Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குற்றம் கடிதல் - படம் எப்படி?

மாணவர்கள், ஆசிரியர்கள் இடையே உள்ள பந்தத்திற்கான நல்ல பாடம் தான் குற்றம் கடிதல்

மெர்லின், மணிகண்டன் இருவரும் புதிதாகக் காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதிகள். மெர்லின் பள்ளி ஆசிரியை. கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர். மணிகண்டன் இந்து. இவர்கள் திருமணம் மெர்லின் அம்மாவிற்கு பிடிக்காமல் போகவே மனஸ்தாபம் உண்டாகிறது. இந்தச் சூழ்நிலையில், புதிதாக திருமணமான மெர்லின் விடுமுறை முடிந்து மீண்டும் வேலைக்குத் திரும்புகிறார். அங்கே பள்ளியின் சக தோழியான மற்றொரு ஆசிரியையின் விடுப்பை சரிகட்ட வேண்டி மெர்லின், இன்னொரு வகுப்பறைக்குச் செல்கிறார். அங்கேதான் ஒரு விபரீதம் நடக்கிறது. என்ன விபரீதம் அதிலிருந்து மெர்லின் எப்படி மீண்டார் என்பதே மீதிக் கதை.

மெர்லினாக ராதிகா பிரசித்தா, மணிகண்டனாக சாய் ராஜ்குமார் இருவரும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். தப்பை எண்ணித் தவிக்கும் ஆசிரியையாகவும், கணவனை நினைத்து உருகுவதிலும் சரி ராதிகா பிரசித்தா கச்சிதம். சாய் ராஜ்குமார், மனைவியை எப்படியேனும் காப்பாற்ற வேண்டும் எந்த சிக்கலும் வரக்கூடாது எனத் தவித்து மருகும் நடிப்பில் அத்தனை இயல்பு.

இவர்களை மிஞ்சி விடுகிறார்  செழியனாக வரும் சிறுவன் மாஸ்டர் அஜய். படத்தின் கதையும், கதைக்களமும் நாம் தான் என்பதை உள் வாங்கி சிறுவனுக்கே உரிய சுட்டித்தனம், குறும்பு என காட்டியதோடு கொஞ்சம் வாலுத்தனமும் செய்யும் இடங்கள் நம்மையும் அறியாது அஜய்யின் முக பாவனைகள், சிரிப்பு என ஒன்றிவிடச் செய்கிறது.

தோழராக வரும் பாவெல் நவகீதன், பிரின்சிபலாக வரும் குலோத்துங்கன் , அவரது மனைவியாக துர்கா, சிறுவன் செழியனின் அம்மாவாக வரும் சத்யா என படம் நெடுக கதாபாத்திரங்களிலும், கதையிலும் அத்தனை இயல்பு. பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியமா என விவாதம் செய்வதும், அதே பாலியல் கல்வியை மிக அழகாக , எப்படிச் சொன்னால் நன்றாக இருக்கும் என காட்சியாக என்பதைக் காட்டிலும் பாடமாகவே காட்டியுள்ளமைக்கும் இயக்குநர் பிரம்மாவுக்கு சபாஷ் போடலாம்.

கண்டிப்பு அவசியம் ஆனால் எதற்குக் கண்டிக்க வேண்டும் என்பதையும் சொல்லத் தவறாமல் , அதையும் மறைமுகமாக ஒரே பாடலில் ஒரு முத்தத்தில் காண்பித்த விதமும் சிந்திக்கச் செய்துவிடும் தருணங்கள். இருக்கற புள்ளையோட அருமைதான் உனக்குத் தெரியும், இல்லாத புள்ளையோட வலி என்னன்னு எங்களுக்குத் தெரியும் போப்பா. இப்படி படம் முழுக்க உணர்வுகள்.

உடனே மீடியாக்காரங்க கேமராவத் தூக்கிட்டு வந்துடுவானுங்க என்று ஒரு பக்கம் மீடியாக்களுக்கும் சவுக்கடிகள் விழுகின்றன. அதைச் சொல்லி முடிப்பதற்குள் ஒரு பைட்ஸ் எடுத்துட்டா நாளைக்கு ஹெட்லைன்ஸ் பக்காவா இருக்கும் என மீடியாக்களின் பசியையும் போகிற போக்கில் ஆங்காங்கே சீண்டியிருக்கிறார்கள்.

 ஷங்கர் ரங்கராஜனின் இசை இயல்பாக இருக்கிறது.  கதைக்களத்துக்குத் தோதான பின்னணிஇசை. மனதை உருக்கும் பாரதியார் பாடல் நீண்ட நாட்களுக்குப் பிறகு சரியான காட்சியமைப்பில் புகுத்தப்பட்டதும் மற்றொரு சிறப்பு.

ஆசிரியர்களும், பெற்றோரும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம். இந்தப்படம் உலகம் முழுக்க கடந்த ஒரு வருடமாக பல திரையிடல்களையும், விருதுகளையும் பார்த்துவிட்டு வந்துள்ளது. கோவாவின் பனோரமா மற்றும் ஜிம்பாப்வே சர்வதேச திரைப்பட விழா இவையிரண்டிலும் திரையிடப்பட்ட முதல் தமிழ்ப் படம் இதுதான் எனலாம். ஆயிரத்தில் ஒருவன், ஆரண்ய காண்டம் படங்களுக்குப் பிறகு மும்பை திரைப்பட விழாவில் கலந்துகொண்ட மூன்றாவது தமிழ்ப் படம் இந்தப் படமே. எல்லாவற்றிற்கும் மேல் தமிழில் சிறந்த படமாக தேசிய விருதும் பெற்றுள்ளது.

சமீப காலங்களாக இந்திய சினிமாக்களில் அதிகம் இடம்பெறும் சமூக அக்கறை கொண்ட படங்களில் குற்றம் கடிதலுக்கும் கண்டிப்பாக ஓர் இடம் உண்டு. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகிய மூன்றுதரப்பினரும்  எதிர்கால சமுதாய உருவாக்கத்தின் முக்கிய அங்கங்கள். இதை இந்தப்படத்தில் பிரதிபலித்திருக்கிறார் இயக்குநர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement