Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

‘இந்தியால குளிக்க ஷாம்புவும் குடிக்க கோலாவும் நாமளே தயாரிச்சுக்க முடியாதா?’ - பூலோகம் விமர்சனம்

லோக்கல் வியாபாரமே குளோபல் முதலாளிகளின் கல்லா கணக்கு என பாக்சிங் க்ளவுஸால் முகத்தில் அறைந்து சொல்கிறான் பூலோகம்!  

ஹைலைட் :  ‘ஒரு நாளைக்கு 100 கார் விக்கிறதைவிட 1 கோடி கீரை கட்டு விக்கலாம். கட்டு 5 ரூபான்னு வைச்சாலும் தினம் 5 கோடி ரூபாய் பிசினஸ்!’, ’இந்த நாட்டுல பணக்காரங்க கொஞ்சமா இருக்காங்க... அவங்களை விடு. குடிசைங்கதான் கோடிக்கணக்கா இருக்கு. அந்த ஒவ்வொரு குடிசைல இருந்தும் கொள்ளையடி!’, ‘நான் போட்டி நடத்துறது விளையாட்டை வளர்க்கவா..? இல்லை... ரெண்டு கோஷ்டியை உருவாக்கி, அவங்களுக்கு நடுவுல கோஷ்டி பூசலை உருவாக்கி... அதுல இருந்து நான் காசு சம்பாதிப்பேன்!’ - கார்ப்பரேட்கள் விரிக்கும் சூழ்ச்சி வலையை சுளீரென புரியவைக்கும் இயக்குநர் கல்யாணகிருஷ்ணனின் முனைப்புக்கும் முயற்சிக்கும் பாராட்டுக்கள்! 

கதை :  வடசென்னையில் இரண்டு குத்து சண்டைக் குழுக்கள்... நாட்டு வைத்தியர் பரம்பரை, ராசமாணிக்கம் பரம்பரை. இரண்டு குழுக்களுக்குமிடையே எப்போது சண்டை நடந்தாலும் களத்துக்கு வெளியிலும் அதகளம்தான். கடைசியாக நடந்த குத்துச்சண்டையில் தோல்வியடைந்த ஜெயம் ரவியின் அப்பா தற்கொலை செய்துகொள்கிறார். அந்தப் பகையைத் தணிக்கவும் நாட்டு வைத்தியர் பரம்பரை இழந்த பெருமையை மீட்கவும் ஜெயம் ரவி சிறு வயது முதலே ஆவேசமும் ஆக்ரோஷமுமாகக் காத்திருக்கிறார்.
 இந்நிலையில் தொழில் முறை குத்துச்சண்டைகளை ஐ.பி.எல் பாணியில் 'சாம்பியன்ஷிப் போட்டிகளாக' நடத்த பெருந் தொகையை முதலீடு செய்கிறது பிரகாஷ்ராஜின் தனியார் சேட்டிலைட் சேனல். அதன் முதல் போட்டியாக ஜெயம் ரவியையும் ராசமாணிக்கம் பரம்பரையை சேர்ந்த ஆறுமுகத்தையும் மோத வைக்கிறது. பரம்பரை பழியை தீர்த்துக்கொள்ள போட்டிக்கு ஜெயம் ரவி சம்மதிக்கிறார். தொடரும் சம்பவங்களில் கார்ப்பரேட்களின் லாபவெறிக்கு தாங்கள் பலியாவதை உணர்கிறார் ஜெயம் ரவி. அப்போது வெளிநாட்டிலிருந்து சாம்பியன்ஷிப்பில் கலந்து கொள்ள வருகிறான் ஒரு ‘உயிர் கொல்லி’ பாக்சர். ’ரிங்’கிற்குள் சைக்கோவாக எதிராளியை அடித்துக் கொல்லும் அவனை தோற்கடித்து கார்ப்பரேட் சூழ்ச்சிக்கு பதிலடி கொடுக்க விரும்புகிறார் ஜெயம் ரவி. உயிரைப் பணயம் வைக்கும் அந்த முயற்சியில் என்ன நடக்கிறது என்பது பரபர ’நாக்-அவுட்’ அத்தியாயம்!

ஆன் த ஸ்க்ரீன்:  சென்னை பூர்வகுடிகளின் சிறுதெய்வமான "பாடிகார்ட்" முனுசாமியாய் கண்முன் நிறுத்துகிறார் "பூலோகம்" ஜெயம் ரவி. களத்தில் இறங்கும் போது 'டான்சிங்' பூலோகமாக மாறி பீட் ஸ்டெப் போடுவதும், எதிரியை வீழ்த்தியபின் அவன் நிலைகண்டு கலங்குவதும், கில்லர் பாக்சருடன் ரிங்கில் சளைக்காமல் மல்லுக்கட்டுவதுமாக... ஆர்ப்பட்டா அப்ளாஸ் அள்ளுகிறார். ஆரம்பக் காட்சிகளில் அதிர்வேட்டு உற்சாகத்துடன் அவர் வளையவருவது கொஞ்சம் ‘ஓவர் டோஸாக’ தோன்றுகிறது. ஆனால், அதுதான் அம்மக்களின் இயல்பு, ஈர மனசுக்காரர்கள் எந்த உணர்வையும் உக்கிரமாகக் கொண்டாடுவார்கள் என்பதை அடுத்தடுத்த அத்தியாயங்கள் அழுத்தமாகப் பதிகிறார் ஜெயம் ரவி. அதிலும் அங்காள அம்மன் மயானக்கொள்ளை பாடலிலும், க்ளைமாக்ஸ் சண்டையின்போது ‘அங்காளம்மாடா... அங்காளா’ என ரவி உக்கிரமாக உறுமுவது... டெரர். வெல்டன் ரவி!

