Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரஜினிமுருகன் எதை காப்பாற்றுகிறான் தெரியுமா? ரஜினிமுருகன் விமர்சனம்!

மதுரைக்காரங்க வெட்டு குத்து கொலை என்று அலைந்துகொண்டேயிருக்கிறவர்கள் என்கிற தமிழ்த்திரையுலகின் கற்பிதத்தை உடைக்க வேண்டுமென்பதற்காகவே சிரிக்கச் சிரிக்கப் படமெடுத்து அதில் சிந்திக்க வைக்கும் சில விசயங்களையும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பொன்ராம்.

எல்லாப்படங்களிலும் பிறக்கிற குழந்தைக்கு அப்பா அம்மா பேர் வைப்பார்கள் என்றால் இந்தப்படத்தில் தீவிர ரஜினிரசிகரான அப்பாவின் நண்பர் கதாநாயகனுக்கு ரஜினிமுருகன் என்று பெயர் வைக்கிறார். நாயகன் சிவகார்த்திகேயனின் அப்பா பள்ளித்தலைமையாசிரியர், அம்மா அதே பள்ளியில் ஆசிரியர், அவருடைய அண்ணன்கள் இருவர், ஒருவர் மென்பொருள்துறையிலும் இன்னொருவர் இராணுவத்திலும் இருக்கிறார்கள். அப்பாவின் உடன்பிறந்த அண்ணன் தம்பி தங்கைகள் எல்லாம் வெளிநாடுகளில் செட்டில் ஆகியிருக்கின்றனர். எல்லா வகையிலும் வசதியான குடும்பத்தில் வேலைவெட்டியில்லாமல் சுற்றுக்கொண்டிருக்கும் ஒரேநபர் சிவகார்த்திகேயன். அவருக்கு இருக்கும் ஒரேவேலை பாரம்பரியவீட்டில் தனியாளாக இருக்கும் ராஜ்கிரணுக்கு மூன்றுவேளை உணவு கொடுப்பதும் அவருக்குத் தேவையான விசயங்களைச் செய்துகொடுப்பதும் தான். கூடவே கதாநாயகி கீர்த்திசுரேஷைப் பின்தொடருவதும்.

இப்படியே போய்க்கொண்டிருந்தால் போதாது என்பதை உணர்ந்து அதற்குள் குடும்பசென்டிமெண்டை அளவாகக் கலந்திருக்கிறார். மதுரை மண்ணுக்குரிய ஒரு பங்காளியையும் திரைக்கதைக்குள் வைத்திருக்கிறார். இந்த பொழுதுபோக்கு கதையை வைத்துக்கொண்டு இன்றைய நாகரிக சமுதாயத்துக்குச் சொல்ல வேண்டிய கருத்துகளையும் கருத்தென்று தெரியாமல் சொல்லியிருக்கிறார்கள்.

சிவகார்த்தியேன் சூரி ஆகியோருக்கு முந்தைய படங்களுக்குச் சற்றும் குறைவில்லாமல் சேட்டை செய்யும் வேடம். உடல்மொழியிலும் வசன உச்சரிப்பிலும் அந்தக் கேரக்டர்களுக்கு உயிர்கொடுத்து அடித்து ஆடியிருக்கிறார்கள். அவர் மாதிரியே இருக்கும் சூரியும் அவரும் சேர்ந்துகொண்டு கொடுக்கும் அலப்பறைகள் வாய்விட்டுச் சிரிக்கவைக்கின்றன. அடுத்த ஆறுமாசத்துல ஆடிகார்ல போவீங்கன்னு சோசியக்காரர் சொன்னவுடன் ஆடிகார் புக் பண்ண ஷோரூமுக்குப் போவதும் அங்கு சேல்கேர்ளாக இருக்கும் நாயகி கீர்த்திசுரேஷையும் காரையும் ஒப்பிட்டு கலாய்ப்பது, நாயகியின் வீட்டுக்கெதிராகவே ரஜினிமுருகன் டீஸ்டால் என்று போடுவது, அந்த டீஷாப் குப்புறக்கவிழ்வது உட்பட படம் முழுக்க அதகளம் செய்திருக்கிறார்கள்.

