வெளியிடப்பட்ட நேரம்: 18:43 (18/09/2015)

கடைசி தொடர்பு:19:08 (18/09/2015)

த்ரிஷா இல்லனா நயன்தாரா படம் எப்படி?

ஒரே நாளில் ஒரே நேரத்தில் இரண்டு பெண்குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை பிறக்கின்றன. அவர்கள் வளர்ந்ததும் இந்தக்கதையின் நாயகன், நாயகிகளாகிவிடுகின்றனர்.  அந்த இரண்டு நாயகிகளுடனான காதல் பயணத்தை,  அடல்ட்டு காமெடி வகையில் சொல்லியிருக்கும் படம் தான் த்ரிஷா இல்லனா நயன்தாரா.

நாயகன் ஜி.வி.பிரகாஷ், நாயகிகள் மணிஷா யாதவ், ஆனந்தி மூவருமே ஒரே ஏரியாவில் வசித்துவருகின்றனர். சிறு வயதிலிருந்தே பழகிவரும் இந்த மூவருக்குமிடையேயான காதல்+ காமம் கலந்த கதையைத்தான் படமாக எடுத்திருக்கிறார்கள்.

படத்தின் டைட்டிலே கதையை எளிதில் புரியவைத்துவிடும். பள்ளிப் பருவத்தில் ஆனந்தியின் மீது காதலில் விழுகிறார் ஜி.வி. இருவரும் காதலிக்க, பின்னர் ஏற்படும் பிரச்னையினால் பிரிந்துவிடுகின்றனர். உடனே மனிஷா யாதவ் ஜி.வி.யிடம் காதலைச் சொல்ல ஆனந்தியின் மேல் இருந்த கோபத்தினால் மனிஷாவிற்கு ஓகே சொல்கிறார் ஜி.வி.

மனிஷாவிற்கு குடிப்பழக்கம் இருப்பதால் மனிஷாவிடன் சண்டைப் போட்டுவிட்டு கும்பகோணம் கிளம்புகிறார் ஜி.வி. ஆனந்தியை கும்பகோணத்தில் சந்திக்கும் ஜி.வி. அவர் மேல் காதலில் விழுகிறார். ஜி.வியின் காதலை ஆனந்தி ஏற்றுக் கொண்டு ஓகே சொன்னாரா? இல்லை ஆனந்தியுடனும் மீண்டும் பிரேக் அப் ஆகிவிடுகிறதா என்பதே த்ரிஷா இல்லனா நயன்தாரா.

படம் ஆரம்பம் முதல் இறுதிவரையிலும் குடித்துக்கொண்டே இருக்கும் ஜி.வி.பிரகாஷ், மாடர்ன் பெண்ணாக கவர்ச்சியில் சிக்ஸர் அடிக்கும் மனிஷா, குடும்பப் பெண்ணாக வந்தாலும் வசனங்களில் கவர்ச்சிகாட்டும் ஆனந்தி என்று படமே முழுக்க முழுக்க முருங்கக்காய் விஷயம் தான்.

ஜி.விக்கு சித்தப்பாவாக வரும் வி.டி.வி. கணேஷின் காமெடி சிரிக்க வைக்கிறது. ஆனந்தியுடன் ஜி.வியை சேர்த்துவைப்பதற்காக ஐடியா கொடுக்கும் சிம்ரன் இரண்டாம் பாதியை முழுமைப் படுத்தியிருக்கிறார்.

வி.டி.வி.கணேஷ், ஜி.வி.பிரகாஷ் மாறி மாறி ஆபாச வார்த்தைகளாகவே பேசி திரையரங்கையே அதிரடிக்கின்றனர்.  இன்றைய இளைய தலைமுறை காதலின் நிலை, அவர்களின் மனநிலை என்னவாக இருக்கும் என்பதை தெளிவாக திரையில் காட்டியிருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். இப்படியெல்லாமா டயலாக்குகளைப் படத்தில் வைப்பீங்க என்று கேட்கவும் தோன்றுகிறது.

யூகிசேது, ரோபோ சங்கர், மனோகர் என்று ஒவ்வொருவரும் தங்களுக்கான கதாபாத்திரத்தில் நிறைவாக நடித்துச் சென்றிருக்கிறார்கள். இளைஞர்கள் நிச்சயம் ரசிக்கும் இப்படத்தை மற்ற எவரும் விரும்பமாட்டார்கள் என்பதே நிதர்சன உண்மை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்