான முடிச்சை வைத்திருப்பது கதைக்குப் பலமாக இருக்கிறது.

தம்பிராமய்யா, பொன்வண்ணன், பாலாஜி, சென்ராயன், அஜய்ரத்னம் ஆகியோர் தங்கள் வேலைகளைச் செய்திருக்கிறார்கள். எஸ்.ஜே.சூர்யா திரைப்பட இயக்குநராகச் சில காட்சிகளில் நடித்திருக்கிறார். அவருடைய வழக்கமான நடிப்பு.

சுபாவின் வசனங்கள் பொருத்தமாக இருக்கின்றன. யுவனின் இசையில் பாடல்கள் குற்றமில்லை ரகம். பின்னணிஇசையிலும் குறைவைக்கவில்லை. ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவு படத்துக்குத் தேவையான அளவு இருக்கிறது.

அஜித்தை வைத்துப் படம் இயக்கிவிட்டதால் படம் நெடுக அவரைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் இயக்குநர் விஷ்ணுவர்தன். ஆர்யாவை அஜித் ரசிகராக நடிக்கவைத்தது மட்டுமின்றி எஸ்.ஜே.சூர்யா அஜித் படத்தை இயக்குகிறார் என்றும் காட்சிகள் வைத்திருக்கிறார். படத்தில் வருகிற படத்தொடக்கவிழாவுக்கும் அஜித் வருவதில்லை.

மிகவும் சிக்கலான ஒரு விசயத்தை எடுத்துக்கொண்டு, அதை நகைச்சுவையாகச் சொல்ல வேண்டும் என்று முடிவுசெய்து திரைக்கதை அமைத்துவிட்டதால் பல இடங்களில் ஒட்டாமல் போய்விடுகிறது. காட்சிகளுக்குள் நகைச்சுவை இருக்கலாம் காட்சியே நகைச்சுவையாக இருந்தால் ரசிக்கமுடியாதே. அதுவும் இறுதிக்காட்சியில் எல்லாவற்றையும் நகைச்சுவை ஆக்கிவிட்டார்கள். அஜித் படத்துக்கான நுழைவுச்சீட்டைக் கிழித்தவன் செத்தால் கூடத் தப்பில்லை என்பதெல்லாம் ரொம்பவே அதிகம்.

பொருத்தமான நடிகர்கள், வியாபாரத் திரைப்படத்துக்குத் தேவையான மையக்கதை, சரியான தொழில்நுட்பக் கலைஞர்கள் எல்லாம் இருந்தும் படம் நிறைவைத் தரவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!