ஜெயம் ரவிக்கு அடுத்து படத்தில் மிரட்டுவது... அமெரிக்கன் பாக்சராக வரும் நாதன் ஜோன்ஸ். ஈஃபில் டவர் உயரம், மேட்டூர் அணை அகலம் என தோற்றத்திலேயே ‘அம்மாடி’ அதிர்ச்சியைக் கொடுக்கிறார். வெறி பிடித்த மனிதனாக உறுமுவதும், வேட்டி கட்டிக் கொண்டு கொட்டு மேளத்துக்கு ஸ்டெப்ஸ் போடுவதும், ‘ரிங்’கில் ஒவ்வொரு அடியையும் இடியாக இறக்குவதுமாக... மஸ்து மச்சான்!

டாட்டூ கேர்ள் ஃப்ரெண்ட் த்ரிஷா ரவிக்குப் பயிற்சியளிக்கும் காட்சிகளில் மட்டும் ஈர்க்கிறார். ’டூயட்’ காலம் முதல் செய்யும் கதாபாத்திரம்தான் பிரகாஷ்ராஜுக்கு. மனிதர் அசால்ட் செய்கிறார்.

ஆஃப் த ஸ்க்ரீன்:   திரைக்கதைதான் படத்தின் பலமும் பலவீனமும். பாக்சிங்கிற்கான களத்தை ஏக எதிர்பார்ப்புடன் அமைத்தாலும், இடைவேளைக்கு முன்னும் பின்னும் சம்மந்தமில்லாமல் அல்லாடுகிறது. அதுவே கடைசி அரை மணி நேரத்தில் பொறி பறக்கிறது. பாக்ஸிங்கின் ஆக்‌ஷன் அதகளங்களை ‘ரிங் கார்னர்’களுக்கு பாய்ந்து பாய்ந்து பக்கா பாக்கெட் செய்திருக்கிறது சதீஷ் குமாரின் ஒளிப்பதிவு. பாக்சிங் ரிங்கின் ஒவ்வொரு பன்ச்சிலும் ஆர்.டி.எக்ஸ் அக்ரோஷம் சேர்த்திருக்கிறது மிராக்கிள் மைக்கேல், லார்ன் ஸ்டோவெல் ஆகியோரின் ஒளிப்பதிவு.

பன்ச் வசனங்கள் :

  ’இந்தியா ஏழை நாடுதான்... ஆனா, பெரிய சந்தை’,
’ஒரு நாளைக்கு ஒரு கார் விக்கிறதைவிட, 10 லட்சம் ஷாம்பு பாக்கெட் விக்கிறதுதான் அதிக லாபம்’,
’ஓவ்வொரு அடியையும் அவன் வியாபாரம் பண்ணி காசாக்கிட்டு இருக்கான்’,
‘பூலோகம் அடி வாங்கிவிழுற இடத்துல விளம்பரம் வை’,
’எந்த கோடீஸ்வரன் புள்ளையா பாக்சர் ஆகியிருக்கான்?’,
‘வியாபாரம் சர்வதேசம்... அது எல்லை தாண்டி நம்ம சேரிக்குள்ளயும் வந்து காசு பார்க்கும்’,
’இந்தியனுக்கும் அமெரிக்கனுக்கும் எந்தப் பகையும் இல்லை. ஆனா, அப்படி பகை இருக்கிற மாதிரி காமிச்சாதான் வியாபாரிங்க காசு பார்க்க முடியும்!’,
‘இவ்ளோ பெரிய நாட்ல குளிக்க ஷாம்புவும் குடிக்க கோலாவும் நாமளே தயாரிச்சுக்க முடியாதா?’ - உலகமயமாக்கலின் சுரண்டல் பக்கங்களை 'காம்ரேட்' பார்வையுடன் காரசார வசனங்களாக்கி இருக்கிறார் எஸ்.பி.ஜனநாதன் (படத்தின் இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் இவரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவரே!).

ஃபைனல் பன்ச் : கிரிக்கெட்டை வணிகமாக்கும் ஐ.பி.எல் அலப்பறைகள், தினசரி நுகர்வு பொருட்களை அந்நிய வியாபாரிகள் கையில் கொடுக்கும் அரசியல் வியூகங்கள், சேனல் ரியாலிட்டி ஷோக்களின் கல்லா கட்டும் களேபரங்கள்... இந்த அனைத்து சூதுகளையும் பாக்சிங் எனும் கமர்ஷியல் களத்தில் வைத்து அழுத்தமாக மனதில் விதைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் கல்யாண கிருஷ்ணன். அதிலும் உலகமய வணிகத்தை உள்ளூர் சேரி மக்களின் பின்னணி கொண்டு சொல்லியதில்.... இன்னும் ஈர்க்கிறார் இயக்குநர்!

வணிக நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் லாபவெறியர்களின் முகத்தில் நாக்-அவுட் குத்து விட்டிருக்கிறான் பூலோகம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement