Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சமந்தா, ஏமியுடன் லிப்லாக், ‘பீப்’ வசை, பீர் ஹீரோயின், தனுஷ் மேஜிக்! - தங்கமகன் விமர்சனம்

தனுஷ்..தனுஷ்..தனுஷ்... மட்டும்தான் படம் முழுக்க. ஆனால், ஆர்ப்பாட்ட ஓப்பனிங், அதகள சண்டை, ஆக்ரோஷ சவால்கள் எதுவும் இல்லை. ஹவுஸிங் போர்டு க்வார்ட்டஸில் குடியிருக்கும் அரசாங்க ஊழியனின் மகனாக, பெற்றோரின் செல்லப் பிள்ளையாக, காதலியின் ரோமியோவாக, மனைவியின் ஆதர்சமாக, செம கலாய் நண்பனாக என ஒவ்வொரு ஃப்ரேமிலும் தனுஷிசம்!

கதை...? ’துள்ளுவதோ இளமை’ காலத்திலிருந்து தனுஷ் நடித்து வரும் கதைதான். (ஆனா, சும்மா சொல்லக் கூடாது... இத்தனை வருசம் கழித்தும் தனுஷை கல்லூரி மாணவனாக ஏற்றுக் கொள்ள முடிகிறது!). வருமானவரித் துறை அலுவலரான கே.எஸ்.ரவிக்குமாரின் மகன் தனுஷ். ’ஆங்கிலோ-பிராமின்’ குடும்ப ஏமி ஜாக்சனை ஸ்கெட்ச் போட்டு காதலிக்க வைக்கிறார். லிப்லாக் மழை, கட்டிப்பிடி விளையாட்டுகளில் நாளும் பொழுதும் கழியும்போது, சின்ன ஊடல் ஜோடியைப் பிரிக்கிறது. காதல் தோல்வி மறந்து, பொறுப்பு உணர்ந்து, வேலைக்குச் சென்று, சமந்தாவை பெண் பார்த்து கல்யாணம் பண்ணிக் கொண்டு ‘ஹாப்பி ஹவர்ஸ்’களில் திளைக்கிறார் தனுஷ். திடீர் இடி. அப்பா ஒரு திருட்டுக் குற்றச்சாட்டுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ள, தனுஷின் வேலையும் பறிபோக குடும்பமே நிலைகுலைகிறது. என்ன நடந்தது என்பதை உணர்ந்து அதை சரிசெய்து குடும்பத்தின் தங்கமகனாக தனுஷ் எப்படி ஜொலிக்கிறார் என்பது... வேறென்ன வெள்ளித் திரையில்தான்! 

ஆச்சரியமாக... அடக்கி வாசித்திருக்கிறார் தனுஷ். ஓப்பனிங் பில்ட்-அப் இல்லை, அதீத சவால் இல்லை, ஓவர் குடி கும்மாளம் இல்லை. சிம்பிள் ஹம்பிள் இளைஞனாக மனதுக்கு நெருக்கமான கேரக்டர். சதீஷுடன் சேர்ந்து அளவான சேட்டை, ஏமியுடனான காதல் கலாட்டாக்கள்,  வெகு இயல்பு. ’என் நம்பர் கொடுப்பேன்னு பார்த்தியா... அஸ்கு புஸ்கு..’ என ஏமியிடம் அசால்ட் காட்டுவது முதல் பைக்கில் செல்லும்போது ‘நான் எதுவும் பண்ணலையே’ எனப் பதறி பார்வையைப் பதிக்குமிடம் வரை செம சேட்டை. அதுவே சமந்தாவிடம் கனிவான கணவனாக மென்மை ரொமான்ஸ். முதலிரவு அறையில் சமந்தா காலில் விழப் போகிறார் என்று நினைத்துப் பதறுவதும் ஏமி பற்றிய சமந்தாவின் கமெண்ட்டுக்கு சமாளிப்பதுமாக... வாழ்ந்திருக்கிறார் மனுஷன்.  

