Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குழந்தைங்க கெட்ட வார்த்தை பேசுறதில்லை... கேட்ட வார்த்தையைத்தான் பேசுறாங்க! பசங்க 2 - விமர்சனம்!

ஏ.டி.ஹெச்.டி. என்று சுருக்கமாகச் சொல்லப்படும் அட்டென்ஷன் டெபிஷிட் ஹைபர்ஆக்டிவிட்டி டிஸ்ஆர்டர் என்கிற குழந்தைகளின் குறைபாட்டை பின்னணியாகக் கொண்டு இப்போதைய கல்வி முறை, பகட்டான நகரவாழ்வுக்கு ஆசைப்பட்டு இயல்பு வாழ்க்கையைத் தொலைத்தவர்களின் நிலை, குழந்தைவளர்ப்பு முறை என பல விஷயங்களை நெஞ்சில் தைக்கிற மாதிரி சொல்லியிருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.

முனீஸ்காந்த் வித்யா, கார்த்திக் குமார் பிந்துமாதவி ஆகிய தம்பதியினருக்கு ஒரே சமயத்தில் குழந்தை பிறக்கிறது. அதற்கும் முன்னும் பின்னுமான சம்பவங்களின் உணர்ச்சிக் கோர்வைதான் படம். வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஆறுமாதம் ஆகும்போதே பள்ளிக்கூடத்தில் சேர்க்க விண்ணப்பம் வாங்குவது, நிறைமாதமான பிறகு, உங்கள் குழந்தை என்னவாக வரவேண்டும்? என்கிற மருத்துவரின் கேள்விக்கு உடனடி அவசர விவாதத்துக்குப் பின் டாக்டர் என்று பதில் சொல்கிறார்கள். உடனே அருகிலிருக்கும் சோதிடர் இந்தத் தேதியில் இத்தனை மணிக்கு அறுவைசிக்கிச்சை செய்து குழந்தைப்பிறப்பு வைத்தால் அது நடக்கும் என்று சொல்ல, அவர் சொன்ன நேரத்தில் பிரசவம் நடக்கிறது.  

இப்படி வளரும் குழந்தைகள் மிகவும் சுட்டிகளாக இருக்கின்றன. வருடத்திற்கொரு பள்ளி மாறவேண்டியிருக்கிறது. வீடும் மாறவேண்டியிருக்கிறது. வீட்டிலும் அவர்களால் பல தொல்லைகள். இதனால் மனம் வெறுத்த அத்தம்பதியினர் குழந்தைகளை விடுதியில் சேர்க்கிறார்கள்.

அதன்பின் அவர்களுக்கு இதுதான் சிக்கல் என்பதை மருத்துவர் தமிழ்நாடனாக நடித்திருக்கும் சூர்யா கண்டுபிடித்துச் சொன்னபிறகு நடக்கும் விசயங்களே கதை.

முனிஸ்காந்த் வித்யா தம்பதியின் மகனாக நடித்திருக்கும் நிஷேஷூம், கார்த்திக்குமார் பிந்துமாதவி தம்பதின் மகளாக நடித்திருக்கும் வைஷ்ணவி ஆகிய இருவரும் போட்டிபோட்டு நடித்து மனதைக் கவருகிறார்கள். விடுதியில் அவர்களை விட்டுவிட்டுப்போனதும் அவர்களுடைய தவிப்பு... உருக்கம்!  

சென்னைப் பெருநநகரத்து உயர்நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த அவர்கள், குழந்தை பிறப்பு முதல் வளர்க்கிற வரை எப்படியெல்லாம் நடந்துகொள்கிறார்கள் என்பதை அவர்களுக்கே தெரியாமல் பின்தொடர்ந்து சென்று எடுத்தது போலக் காட்சிகள் அமைத்திருக்கிறார்கள்.

இரண்டு தம்பதிகளை வைத்துக்கொண்டு உயர்நடுத்தரமக்களின் அன்றாட நடைமுறை, அவர்களின் ஆசை ஆகியனவற்றை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். முனீஸ்காந்துக்கு இருக்கும் பணக்காரவியாதி அவ்வப்போது வாய்விட்டுச் சிரிக்கவைக்கப் பயன்படுகிறது.

 

சூர்யா, அமலா பால் என்ற ஸ்டார் கேஸ்டிங்கை வீணாக்காமல் நல்ல மெசேஜ் சொல்ல பயன்படுத்தியிருக்கிறார்கள். முஷ்டியை முறுக்கும் ஆக்க்ஷன் ஹீரோவாக அசத்துவது சூர்யாவுக்கு கை வந்த கலை. ஆனால், இந்தப் படத்தில் குழந்தைகளைக் குதூகலப்படுத்தும் ஜாலி மருத்துவராகவும் ஸ்கோர் செய்திருக்கிறார். குழந்தைகளின் சுட்டித்தனத்தை ரசித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் கதைக்குள் அவர் வந்தாலும் அந்த ரசனை குறையாமல் பார்த்துக் கொள்கிறார். 

இயக்குநர்கள் சமுத்திரக்கனி, ஆர்.வி.உதயகுமார், ராமகிருஷ்ணன், இசையைமப்பாளர் சிற்பி, இமான் அண்ணாச்சி, நமோநாராயணா உட்பட பல கௌரவத் தோற்றங்கள். சமுத்திரக்கனி தன்னுடைய குழந்தையைப் பள்ளிக்குக் கூட்டிப்போகும் நேரத்தில், குழந்தையின் ஆசிரியர் தனியார் பள்ளியில் தன் குழந்தையைச் சேர்க்க விண்ணப்பம் வாங்க நெடிய வரிசையில் காத்திருக்கும் காட்சியும் அப்போது அரசுவேலைகளில் இருப்பவர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளிகளிலேயே சேர்க்கவேண்டும் என்று அரசாணை வரவேண்டும் என்று சொல்லும்போதும் அப்ளாஸ் அள்ளுகிறது.

குழந்தைகள் கெட்டவார்த்தை பேசுவதில்லை கேட்டவார்த்தையைத்தான் பேசுகிறார்கள், மதிப்பெண்களை விதைக்காதீர்கள் மதிப்பான எண்ணங்களை விதையுங்கள் உள்ளிட்ட பல வசனங்கள் சாட்டையடி!
அமலா பாலை வைத்து தனியார் பள்ளிகளின் எண்ணம் மற்றும் செயல்பாடுகளை நறுக் சுருக்காகச் சொல்லியிருக்கிறார்கள். கடைசியில் நடக்கும் அனைத்துப் பள்ளி மாணவர்கள் போட்டியில் இந்தக்குழந்தைகள் பங்கெடுக்க அவர்களே வெற்றிபெறுகிறார்கள் என்று காட்சி வைக்காமல் வித்தியாசமாக வைத்து பாராட்டைப் பெறுகிறார் பாண்டிராஜ்.

இசையமைப்பாளர் அரோவ்கெரோலி, ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோரின் பங்களிப்பு படத்துக்குப் பலம்.

குழந்தைகள் சாலையில் ஆம்புலன்ஸ் போகும்போது அப்படியே நின்று அவர்களுக்காகக் கண்களை மூடிப் பிரார்த்தனை செய்யும் காட்சிகளில் சிலிர்க்கவைக்கிறார்கள். அப்படியான சிலிர்ப்பு அத்தியாங்கள் படம் நெடுக இருக்கின்றன.

பசங்க-2... இது குழந்தைகள் படமென்று சொல்வதைக் காட்டிலும், இது பெற்றோருக்கான பாடம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement