Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உப்பு கருவாடு - படம் எப்படி?

சினிமா எடுக்கப் பாடுபாடும் இளைஞர்களின் கதையைச் சொல்லும் இன்னொரு படம் 'உப்பு கருவாடு'.

கருணாகரன்,சாம்ஸ், நாராயணன் ஆகியோர்  படமெடுக்கப் போராடி வருகிறார்கள். முதல் படத்திற்குப் போராடும் இளைஞர்கள் மத்தியில் இரண்டு படங்களைக் கடந்த ஒரு தோல்வியடைந்த இயக்குநராக கருணாகரன். அவருக்கு அடுத்த படத்திற்கான வாய்ப்பாக மேனேஜர் மயில்சாமி மூலம் வருகிறார் ஒரு மீன் வியாபாரி. அங்கேயே படத்தின் திருப்பம்.

மீன் வியாபாரியாகவும் உள்ளூர் ஐயாவாகவும் எம்.எஸ்.பாஸ்கர். ஹீரோயினாக தன் மகள் நடிக்க வேண்டும் என கண்டிஷன் போட படம் சூடு பிடிக்கிறது. கருணாகரன் மனதில் ஒரு நாயகி, ஆனால் இருப்பது இன்னொரு நாயகி. நினைத்த எதுவும் நடக்காமல் கடைசியில் யாரும் எதிர்பாரா திருப்பங்களுடன் ஆபத்தும் வருகிறது. பிறகென்ன நடந்தது என்பதே மீதிக் கதை.


 

கருணாகரன், முதல் படம் தோல்வி, இரண்டாம் படம் பாதியில் நின்றுவிட்டது. இந்தப் படமாவது நல்லா அமையணும் என சினிமாவை காதலிக்கும் இளைஞனாக ஆதங்கத்தையும், இயலாமையும் வெளிப்படுத்தி நல்ல நடிப்பைக் கொடுத்துள்ளார்.

 நந்திதா தான் படத்தின் ஹைலைட். ஒரே நாயகி சுத்தமாக நடிப்பே வராமலும், ஒரு பக்கம் கற்பனை நாயகியாகவும் என நடிப்பில் வித்யாசம் காண்பித்துள்ளார். சார்...நான் இப்போ என்ன செய்யணும்...நீங்க இப்போ போலீஸ் சார்.... என கொஞ்சிப் பேசி கருணாகரனைக் கடுப்பேத்தும் காட்சிகள் அருமை. ஆனால்  ந்திதாவையும் தாண்டி நடிப்பில் மிஞ்சுகிறார் கருணாகரனின் காதலி ரஷிதா.

படம் முழுக்க காமெடி அதகளம் செய்கிறார்கள் சாம்ஸ், மற்றும் டவுட் செந்தில். எந்த அலப்பறையுமின்றி தப்புத் தப்பாக ஆங்கிலம் பேசி அப்பாவியாக நிற்கும் டவுட் செந்தில் தருணங்கள் சிரிப்பு வெடி. படம் முழுக்க , அப்பாவியாக வந்து சார்... ”எனக்கு நம்மூர் இயக்குநர்கள் மேல பெரிசா அபிப்ராயம், இல்ல, எனக்கு பிடிச்ச ஹீரோ கூட அர்னால்டு ஸ்வார்சிநேரு” என வேறு விதமாக கதையைத் தாங்கியிருக்கிறார் டவுட் செந்தில். சாம்ஸ் திருக்குறளை சொல்லிச் சொல்லி அதற்கிடையில் விளக்கத்தையும் சாதாரணமாக தெளித்த விதம் நல்ல முயற்சி.

ஹீரோவாக துடிக்கும் சதிஷ், சாமியாராக வரும் ’டாடி’ செந்தில், ஐயாவாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் என கொஞ்சமான கதாபாத்திரங்கள் தான் ஆனாலும் மனதில் தனித்தனியே இடம்பிடித்துவிடுகிறார்கள். முக்கியமாக ராதாமோகன் படங்கள் என்றாலே செண்டிமெண்ட் பாயிண்ட் குமரவேலாகத்தான் இருக்கும் இந்தப்படமும் அதற்கு விதிவிலக்கல்ல.

”செத்துப்போன ஃப்ரண்டோட நம்பர சொல்போன்லருந்து அழிக்கும் போது வருமே ஒரு வருத்தம் அது மாதிரி இருந்துச்சு”, இப்படி ட்ரெண்டியான சோக வசனங்களும், ”இந்த சண்முகத்துக்கு பிரச்னை, சண்முகத்துக்கு பிரச்னைனு சொல்றாங்களே அவரு யாரு”, ‘ டேய்...அது சண்முகம் இல்லடா, சமூகம்,” என டைம்லி சிரிப்பு வெடிகள் பொன் பார்த்திபன் கை வண்ணத்தில் மின்னினாலும் விஜி இல்லாத குறை சற்றே தெரிவதை மறுக்க முடியவில்லை.

”எங்க சமூகத்த இழிவு படுத்தற மாதிரி படத்துல காட்சி இருக்கறதா தெரியுது, படத்த நிறுத்துங்க என சொல்லும் எம்.எஸ்.பாஸ்கரின் தம்பியிடம், நாட்ல எவ்வளவோ பிரச்னை இருக்கு, சின்ன குழந்தைய கற்பழிக்கிறான், பஸ்ஸ கொளுத்துறான், அதெல்லாம் உங்க கண்ணுக்குத் தெரியாதா? ஒரு படம்னா சும்மா இல்ல, அதுக்குப் பின்னாடி எத்தனை பேரோட வாழ்க்கை இருக்கு தெரியுமா?. சினிமாவை சீண்டுனா உங்களுக்கு பப்ளிசிட்டி” இந்த சினிமா எங்களுக்கு வாழ்க்கைய்யா”, என போகிற போக்கில் அரசியலும் பேசிய விதம் சபாஷ். . 

 சின்ன பட்ஜெட்டில், ஆபாசம் இல்லாமல், ஆக்‌ஷன் சண்டைக் காட்சிகள் இல்லாமல், மாஸ் சீன்கள் இல்லாமல் போர் அடிக்காத ஒரு படத்தைக் கொடுக்க முடியும் என மீண்டும் நிரூப்பித்துள்ளார் இயக்குநர் ராதாமோகன். பின் பாதியில் வரும்  நீளமான காட்சிகளைக் குறைத்திருக்கலாம். ஸ்டீவ் வாட்ஸ் இசையில் உப்புக் கருவாடு பாடல் நல்ல பீட், மற்றபடி பெரிதாக ஈர்க்கவில்லை.

மொத்தத்தில், படத்தில் ஆபாச சீன் இருக்குமோ, அந்த வசனம் முகம் சுழிக்கச் செய்யுமோ என்ற பயமின்றி ஒரு எளிமையான எதார்த்தப் படம் பார்க்க நினைப்போருக்கு ’உப்பு கருவாடு’ நல்ல சாய்ஸ்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்