அட... ஏமி பொண்ணு அழகா நடிச்சிருக்காங்க..! தனுஷ் தன்னை பின் தொடருகிறாரா என்று தவிப்புடன் பார்ப்பதும் கணவனிடம் தனுஷை விட்டுக் கொடுக்காமல் பேசுவதுமாக அசத்தல். இந்தப் பக்கம் செம பாந்தமாக சமந்தா. காட்டன் சேலை, கணவனுக்கு காத்திருப்பு, கஷ்ட ஜீவனம் என தமிழக ஹோம் மேக்கர்களை அழகாகப் பிரதியெடுத்திருக்கிறார். மழையில் தனுஷ் நனைந்து வந்து நிற்கும் காட்சியில் தலை துவட்டுவதா... இழுத்து அணைத்துக் கொள்வதா என்று சமந்தா தயங்கி மயங்கி நிற்குமிடம்... வாவ்!  

கெத்து எகத்தாளத்தையே டிரேட் மார்க்காக கொண்ட கே.எஸ்.ரவிக்குமார் மறதி மனுஷனாக படபடக்க வைக்கிறார். மகனை கோவிலுக்குப் போக வைக்க தலையை ஆட்டி உருட்டி ஒரு ரியாக்‌ஷன் கொடுக்கிறாரே ராதிகா... ஆவ்ஸம்!

அனிருத்தின் ஹிட் ஆல்பம் வரிசையில் இந்தப் படமும் இடம் பெற, பின்னணி இசையில் வழக்கமான அதார் உதார். ஏமியோ, சமந்தாவோ பச்சக் பச்சக்கென லிப் லாக்கி விடுகிறார் தனுஷ். ஆனாலும், ’உன் மேல என்னால கோபமே பட முடியாது யமுனா’ என சமந்தாவிடம் தனுஷ் உருகுமிடம்தான் காதலின் தங்கத் தருணம்.

மொட்டை மாடியில் பட்டப் பகலில் பீர் மயக்கத்தில் ஏமி தனுஷிடம் காதல் சேட்டை செய்வது, தனுஷின் நண்பன் ‘பீப்’ வார்த்தையை ஒரு சமயம் சொல்வது (மியூட் செய்திருக்கிறார்கள்), மனைவியே கணவனின் எக்ஸ் காதலியைப் பற்றி அவனிடம் சீண்டலாகச் சிலாகிப்பது, கர்ப்பிணி மனைவியை காக்க வைத்துவிட்டு தனுஷ் ஆக்‌ஷன் அதிரடியில் ஈடுபடுவது ஆகியவை கலாசார கண்ணியக் காவலர்கள் கவனத்துக்கு!

மனைவியின் வயிற்றிலிருக்கும் குழந்தையிடம் ’சொந்தக்காரங்களை நம்பாதப்பா’ என தனுஷ் சொல்வது, ‘நான் என் எக்ஸ் பாய் ஃப்ரெண்டை பத்திச் சொல்லுவேன்... ஆனா, அது உனக்கு அசிங்கமாயிரும்’ என தன் கணவனிடம் ஏமி சொல்லுமிடங்களில் அப்ளாஸ் அள்ளுகிறது வசனம்!

இந்த ஹைலைட் சங்கதிகளில் பெரும்பாலானவை முன்பாதியிலேயே நிகழ, பின்பாதி... மெலோ டிராமாவாக சவசவ! ‘டைஹார்டு’ தனுஷ் ரசிகர்களுக்காக அர்ப்பணித்துவிட்டார்கள் போல. ஒரு செல்போனை வைத்துக் கொண்டு நாலு கோடியை ஜஸ்ட் லைக் தட் மீட்டு சித்து விளையாட்டு காட்டுகிறார் தனுஷ்.

ஆக, ஃபைனல் பன்ச் என்ன..?

தங்கமகன் ஃபர்ஸ்ட் ஹாஃப் செம ஜாலி.... செகண்ட் ஹாஃப் லாஜிக் கேலி. தனுஷ் ரசிகர்களுக்குப் படம் பிடிக்கும். மற்றவர்களுக்கு முதல் பாதி மட்டும் பிடிக்கும்!

- சினிமா விகடன்

ஆடியோ வடிவில் தங்கமகன் விமர்சனம்:

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்