மீண்டும் விக்டர்....புரூஸ் லீ தி ஃபைட்டர் - படம் எப்படி? | Bruce Lee The Fighter telugu movie review

வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (17/10/2015)

கடைசி தொடர்பு:13:16 (17/10/2015)

மீண்டும் விக்டர்....புரூஸ் லீ தி ஃபைட்டர் - படம் எப்படி?

அண்டர் கவர் போலீஸ் கதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அண்டர் கவர் ஆக்‌ஷன் ஸ்டண்ட் மேன் கதைதான் இந்த, புரூஸ் லீ தி ஃபைட்டர்.

பொண்ண விட்டுட்டு பையன கலெக்டராக்கணும்னு நினைக்கற அப்பா, ஆனா அக்காவ கலெக்டராக்கணும்னு அப்பா கிட்ட உதவாக்கற பெயரை சுமந்துகிட்டு ஸ்டண்ட் மேனா வேலை செய்யற பையனா ராம் சரண். கட்டினா ஒரு வீரமுள்ள , நேர்மையான போலீஸ் ஆபிசரதான் கட்டுவேன்னு நினைக்கற ஹீரோயின் ரகுல் ப்ரீத் சிங். சினிமாவுல ஸ்டண்ட் மேனா இருக்கிற  ராம் சரண் போலீஸ் கெட்டப்லயே ஒரு அநியாயத்தத் தட்டிக்கேட்டு பறந்து பறந்து உதவி செய்யறாரு. அதப் பார்த்த உடனே ரகுலுக்குப் பிடிச்சுப் போகுது.

அப்பறம் ரகுல், நடக்குற ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் ராம்சரண கூப்பிட,  ஆக்‌ஷன் அட்ராசிட்டி பண்றாரு ராம் சரண்.  அவர் மோதின எல்லாம் இடத்துக்கும் ஒரே வில்லன் அருண் விஜய். இதுக்கு நடுவுல ராம் சரண் வேலை செய்யற முதலாளியோட பையனுக்கும் ராம்சரண் அக்காவுக்கும் நிச்சயம் நடந்து முடியுது. இடையில வந்து இறங்குறாரு ஹீரோயின் ரகுலோட அப்பா அவரு உண்மையிலயே ரொம்பப் பெரிய போலீஸ். ராம் சரண் போலீஸ் இல்லைன்னு தெரிஞ்சும் , ராம்சரணோட அத்தனை நடவடிக்கையையும் பார்த்து காதலுக்கும் ஓகே சொல்லி மிகப்பெரிய அண்டர் கவர் ஆபரேஷன ஒப்படைக்கிறாரு. அது என்ன ஆபரேஷன் அத ஏன் ராம்சரண் கிட்ட ஒப்படைச்சாரு? இதுக்கெல்லாம் பரபர ட்விஸ்டுகளோட ஆக்‌ஷன் அதிரடி க்ளைமாக்ஸ் வைக்கிறது இந்த புரூஸ் லீ தி ஃபைட்டர்.

ஸ்டண்ட் மேன் புரூஸ் லீ கேரக்டருக்கு ஏற்றார் போல் பறந்தடிப்பது, எகிறி காற்றில் சுழன்று உதைப்பது என ராம்சரண் ஒரு பக்கம் ஆக்‌ஷன் நாயகனாக தெரிய இன்னொரு பக்கம் நடு முதுகுத்தண்டு கூட நடனமாடி விடுமோ அளவிற்கு டான்ஸிலும் கெத்து காட்டுகிறார். ரகுல்ப்ரீத்சிங் அழகுப் பதுமையாக ஹீரோவுடன் நடனமாடுவது, காதலிப்பது இதைத் தாண்டி கொஞ்சமாக கதையின் போக்கை மாற்றும் முக்கியப் பங்குதாரராகவும் நடித்திருப்பது தெலுங்குப் படங்களில் அரிய வகை ஆச்சர்யம்.

