வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (02/01/2016)

கடைசி தொடர்பு:13:01 (02/01/2016)

டைட்டானிக் நாயகனின் அதிரவைக்கும் “தி ரெவனன்ட்” - திரை அலசல்

திரைப்படங்கள் பார்வையாளர்களை இந்த உலகிலிருந்து இன்னொரு உலகிற்கு அழைத்துச் சென்று வியப்பில் ஆழ்த்த வேண்டும்,படத்தைப் பார்க்கிற அந்த இரண்டுமணிநேரமும் நம் எல்லாக் கவலைகளையும் துயரங்களையும் மறந்து படத்திலேயே நம்மை மூழ்கடிக்க வேண்டும்.

குறிப்பாக,தனிமையிலிருப்பவர்களையும்,வாழ்க்கை தருகிற வெறுமையிலிருப்பவர்களையும் கூட விடுதலை அடையச் செய்து கதையுடன் ஒன்றிணைக்க வேண்டும், திரைப்படங்கள் நகரும் காட்சிகளாக மட்டுமில்லாமல் பார்வையாளனுக்கு ஒரு அனுபவமாக மாற வேண்டும். இந்த மாதிரி நம்மை மறந்து பார்க்கிற ஒரு அனுபவத்தை தருகிறது டைட்டானிக் ஹீரோ லியோனார்டோ டிகாப்ரியோ நடித்திருக்கும் "தி ரெவனன்ட்" . இந்தத் திரைப்படம் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து மைக்கேல் புன்கே என்பவரால் எழுதப்பட்ட நாவலைத் தழுவி உருவாகியிருக்கிறது.

ரெவனன்ட் என்றால் மரணத்தின் விளிம்பில் இருந்து மீண்டு வந்தவன் என்று பொருள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கதை நிகழ்கிறது. அமெரிக்காவின் அடர்ந்த காட்டுக்குள் மிருகங்களின் தோல்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்கக் குழுவை அந்தக் காட்டுக்குள் வாழ்கின்ற பழங்குடி மனிதர்கள் தாக்குகின்றனர். அந்தத் தாக்குதலில் இருந்து தப்பித்துச் செல்லும் சிலர் காட்டுக்குள் தஞ்சமடைகின்றனர். அந்தக் குழுவில் இருக்கும் ஹியூ கிளாஸ் எதிர்பாராத விதமாக கரடியின் பிடியில் சிக்கி மயிரிழையில் உயிர் பிழைக்கிறான், இதற்கிடையில் கிளாஸின் மகன் கொல்லப்படுகிறான் . கிளாஸ் பல போராட்டங்களுக்குப் பிறகு தன் மகனைக் கொன்றவனை தேடிப்போய்,  பழிவாங்குவது தான் படத்தின் கதை .

மகனைக் கொன்றவனை தந்தை பழிவாங்கும் பல கதைகளை நாம் பார்த்திருப்போம்.  இதே அரதப் பழசான கதையை வைத்துக் கொண்டு படத்தின் இயக்குனரான அலெஜான்ட்ரோ கான்சல்ஸ் இனாரிட்டும், ஒளிப்பதிவாளரான இம்மானுவேல் லூப்ஸ்கியும் திரையில் நிகழ்த்தியிருக்கிற மேஜிக் படம் பார்க்கிற ஒவ்வொருவரையும் பிரமிக்க வைக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது

முக்கியமாக கிளாஸாக நடித்திருக்கும் என்று சொல்வதை விட வாழ்ந்திருக்கும் லியோனார்டோ டிகாப்ரியோவிக்கு இந்த ஆண்டுக்கான சிறந்த நடிப்புக்கான ஆஸ்கர் விருது கிடைப்பது நிச்சயம். கரடியின் பிடியில் இருந்து தப்பித்து உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் இடங்களிலும், மகனை இழந்த துயரத்தை வெளிப்படுத்தும் இடத்திலும், பல நாட்கள் பசியோடு போராடி கிடைத்ததை உண்ணும் இடத்திலும் , குளிரில் இருந்து தப்பிக்க குதிரையின் வயிறைக் கிழித்து பதுங்கிக் கொள்ளும் காட்சியிலும் , தன் குடும்பத்தின் நினைவு வந்துபோகும் இடங்களிலும் இறுதியில் மகனைக் கொன்றவனுடன் சண்டை போடும் இடத்திலும் டிகாப்ரியோ பட்டையை கிளப்பியிருக்கிறார். தி ஏவியேட்டர், பிளட் டைமன்ட், தி வூல்ப் ஆஃப் வால்ஸ்டீரிட் போன்ற படங்களில் சிறப்பாக நடித்ததற்காக கிடைக்க வேண்டிய விருதை தவற விட்டிருந்தாலும் இந்தப் படத்துக்காக நிச்சயம் அவருக்கு ஆஸ்கர் கிடைக்கும் .

லூப்ஸ்கி இயற்கை வெளிச்சத்திலேயே பெரும்பாலான காட்சிகளை படமாக்கியிருக்கிறார். லூப்ஸ்கியின் கேமிராவால் படமாக்கப்பட்ட கிளாஸின் வாழ்க்கையை திரையில் பார்ப்பதைப் போல் இல்லாமல் கிளாஸின் அருகில் இருந்து அவனின் ஒவ்வொரு நகர்வையும் பார்ப்பதைப் போன்ற உணர்வைப் பெறுகிறோம். சூர்ய வெளிச்சத்தில் மிளிரும் அடர்ந்த காடுகளை , பனி மலைகளை, அங்கங்கே ஓடும் நீரோடைகளை தத்ரூபமாக படமாக்கியிருக்கிறார் லூப்ஸ்கி, காட்டின் இரவு நேரத்தை பதிவு செய்திருப்பது சிறப்பானது. போன வருடம் பேர்டுமேன் படதுக்காகவும், அதற்கு முந்தைய வருடம் கிரேவிட்டி படத்துக்காகவும் சிறந்த ஒளிப்பதிவுக்கான ஆஸ்கர் விருதைப் பெற்ற லூப்ஸ்கி தொடர்ந்து மூன்றாவது முறையாக ரெவனன்ட் படத்துக்காகவும் சிறந்த ஒளிப்பதிவுக்கான ஆஸ்கர் விருதைப் பெறுவது உறுதி.

படத்தில் பின்னணியாக வரும் இசை பல இடங்களில்  சிலிர்க்க வைக்கிறது. இந்த ஆண்டுக்கான சிறந்த படம், சிறந்த நடிப்பு , சிறந்த இயக்குனர், சிறந்த இசை என்ற நான்கு பிரிவுகளில் கோல்டன் குளோப் விருதுக்காக தி ரெவனன்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கிளாஸ் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் தருணத்தில் மகன் ஹாக் , கிளாஸிடம் வலிமையான வேர்களைக் கொண்ட மரத்தை காற்றினால் வீழ்த்த முடியாது என்று சொல்வான். ஆம் இந்தப் படம் வலிமையான மன உறுதியுடன் இருந்தால் எவ்வளவு பெரிய ஆபத்துகளையும் எதிர் கொண்டு அதிலிருந்து மீண்டு வந்துவிடலாம் என்ற நம்பிக்கையைத் தருகிறது.

படத்தின் இயக்குனரான இனாரிட்டுக்கு கடந்த வருடம் பேர்டுமேன் படத்துக்காக மூன்று ஆஸ்கர் விருதுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

சக்திவேல்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்