சூரியின் அப்பா அவர் அடிக்கடி ஏதாவதொரு பேர் சொல்லி உறவினர்கள் நண்பர்களிடம் மொய்வசூலிக்கும் தந்திரம், இவர்களே ரியல்எஸ்டேட் தொழிலில் இறங்குவது உள்ளிட்ட விசயங்களும் போரடிக்காமல் படத்துக்குப் பலம் சேர்த்திருக்கின்றன. தாத்தாவின் பூர்வீக வீட்டை விற்றுச் செட்டில் ஆகலாம் என்று நினைத்து வேலையைத் தொடங்கும்போது பேரன் என்கிற பெயரில் வருகிற ஏழரைமூக்கன் சமுத்திரக்கனி, படத்தை ஆக்ஷன் மோடுக்குக் கொண்டுபோய்விடுவாரோ என்று அச்சப்பட வைக்கிறார். அதற்கான வாய்ப்புகள் நிறைய இருந்தாலும் அவற்றைப் பயன்படுத்தாமல் விட்டதே படக்குழுவினரின் புத்திசாலித்தனம்.

ஊரே மெச்ச வாழும் ஒரு பெருந்தகை ராஜ்கிரண், நாட்டையே கூட்டி ஒரு பொய் சொல்வது பொருத்தமா? என்கிற கேள்வியை நான் செத்தா, நீங்கள்ளால் வந்து பார்ப்பீங்க, நான் உங்களை எப்பப் பார்க்கறது, உங்க புள்ளங்களைப் பார்க்காம உங்களால் ஒருநாள் கூட இருக்க முடியலைங்கிறபோது நான் மட்டும் என் புள்ளங்களப் பாக்காம எப்படி இருக்கிறது? என்று கண்ணீர்மல்க ராஜ்கிரண் பேசும் வசனம் அந்த எதார்த்த மீறலைக் காணாமல் அடித்துவிடுகிறது. கடைசியாக பஞ்சாயத்தில் எனக்கு இன்னொரு பேரன் இருக்கான் என்று சொல்லி தன் முன்கதையை உணர்ச்சி கொந்தளிக்கச் சொல்லி தான் ஒரு நடிப்புஅரக்கன் என்பதை மீண்டும் நிறுவியிருக்கிறார் ராஜ்கிரண்.

நாயகி கீர்த்திசுரேஷ், சிவகார்த்திகேயனுக்கு ஈடுகொடுத்திருக்கிறார். சில காட்சிகளில் அழகாகவும் சில காட்சிகளில் பேரழகாகவும் இருக்கிறார். அவருடைய அப்பாவாக நடித்திருக்கும் தீவிர ரஜினிரசிகர் அச்சுதகுமாரை டெரர் என்று சொன்னாலும் அவர் வரும் காட்சிகள் அதிகச் சிரிப்பூட்டுகின்றன.

ஏழரை மூக்கனாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி, தனக்குக் கொடுக்கப்பட்ட வேடத்துக்கு மிகப்பொருத்தமாக நடித்து நற்பெயர் பெறுகிறார். ஒருஇலட்சம் பணத்தை வாங்கிக்கொண்டு அவர் நடக்கும் நடை நாடோடிகள் நமோநாரயணனுக்குச் சவால் விடுகிற மாதிரி அமைந்திருக்கிறது.

கடைசிக்காட்சியில் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு இன்பஅதிர்ச்சியூட்டியிருக்கிறார்கள். பழங்கால வீடுகளைப் பாதுகாக்கவேண்டும் என்கிற கருத்தைச் சொல்லி வருத்தப்படாதவாலிபர் இந்தப்படத்தில் இன்னும் உயர்ந்திருக்கிறார்.

இமானின் இசையில் பாடல்கள் எல்லாமே படத்துக்குப் பலமாக அமைந்திருக்கின்றன. பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு காட்சிகளை வண்ணமயமாக்கியிருக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் சொத்து வைத்திருக்கிறவர்களுக்கு ஏற்படுகிற சிக்கல்களோடு மதுரை சுற்றுவட்டாரத்திலுள்ள ஊர்ப்பஞ்சாயத்துகள் பற்றிய விசயங்களைக் காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் பொன்ராம் பழையவீடுகளைப் பழையதாகப் பார்க்காமல் பொக்கிஷமாகப் பாருங்கள் என்றும் சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்