கத்துக்குட்டி படம் எப்படி?

மீத்தேன்வாயு எடுப்பதன் மூலம் விளைநிலங்கள் பாழாவதோடு மண்வளம் முற்றிலும் மரித்துப்போய்விடும் என்கிற அதிர்ச்சியூட்டும் உண்மையை மையமாகக் கொண்டு அரசியல் நையாண்டிகளையும் கலந்து எடுக்கப்பட்டிருக்கும் படம் கத்துக்குட்டி. மீத்தேன் திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிட்டிருக்கும் தஞ்சாவூரையே கதைக்களமாக வைத்துக்கொண்டு அதற்கு எதிரான படத்தை எடுத்திருக்கிறார்கள்.

நாயகனாக நடித்திருக்கும் நரேனும் அவருடைய நண்பராகப் படம் முழுக்க வருகிற சூரியும் எந்நேரமும் மதுக்குடித்துக்கொண்டு ஊருக்குள் வம்பிழுத்துக்கொண்டு திரிகிறார்கள். நரேன் இழுக்கும் பெரும்பாலான வம்புகள், குடும்பநலன் மற்றும் மக்கள்நலன் கருதியே இருக்கிறது. நரேனின்அப்பா அரசியல்வாதி என்பதால் சட்டமன்றத்தேர்தலில் அவருக்குக் கிடைக்கவேண்டிய சட்டமன்றவேட்பாளர் பொறுப்பு நரேனுக்கு வந்து சேருகிறது. அதன்பின்னர் படம் முழுக்க அரசியல் வாடை. அரசியல்வாதிகளின் முழுமையான பரிமாணத்தைக் காட்ட முயன்றிருக்கிறார்கள். நாயகன் நரேன், உருவத்தில் தஞ்சை மண்ணுக்குரியவராக இருந்தாலும் பேசும்போது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. சூரி மண்ணின் மைந்தர் வேடத்துக்கு அச்சுஅசலாகப் பொருந்திப்போகிறார். எல்லாக்காட்சிகளிலும் இருவரும் சேர்ந்தே வருகிறார்கள். சில இடங்களில் சிரிக்கவைக்கிறார்கள்.

நாயகியாக நடித்திருக்கும் சிருஷ்டாங்கே, தமிழ்த்திரைப்படங்களில் காணக்கிடைக்காத சமுகப்பொறுப்புள்ள நாயகியாக இருக்கிறார். ஒருவரை விரட்டுவதுகூட வலிக்காமல் விரட்டவேண்டும் என்று நினைக்கிற மென்மையான மனதுக்குச் சொந்க்காரியான அவர், சுற்றுச்சூழலையும் மண்ணையும் மற்றும் பல உயிர்களையும் பாதுகாக்கவேண்டிய இடங்களில் வன்மையானவராகி கவர்கிறார். நரேனின் அப்பாவாகவும் அப்பாவிஅரசியல்வாதியாகவும் நடித்திருக்கிற பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ் வேடத்துக்குப் பொருந்தியிருக்கிறார். நாயகியின் அப்பா ராஜா, மண்ணைநேசிக்கிற விவசாயிகளின் பிரதிநிதியாகவே வாழ்ந்திருக்கிறார். ஆளுங்கட்சி மாவட்டச்செயலாளராக நடித்திருக்கும் ஞானவேல், சமகால அரசியல்வாதிகளைப் பிரதியெடுத்தது போல் இருக்கிறார்.

உயரியபொறுப்பில் இருப்பவர் என்பதை மறந்து அவர் ஆடும்ஆட்டங்கள் அரசியல்வாதிகளின் இன்னொருபக்கத்தைக் காட்டுவதாக இருக்கிறது. கடைசியில் அவர் செய்யும் செயல் நம்பிக்கைத்துரோகம் என்றாலும் பாராட்டுக்குரியது. ரெங்குபாட்டி, சித்தன்மோகன், தேவிப்பிரியா உட்பட படத்தில் வருகிற சின்னச்சின்ன வேடங்களுக்கும் பொருத்தமான நடிகர்களைத் தேர்வுசெய்திருக்கிறார்கள். ரெங்குபாட்டி பேசும் வசனங்களில் தற்போதைய அரசாங்கத்தைச் சாடியிருக்கிறார்கள்.

தஞ்சை மண்ணின் வளத்தையும் மீத்தேன் திட்டம் வந்தால் என்னநடக்கும்? என்பதைக் காட்சிப்படுத்திப் பதறவைக்கிறார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ்ஸ்ரீராம். பச்சைப்பசேல் என்றிருக்கும் வயல்வெளிகள், குருவிகள் உட்பட பல்வேறு பறவையினங்கள், புழு, பூச்சிகள் உள்ளிட்ட ஒட்டுமொத்தமண்ணையும் சூழலுக்கேற்ப காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளரைப் பாராட்டலாம். அருள்தேவ் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன. பின்னணிஇசையும் தேவைக்கேற்ப இருக்கிறது. சமகாலத்தில் நடக்கும் கொடுமையை வெளிப்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்று படமெடுத்திருக்கிறார் இயக்குநர் சரவணன். கருத்துக்குட்டி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!