வெளியிடப்பட்ட நேரம்: 10:36 (16/10/2015)

கடைசி தொடர்பு:10:51 (16/10/2015)

சிவப்பு படம் எப்படி?

மறந்துகொண்டிருப்பது மக்களின் இயல்பு, நினைவுபடுத்துவது நம் கடமை என்கிற சொல்லுக்கேற்ப, ஈழத்தில் நடந்த கொடுமைகளை நினைவுபடுத்துகிற மாதிரி எடுக்கப்பட்டிருக்கும் படம்தான் சிவப்பு.

அங்கிருந்து அகதிகளாக தமிழகம் வந்து இராமநாதபுரத்தில் இருப்பவர்கள், அரசாங்கத்துக்குத் தெரியாமல் ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முற்படுகிறார்கள். எதிர்பாராதவிதமாக அவர்கள் பயணத்தில் சிக்கல். அதனால் திரும்பவும் முகாமுக்கும் போகமுடியாது என்கிற சூழலில், மிகப்பெரிய கட்டிடம் உருவாகும் இடத்தில் வேலைக்காக அவர்களைச் சேர்த்துக்கொள்கிறார் ராஜ்கிரண்.

அங்கு ஏற்கெனவே வேலை செய்துகொண்டிருக்கும் நாயகன் நவீன்சந்திராவுக்கு, அகதிகளில் ஒருவராக இருக்கும் நாயகி ரூபாமஞ்சரி மீது காதல். அந்தக்காதலை வைத்துக்கொண்டு ஈழத்தமிழர்கள் பட்டபாடு மற்றும் இங்குவந்து படும்பாடு ஆகியனவற்றை உணர்த்தியிருக்கிறார்கள்.

ஹெலிகாப்டர் பறந்தாலே அஞ்சிநடுங்கி பதுங்குகுழி தேடுவது, புகைப்படத்தொகுப்பை மட்டுமே வைத்துக்கொண்டு உறவுகளின் நினைவில் வாழ்வது, சிவப்பு என்கிற நிறத்தையே வெறுக்கிற அளவு அவர்களின் வாழ்நிலை இருப்பது, கடல்நீரில் கால்வைத்தாலே ஈழத்தில் நடந்தகொடுமைகள் நினைவுக்கு வந்து அலறுவது என்று நாயகி ரூபாமஞ்சரியை வைத்து எல்லாவற்றையும் நினைவுபடுத்தியிருக்கிறார் இயக்குநர் சத்யசிவா.

நாயகியாக நடித்திருக்கும் ரூபாமஞ்சரி, தன்னுடைய வேடத்துக்கு முழுமையான நியாயத்தைச் செய்திருக்கிறார். நடிக்கும்போது பல சிரமங்களை அவர் எதிர் கொண்டிருக்கவேண்டுமென்பது படத்தைப் பார்க்கும்போதே தெரிகிறது. அவர் சொல்வதையெல்லாம் கேட்டு  அதிர்ந்துபோகும் நாயகனின் நிலையில்தான் தமிழ்நாட்டுமக்கள் இருக்கிறார்கள்.

நாயகன் நவீன்சந்திராவும் பொருத்தமாக நடித்திருக்கிறார். கட்டிடம்கட்டுமிடத்தின் பொறுப்பாளராக வருகிற ராஜ்கிரண்தான் படத்தின் உண்மையான நாயகன். அந்த மக்களுக்காகப் பரிந்துபேசுவதும், அவர்களுக்கு நடந்த கொடுமைக்காக விஸ்வரூபம் எடுப்பதும் என்று அசத்தியிருக்கிறார்.

அவர் பேசும்வசனங்கள் எல்லாமே கூர்மையாக இருக்கின்றன. கடைசியாக அந்தமக்களுக்கு ஆதரவு கொடுங்க, இல்லாட்டி கைவிட்டுடுங்க ஆனா அவங்களை வைத்து அரசியல் செய்யாதீங்க என்கிற வசனம், அரசியல்செய்பவர்களின் செவிட்டில் அறைகிறமாதிரி இருக்கிறது.

அகிலஇந்தியக்கட்சியை நினைவுபடுத்தும் அரசியல்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்றஉறுப்பினர், தன்னுடைய தேர்தல் வெற்றிக்காகச் செய்யும் செயலின் மூலம் போலி அரசியல்வாதிகளின் முகத்தைத் தோலுரித்திருக்கிறார் இயக்குநர் சத்யசிவா.

அரசியல்வாதியாக நடித்திருக்கும் செல்வா, அகதியாக நடித்திருக்கும் பூராமு, காவல்துறைஅதிகாரியாக நடித்திருக்கும் போஸ்வெங்கட் ஆகியோர் கவனிக்கவைத்திருக்கிறார்கள். தம்பிராமய்யாவின் நகைச்சுவை இந்தப்படத்தில் பெரிதாக எடுபடவில்லை.

மதுஅம்பாட்டின் ஒளிப்பதிவு, கட்டிடத்தொழிலாளர்களின் வாழ்வோடு சேர்ந்து ஈழஅகதிகளின் சோகங்களையும் கண்முன்நிறுத்த உதவியிருக்கிறது. ரகுநந்தனின் இசையில் பாடல்கள் கேட்கிறமாதிரி இருப்பதோடு பாடல்வரிகள் கலங்கவைக்கின்றன. மு.காசிவிஸ்வநாதனின் படத்தொகுப்பு சரியாக அமைந்திருக்கிறது.

போர்க்களபூமி வீசியெறிந்த பூக்களில் ஒன்று பேசியதின்று எனும் கபிலன்வைரமுத்துவின் பாடல்வரிக்கேற்ற படம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்