Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருநங்கையாக மாறும் கணவன்...தவிக்கும் மனைவி - தி டேனிஷ் கேர்ள் படம் எப்படி!

திருநங்கைகள் தங்களது வாழ்வை தைரியமாக எதிர்கொள்ள முன்னோடியாக விளங்கிய லில்லி எல்பியின் வாழ்க்கை வரலாற்றுப் படமே ’தி டேனிஷ் கேர்ள்’!

டேனிஷ் நாட்டின் புகழ்பெற்ற ஓவியக் கலைஞர்களும் தம்பதிகளுமாக எய்னர் விகினர்,மற்றும் ஜெர்டா விகினர். இருவருக்குள்ளும் கணவன் மனைவியாக அப்படி ஒரு நெருக்கம். ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக நேசிக்கிறார்கள். இந்த வேளையில் தான் இவர்களின் திருமண வாழ்வில் புயல் வீசத் துவங்குகிறது. தனது மாடல் ஒருவர் வாராமல் போகவே தனது கணவனையே பெண்ணாக போஸ் கொடுக்க வைக்கிறார் ஜெர்டா. அந்த உடை எய்னருக்கு பிடித்துப் போகிறது.

எய்னரின் நடை உடை பாவனை என அனைத்தும் மாற ஆரம்பிக்கிறது. தன் மனைவியின் உடைகள், வீட்டிற்கு வரும் மாடல் என பெண்களின் உடைகள் மீது அவரை அறியாமலேயே அப்படி ஒரு ஏக்கம்.  பிரச்னை இன்னும் தீவிரமாகி இரவு கணவனின் உடையைக் கழற்றும் ஜெர்டாவுக்கு அதிர்ச்சி. உள்ளே அவளின் இரவு உடை. மனைவிக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரிய அவளது வாழ்க்கை நரகம் ஆகிறது. ஒவ்வொரு நாளும் பெண்ணாக மாறும் கணவனை நினைத்து சோகமே உருவாக மாற கணவனோ நீ உன் வாழ்வை தேர்ந்தெடுக்க வேண்டும். தன்னால் இனி ஆணாக இருப்பது கடினம் எனக் கூறி விட்டு பெண்ணாக மாறுவதற்கான சிகிச்சைக்குத் தயாராக சிகிச்சையின் வீரியத்தை தாங்க முடியாது லில்லியாக மாறிய எய்னர் இறந்து விடுகிறாள்.

ஆண் பெண்ணாக மாறுவதற்காக சிகிச்சை செய்து கொண்டு, சிகிச்சையின் வீரியம் தாங்க முடியாது இறந்து போன முதல் திருநங்கையாக அறியப்படும் லில்லி எல்பேவின் பயோகிராபி கதையே  ‘தி டேனிஷ் கேர்ள்’.

ஆஸ்கர் விருது பெற்ற எட்டி ரெட்மெய்னி நடிப்பைப் பற்றி சொல்ல வேண்டுமா என்ன?.. எய்னர் ஜெர்டாவாக மனைவியிடம் அன்பு காட்டுவது, லில்லியாக மாறி பெண்ணுக்குரிய கை கால்கள் அசைவு, கண்களின் பார்வை, ஏன் மூச்சு விட்டு நிதானமாக மென் புன்னகை கொடுப்பது என நடிப்பில் அவ்வளவு தத்ரூபம். நடை, உடை, நளினம் என நடிப்பில் நம்மை கிறங்கடிக்கிறார்.

"நீ எனக்கு அமைதியை தந்து விட்டாய், நான் உனக்கு அளவு கடந்த சக்தியை கொடுத்துவிட்டேன் என மருத்துவமனையில் மனைவியிடம் பேசும்போதும், ”நான் முழுமையான லில்லியாக வெளியே போக வேண்டும் என்னை அழைத்துப் போ’ எனக் கூறிவிட்டு கடைசிக் காற்றை சுவாசித்து விட்டு மெல்ல அடங்குவதும் என எட்டிக்கு இந்த வருடமும் ஆஸ்கர் ஒதுக்கியாக வேண்டும் என்றே கூறலாம்.

மனைவி ஜெர்டா வெஜினராக அலிசியா விகாந்தர். கொஞ்சம் கொஞ்சமாக தன் கணவனை இழந்து துடிப்பதும்,தன் வாழ்க்கை என்னவாகப் போகிறது என்று தவிப்பதும் ‘இதை நிறுத்த வேண்டும், எனக்கு என் கணவன் வேண்டும்’ என அழும் காட்சிகளிலும் நம்மையறியாமல் கண்கள் குளமாகிறது. தன் கணவனின் செய்கை நினைத்து அழுவதா, கோபப்படுவதா, இல்லை பரிதாபப்படுவதா எனத் தெரியாமல் அமைதியாக சிகரெட் பிடிக்கும் காட்சிகள் அப்ளாஸ் ரகம்.

ஆக்‌ஷன் ஆர்ப்பாட்டம், பிரம்மாண்ட செட்டுகள் இல்லையென்றாலும் 1920களின் வாழ்க்கை, உடைகள், என பீரியட் கதைக்கான அம்சங்கள் பல இடங்களில் நம் கண்களை ஈர்க்கின்றன.

பயோகிராபிக் கதைகள் என்றாலே கொஞ்சம் சவாலான விஷயமே.அதிலும் நாவலாக வெளியான வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுப்பது இன்னும் கொஞ்சம் சிரமமே. எனினும் இயக்குநர் காட்சிக்குக் காட்சி நம்மை சீட்டில் கட்டிப் போடுகிறார் டாம் ஹூப்பர். திருநங்கை என்பது அவமானம் அல்ல, அது ஒரு முழுமை, அவர்களுக்கும் உணர்வுகள், வாழ்வின் முக்கியத்துவங்கள் இருக்கின்றன என்பதையும் இயக்குநர் உணர்த்தத் தவறவில்லை.

நம் வாழ்வை நமக்கு பிடித்தாற் போல் வாழ எந்த கடின முயற்சியும் செய்யலாம் என மறைமுக பாடம் கற்பிக்கிறாள் ‘தி டேனிஷ் கேர்ள்’.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்