வில்லனாக அருண் விஜய். என்னை அறிந்தால் படத்திற்குப் பிறகு மீண்டும் விக்டர் பேக். முன்பாதி முழுக்க ஆக்கிரமித்து ஆக்‌ஷன் கதைக்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறார். முன்பாதி அருண் விஜய் எனில் பின்பாதி முழுக்க சம்பத் ஆக்கிரமிப்பு. ஆக்‌ஷன் வேட்டையில் புதுப்புது திருப்பங்கள் உருவாகின்றன. சம்பத்துக்கு மனைவியாக நதியா, திடீர் என்ட்ரி கொடுத்து குரங்கு சேட்டை செய்யும் பிரம்மானந்தா என படம் முழுக்க கதாபாத்திரங்களும் கச்சிதம்.

தமிழ் டப்பிங் என்றாலும், நன்றாகவே மெனக்கெட்டிருக்கிறார்கள் போலும் முடிந்த வரை வசனங்கள், பாடல்கள் என அனைத்திலும் டப்பிங் எண்ணமே வராமல் செய்துள்ளனர்.

இயக்குநர் ஸ்ரீனு வைட்லா, கமர்ஷியல் , ஆக்‌ஷன் பரபர பின்னணிக்கு இடையில் கொஞ்சம் கதையையும் யோசித்திருக்கிறார். வழக்கமான மாஸ் ஹீரோ கதைதான் என்றாலும் கொஞ்சம் திருப்பங்கள், ஆச்சர்யங்கள் என கதை நகத்தைக் கடிக்க வைத்துவிடுகிறது. என்ன ஒன்று அடிக்கடி ரகுலுடன் ஆடும் ராம் சரணைப் பார்க்கும் தருவாயில் தான் ஓ தெலுங்குப் படமோ என்ற நியாபகம் ஆறாம்மூளைக்கு நியாபகத்தைக் கொடுத்துவிடுகிறது. அதைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

போலீஸ்னு சொல்லிகிட்டு மாமுல் வாங்கினாலே ரெண்டு நாள்ல ஆள அமுக்கிடுவாங்க. ராம்சரண் அண்டர் கவர் போலீஸ்னு சொல்லிகிட்டு ஊரே வியக்கற மாதிரி ஆக்‌ஷன் சீக்வன்ஸ் செய்கையில் இதை போலீஸ் தரப்பு நோட்டம் விடாதா?. எல்லாவற்றிற்கும் மேல் முகநூலில் வேறு ஹீரோயின் பதிவேற்றியிருக்கும் போது கண்டிப்பாக போலீஸ் தூங்குமா என்ன?  இப்படி படத்தில் ஆங்காங்கே லாஜிக் இடித்தாலும் தொடர் ட்விஸ்டுகள், கலர்ஃபுல் பாடல்கள் ஆகியன அவற்றை மறக்கடித்து விடுகிறது.

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு படத்திற்கு இன்னொரு பலம். முக்கியமாக பாடல் காட்சிகளில் கண்களுக்கு விருந்து வைத்துள்ளார். அதே போல் காதுக்கும் விருந்து வைக்கிறது தமனின் இசை, ஆக்‌ஷன் கதைக்கு அதிரடி பின்னணி மேலும் சிறப்பு.

எதுவாயினும் சரி கடைசியாக ஓரிரு நிமிடங்கள் வரும் காட்சிக்காக கண்டிப்பாகத் தமிழ்ரசிகர்கள் கூட காத்திருக்கத்தான் செய்வார்கள். மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் என்ட்ரீ. அவர் ஸ்டைல் குதிரை சவாரியும் செய்து ஹீரோயினையும் காப்பாற்றி பன்ச் டயலாக்கும் பேசுகிறார். அதற்காகவே பார்க்கலாம் இந்த புரூஸ் லீ தி ஃபைட்டர் படத்தை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close